தமிழக கோவில்களில் பெரும்பாலும் பிரமாணர்களே அர்ச்சகர்களாக இருக்கிறார்கள். எந்தெந்த கோவில்களில் எல்லாம் வருவாய் வருமோ அந்தக் கோவில்கள் அனைத்துமே பிரமாண அர்ச்சகர்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இந்த உரிமையை பரம்பரை பரம்பரையாக அனுபவித்து வருகிறார்கள். பிற சாதியினர் அர்ச்சகர்கள் ஆவதை பிரமாணர்கள் தடுத்து வந்தார்கள். இதில் பல நூறு கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் தொழில்.
தமிழக அரசு தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களில் அர்ச்சகர் பணியிடங்களுக்கு பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்த 24 பேர் உட்பட 58 பேரை கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி நியமித்தது தமிழ்நாடு அரசு.இவர்களில் 24 பேர், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தின் கீழ் இந்து அறநிலையத்துறை நடத்திய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயின்று, பணி வாய்ப்புக்காகக் காத்திருந்தவர்கள். இவர்களில் ஐந்து பேர் பட்டியல் சாதிகளைச் சேர்ந்தவர்கள்.
ஆகஸ்ட் 14ம் தேதி பணி ஆணைகள் வழங்கப்பட்ட நிலையில், இவர்கள் அனைவரும் சுதந்திர தினத்தன்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கோயில்களில் பணியேற்றுக் கொண்டனர். ஆனால் இவர்கள் பணிக்கு சேர்ந்தது கண்டு பிரமாணர்களும் பாஜகவினரும் ஆர்.எஸ்.எஸ் காரர்களும் அச்சமடைய கடந்த சில நாட்களாக கடுமையாக அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
பழைய புகைப்படங்களையும், வேறு மாநிலங்களில் அர்ச்சகர்களுக்கும் நடக்கும் மோதல் விடியோக்களையும் எடுத்து தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஓதுவார்கள் அர்ச்சகர்களை தாக்குவது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.
சில பிராமண பூசாரிகளோ ஓதுவார்களை எதிரிகள் என்றே பேசி விடியோ வெளியிட்டுள்ளார்கள். பாஜக தேசிய தலைவரான எச்.ராஜாவும், பாஜக தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணிய சுவாமியும் நீதிமன்றம் சென்று அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்திற்கு தடை வாங்கப் போவதாக அறிவித்துள்ளார்கள்.
இன்று சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் “அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை அவதூறுபரப்பி முடக்க நினைக்கிறார்கள்” என்று குற்றம் சுமத்தி பேசினார்.