2009- ஈழப்போரின் முடிவுக்குப் பின்னர் நாம் தமிழர் என்ற கட்சியை துவங்கிய சீமான் தன் பேச்சுக்களால் தமிழக இளைஞர்களிடம் கேலிப்பொருளாக மாறியுள்ளார்.
2011-ஆம் ஆண்டு கட்சி துவங்கிய சீமான் முதல் தேர்தலில் போட்டியிடவில்லை. அதிமுகவை ஆதரித்தார். முழுமையாக இந்த தேர்தலில்தான் களமிரங்கியுள்ளார். ஒவ்வொரு தொகுதிகளிலும் சில நூறு முதல் ஆயிரக்கணக்கான இளையோரை கவர்ந்து வைத்துள்ள சீமானின் பலம் அந்த இளைஞர்கள்தான்.
தமிழ் தமிழ் இனம் என்று உணர்வூட்டப்பட்ட இந்த இளைஞர்கள் ஒரு கற்பனையான உலகிற்குள் வாழ்கிறார்கள். மனித குலம் தனது முந்தைய வாழ்வை தொலைத்தே முன்னேறி வந்திருக்கிறது. ஆப்ரிக்காவில் இருந்து உலகின் பல இடங்களுக்கும் குடியேறிய மனிதன் தன் மிக நீண்ட பயணத்தில் தன் கடந்த கால வாழ்வை தொலைத்தும் கைவிட்டும் புதிய புதிய நாகரீங்களைப் படைத்துமே இந்த உலக ஒழுங்கை உருவாக்கினான். இதில் எப்போதும் உணவுக்கான போராட்டம் இருந்துள்ளது. இந்த போராட்டத்தை ஒருவன் வன்முறை என்று கூட சொல்ல முடியும். அரசுகள் தோற்றம் பெற்ற பின்னரே வன்முறை சட்ட பூர்வமானது. சூரியன் மறையக்கூடாது என்று போராடிய அதே மனிதனின் சந்ததிகள்தான் சூரியக் குடும்பம் பற்றிய அறிவியல் கோட்பாட்டை உலகிற்கு கொடையாக வழங்கினார். நாம் கடந்த கால வாழ்வுக்கு நாம் தொலைத்த கடந்த கால வாழ்வுக்கு திரும்பிச் செல்ல முடியாது. நமக்கு பல்லாயிரம் ஆண்டுகால வரலாறு இருப்பது போல லட்சக்கணக்கான வரலாறுள்ள மனிதனும் இருக்கிறான். எவனும் தன் கடந்த காலத்திற்கு திரும்பிச் செல்ல முடியாது. காரணம் கடந்த காலம் என்பது நிகழ்காலத்தில் ஒரு கற்பனை.
அப்படி நாம் தொலைத்த ஒரு வாழ்வு பற்றிய ஒரு கனவும் ஏக்கமும் நமக்கு இருக்கும். அந்த ஏக்கத்தை தூண்டி விட்டு அதையே தேசியவாதமாக அறுவடை செய்வதுதான் நாம் தமிழர் சீமானின் அரசியல் கடந்த காலத்திற்கு கால வாழ்வுக்கு திரும்பிச் செல்ல முடியுமா என்றால் இல்லை. அது சாத்தியமில்லாத ஒன்று நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்றை உணர்ச்சிகரமாகப் பேசி அதை ஒரு கூட்டத்தை நம்பவைக்கிறார்.
சமீபத்தில் பிரச்சாரக் கூட்டங்களில் அவர் பேசும் போது பனை வெல்லத்தில் இருந்து கருப்பட்டி தயாரிப்பேன். பதநீரில் இருந்து கள் தயாரிப்பேன் பனை பேக்டரி உருவாக்குவேன் என்று பேசுகிறார். ஏற்கனவே பனை வெல்லத்தில் இருந்து கருப்பட்டி தயாரிக்கப்பட்டுதான் வருகிறது. அதையே தான் ஆட்சிக்கு வந்தால் செய்வதாகப் பேசுகிறார்.
அதே போன்று நெய்தல் படை அமைத்து சிங்களர்கள் மீது வெடிகுண்டு வீசுவேன் என்கிறார்.
அதை விட “சர்வாதிகாரத்தின் மூலமே தான் விரும்பிய ஆட்சியை செயல்படுத்த முடியும். என்று பேசிய சீமான் நான் முதல்வராக வந்தால் பிளாஸ்டிக் நாற்காலிகளை வீசி விட்டு மூங்கில் நாற்காலிகளை கொண்டு வருவேன். வீட்டை சுத்தம் செய்யும் மாப் ஸ்டிக்குகளை ஒழித்து விட்டு தென்னங்குச்சி துடைப்பத்தை வைத்துதான் வீடு சுத்தம் செய்ய வேண்டும் என சட்டம் கொண்டு வருவேன். நட்சத்திர விடுதிகளில் உள்ள எவர்சில்வர் பாத்திரங்களை எல்லாம் ஒழித்து விட்டு இயற்கையான மண்சட்டிகளை கட்டாயமாக்குவேன் என்று பேசினார்.
இதை தற்சார்பு பொருளாதாரம் என்று வேறு விளக்கமும் கொடுத்தார். உண்மையில் இவர்கள் இந்த உலகில்தான் வாழ்கிறார்களா அல்லது ஏலியன்கள் போல வேறு ஒரு உலகத்தில் வாழ்கிறார்களா என கேலி பேசுகிறார்கள்.
இந்த தேர்தலில் அதிமுகவை மறைமுகமாக ஆதரித்தும் சீமான் திமுகவை விமர்சித்தது போக எஞ்சிய நேரத்தில் இதையே பேசி கேலுக்குள்ளாகிறார். ஏராளமான புலம் பெயர் ஈழத்தமிழர்கள் இந்த பரப்புரைகளுக்குத்தான் பணம் அனுப்புகிறார்கள்.