கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் ஜெயலலிதாவின் கூற்றை வெளிப்படையாக மறுத்துப் பேசியதால், தோழர் தா.பாண்டியனுடனான சந்திப்பைத் ஜெயலலிதா தள்ளிப் போட்டதாகத் தமிழகப் பத்திரிக்கைகள் எழுதியதும் சமீபத்திய வரலாறுதான். நண்பரும் மதியுரைஞருமான துக்ளக் சோராமசாமி ஜெயலலிதாவுக்கு நேரடியாக அருள் பாலிக்காத வரையிலும் அதிமுகாவின் இந்நிலைபாடு தொடரும் என நம்பலாம். தமிழக உணர்ச்சி அரசியலின் தொடர்நாடகக் காட்சியே ஜெயலலிதாவின் அறிவிப்பு.
இந்திய அரசியல் கலாச்சாரத்தில், அந்த அரசியலுக்கென செயல்பாட்டு எல்லைகள் உண்டு. அந்த எல்லைகளுக்கு உள்நின்றுதான் தொல்.திருமாவளவனாயினும், மருத்துவர் ராமதாஸ் ஆயினும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலிதா ஆயினும், தோழர். தா.பாண்டியன் ஆயினும் செயல்பட வேண்டும். இந்திய அரசியல் கட்சிகள் பன்முகப் பிரச்சினைகளைக் கையாள வேண்டிய நிர்ப்பந்தத்திலுள்ள கட்சிகள். பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் பலமும் பலவீனமும் இதுதான். தமிழகத் தேர்தல் அரசியலைப் பொறுத்து, ஈழப்பிரச்சினை என்பது ஒரு பரிமாணம். இந்த ஒற்றைப் பரிமாணத்தை வைத்து மட்டும் இந்தியக் கட்சிகள் தொடர்ந்து இயங்கமுடியாது என்கிற அரசியல் யதார்த்தத்தில் இருந்துதான் அவர்தம் இரண்டக அரசியல் நிலைபாட்டை பார்க்க வேண்டும்.
தமிழகத்தில் தற்போது ஏற்பட்டிருக்கிற மக்கள் எழுச்சி, இந்தியக் கூட்டாட்சி, தமிழக மக்களின் சுயாதீனம் என்கிற உறவில் இந்திய அரசியல் பரப்பின் உள்ளார்ந்து, மிகப்பெரிய மாற்றங்களை எதிர்காலத்தில் உருவாக்கியே தீரும். யதார்த்தமான உலக நிலைமையில் இருந்து பார்க்கும் போது, ஈழப் பிரச்சினையில் இந்தியா மட்டுமல்ல, வேறு வேறு வகைகளில் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளும் அதீதமான அரசியல் மற்றும் இராணுவப் பாத்திரம் வகிக்கவே செய்கின்றன. இந்த நிலைமைகளில் இருந்து நோக்கும்போது, இலங்கை அரசின் அடக்குமுறைக் கொள்கையின் மீது, தமிழக எழுச்சிகள், உரிய தாக்கத்தை உருவாக்கும் என்பதற்கான சான்றுகள் மிகவும் குறைவாகவே இருக்கிறது.
2
தமிழ்த் திரைப்படங்களை வழமை போலவே பார்த்து வந்தாலும் அதற்கென விமர்சனங்கள் எதனையும் சமீப நாட்களில் நான் எழுதுவதில்லை. காரணம் என்னவென யோசித்தபோது, தமிழ் சினிமாவுக்கு ‘அளவுக்கு அதிகமானதொரு அறிவார்ந்த மதிப்பை’ நமது நட்சத்திர எழுத்தாளர்களே அள்ளி வழங்கிக் கொண்டிருப்பதால் எழுதுவதற்கான அவசியம் அற்றுப்போய்விட்டது போலத் தோன்றியது எனது முதலாவது காரணம். இரண்டாவது காரணம், இந்திய சினிமாவிலும் உலக சினிமாவிலும் நடைபெற்று வரும் மிகப் பெரும் மாற்றங்களை இதே நட்சத்திர எழுத்தாளர்கள் தமிழில் எழதுவதில்லை என்பதால், கிடைக்கிற நேரத்தில் அதனை எழுதுவது நமது பொறுப்பு என்று சுயமாகத் தேர்ந்து கொண்டதாக இருக்கிறது.
