Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழறிஞர்களை கனிவுடன் கவனியுங்கள்- கனிமொழி உருக்கம்.

சினிமா பாடலாசிரியர்கள் பா.விஜய், வாலி, வைரமுத்து, போன்ற கருணாநிதியின் நிலையக் கலைஞர்களும் தேவர் சாதித் தலைவர் சிறிதர் வாண்டையார், ஜெகத்ரட்சகன், கே.வி. தங்கபாலு, போன்ற அரசியல்வாதிகளும் செம்மொழி மாநாட்டில் தமிழ் மொழியில் எதிர்காலம் குறித்து வீர உரையாற்ற இருக்கிறார்கள். இந்த தமிழ் ஜலதரங்க நிக்ழ்வில் பக்கவாத்தியக் கலைஞர்களாக வெகுசில மூத்த தமிழறிஞர்களையும் கருணாநிதி பாவம் பார்த்து சேர்த்துக் கொண்டிருக்கிறார். நடிகர் நடிகைகளின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கிறது. ஒட்டு மொத்த மாநாடும் கருணாநிதியைச் சுற்றியே வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில் மாநாட்டுக்கு வரும் பக்கவாத்தியக் கலைஞர்களை கவனிப்பது தொடர்பாக அட்வைஸ் ஒன்றை கருணாநிதியின் மகளும் கவிஞரும், எம்பியுமான கனிமொழி உதிர்த்தார். அந்த தத்துவம் இதோ, செம்மொழி மாநாட்டுக்கு வரும் ஆய்வாளர்கள், தமிழ் அறிஞர்களை உபசரிக்க சுமார் 6 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நெறிமுறைப் பயிற்சி வகுப்பு கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற கனிமொழி மாநாட்டின் மைய நோக்கப்பாடல் சி.டி.யை வெளியிட்டு (படம்) பேசியது: தன்னார்வலர்களாகப் பணியாற்றும் மாணவ, மாணவிகள் மாநாட்டுக்கு வரும் ஆய்வாளர்கள், பேராளர்களிடம் அன்பாகவும், பண்பாகவும் நடந்துகொள்ள வேண்டும். சென்னை தமிழ் கரடு முரடானது. ஆனால், கோவை தமிழ் மென்மையானது. எனவே, உபசரிக்கும்போது புன்னகையுடன் இருந்தால் அழகாக இருக்கும். கட்டுரையாளர்கள், ஆய்வாளர்கள் மாநாட்டுக்கு வரும்போது சற்று பதற்றத்துடன் வருவார்கள். தங்களுடைய ஆய்வுக்கட்டுரையை அறிஞர்களிடம் வரவேற்பை பெறுமா என்ற எதிர்பார்ப்பு மனதுக்குள் இருக்கும்போது இந்த பதற்றம் ஏற்படும். எனவே, ஆய்வாளர்களிடம் மாணவர்கள் அனுசரனையுடன் நடந்துகொள்ள வேண்டும். ஆய்வாளர்கள் கடுமையான பேசினாலும் பொருத்துக்கொள்ள வேண்டும். உணவு, மருத்துவ வசதி உள்ளிட்டவை எங்கு கிடைக்கும் என்பதையும், மாநாடு நிகழ்ச்சிகள் தொடர்பான விஷயங்களையும் மாணவர்கள் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தப்பின் நடக்கும் முதல் மாநாடு இது. எனவே, இம் மாநாட்டில் பங்கேற்பதில் தமிழர்கள் பெருமைப்பட வேண்டும். முதல் மாநாட்டில் பங்கேற்பதை பெருமையாக கருதுகிறேன். கல்லூரிப் பருவத்தில் மாணவர்களுக்கு இதுபோன்ற உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பு கிடைப்பது மிகப்பெரிய பாக்கியம் என்றார். மாநாட்டின் மைய நோக்கப் பாடலை கனிமொழி எம்.பி. வெளியிட, அதை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி.சுவாமிநாதன் பெற்றுக்கொண்டார். பல்கலைக்கழகப் பதிவாளர் திருமால்வளவன், தமிழ்த்துறை தலைவர் சி.மா.ரவிச்சந்திரன், பல்கலைக்கழக மேலாண்மைத்துறை இயக்குநர் இரா.வேங்கடபதி உள்பட பலர் பங்கேற்றனர்.

Exit mobile version