பெருந்தொகையான மக்கள் போரில் கொல்லப்பட்ட பின்பு இலங்கயில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் தமிழர்கள் கூட்டம் கூட்டமாக இலங்கையில் இருந்து வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகளையும் பல் வேறு வழிகளில் இலங்கைக்கு திருப்பி அனுப்பும் முடிவை இந்தியாவின் மத்திய, மாநில அரசுகள் எடுத்து விட்டன. தாம் திருப்பி அனுப்பட்டால் இலங்கை அரசின் ஒடுக்குமுறைகளைச் சந்திக்க நேரிடும் என்று அஞ்சும் ஈழ அகதிகள் தமிழகத்தில் இருந்தும் தஞ்சம் தரும் நாடுகள் நோக்கி இடம் பெயரத் துவங்கியுள்ள நிலையில் – முகாம்களில் இருந்து கடல் வழியாக ஆஸ்திரேலியாவிற்கு தப்பிச்செல்வதாக எழுந்த புகாரை தொடர்ந்து, இலங்கை அகதிகளை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில், ஏராளமான இலங்கை தமிழர்கள் வசிக்கின்றனர். இலங்கையில் நடந்த இறுதிகட்ட போருக்கு பின், இலங்கை தமிழர்கள் அங்கு திரும்பி செல்வார்கள் என எதிர்பார்ப்பு நிலவியது. இலங்கையில் சூழல் சரியில்லாத நிலையில், அங்கு செல்ல இலங்கை தமிழர்கள் தயங்கமடைவதாகவும், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இலங்கை தமிழர்கள் அதிகளவில் வசிப்பதால், அகதிகள் இங்கிருந்து கடல் வழி தப்பி, அங்கு செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து, முகாம்களில் வசிப்போரை கண்காணித்து, அறிக்கை அனுப்ப வருவாய் துறை, கியூ பிரிவினருக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், முகாமில் இருந்து வெளியில் செல்வோர், மாலையில் திரும்பாவிட்டால், அவரை தொடர்பு கொண்டு விசாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
