பிளவுபடாத இலங்கையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொரளையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் அனைத்து இன சமூகங்களும் சம உரிமைகளுடன் வாழக்கூடிய நிலைமை உருவாக்கப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கைப்பற்றப்பட்ட காணிகள் உரிமையாளர்களிடம் உரிய முறையில் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் மோசடிகளுக்கு எதிரான பிரிவிற்கு முழு சட்ட ரீதியான அந்தஸ்து வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் கூடுதல் விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொள்ள உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி தனித்து போட்டியிட உத்தேசித்திருந்தது எனவும், ஊழல் மோசடி மிக்க அரசாங்கத்தை தோற்கடிக்க ஐக்கிய தேசியக் கட்சி விரிவான கூட்டணி ஒன்றை அமைத்துக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் வெற்றியீட்டினால் ஐக்கிய தேசிய முன்னணி, ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.