இருந்தாலும் சில வேடிக்கைக் கதைகளைப் பற்றி அவ்வப்போது எழுத நினைப்பது உண்டு. அப்படியான ஒரு வேடிக்கைக் கதை ‘வாரணம் ஆயிரம்’ பற்றிய சாருநிவேதிதாவின் விமர்சணம். மற்றொன்று ‘நான் கடவுள்’ பற்றிய ஜெயமோகனின் பேத்தல்கள் பற்றியது. சாரு ஒரு தமாஷ் பேர்வழி என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். தமிழ் சினிமாவைப் பிடித்த சாபக் கேடுகள் இரண்டு இயக்குனர்கள் என்பது எனது அப்ப்பிராயம். ஓருவர் ஷங்கர். மற்றவர் கௌதம் மேனன். மேனனின் போலீஸ் கதைகள் எல்லாம் அப்பட்டமான பாசிசம். விளிம்பு நிலையாளர்களின் மீது வன்மம்கொண்ட திரைப்பட இயக்குனர் அவர். அந்தக் கௌதம் மேனனைச் சாரு கொண்டாடுவது அவரது விருப்பம். அதற்காக அடப்பாவி, எதற்காக நீர் கீஸ்லாவ்ஸ்க்கியை கௌதம்மேனன் படம் பற்றிய விமர்சனத்தில் கொண்டு வருகிறீர் என்பதுதான் எனக்கு எரிச்சலாக இருக்கிறது.
கீஸ்லாவ்ஸ்க்கியின் பத்துக் கட்டளைகளின் அறங்களை நவீனகாலத்தில் வைத்துப் பேசிய ‘தெகலாக்’ முதல் அவரது ‘திரீ கலர்ஸ் டிராலஜி’ ஈராக அவரது அரசியல் படங்கள் உள்பட அனைத்துப் படய்களையும் நான் பார்த்திருக்கிறேன். கீஸ்லாவ்ஸ்க்கியின் ஈடுபாடு, அவரது தியானம் போன்ற கலைமதிப்பீடுகள், விளிம்பு நிலை மக்களின்பாலான அவரது காதல் போன்றவற்றோடு ஒப்பிட, கௌதம் மேனனின் சுயவாழ்க்கைப் படமான ‘வாரணம் ஆயிரம்’ கீஸ்லாவ்ஸ்க்கி படத்தின் ஒரு காட்சியின், ஒரு சட்டகத்தின் ஓரத்திற்குக் கூட கிட்டவராது. படு அபத்தமான வாரணம் ஆயிரம் படத்தைப் பற்றிப் பேசும்போது இடையில் கீஸ்லாவ்ஸ்க்கியை இந்த நகல் எழுத்தாளன் கொண்ட வருகிறார். கேவலமாக இருக்கிறது. கீஸ்லாவ்ஸ்க்கியை அவரது கல்லறையில் அமைதியாகவும்; பெருமிதத்துடனும் இருக்கவிட விரும்பாத ஒரு நச்சு எழுத்தாளன் சாரு என்பது எனது பார்வை.
3
‘நேபாளம்’ பற்றிய அ.மார்க்சின் புத்தகத்தை வாசித்தபோது புரட்சிகரமான நக்கல் சிரிப்பாக வந்தது. புரட்சிகர ஜனநாயகம், பன்முகப் பார்வை எல்லாமும் பேசி, சிபிஎம் சிபிஎம்எல் போன்ற சகல கட்சியினருக்கும் அட்வைஸ் செய்து, உலகமயமாதல், ஏகாதிபத்தியம், பன்னாட்டு மூலதனம், முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம் எனக் கலந்துகட்டி எழுதியிருக்கிற இந்த நூலில், சேகுவேரா டீசேர்ட்காரர்களையும், கொலம்பியாவின் சேவாஸை நம்பிக்கையோடு பார்ப்பவர்களையும் நக்கலடிக்கும் அ.மார்க்ஸ் ஒரு இடத்தில் தலிபான்களைப் போராளிகள் என்கிறார். மெய்சிலிர்க்கிறது.
சிஐஏ ஆவணத்தைக் கூடக் கதையாடல் எனும் அக்கறையுடன் வாசிக்க வேண்டும் என்பதற்கு அடுத்ததான அ.மார்க்சின் மலைப்பிரசங்கம் இது. நஜிபுல்லாவின் காலத்தில் பெண்குழந்தைகளுக்குக் கல்வியை அளித்ததால் அவரைக் கொன்று தலைகீழாகத் தொங்கவிட்டார்கள் தலிபான்கள். ரீகன் தலிபான்களை புரட்சியாளர்கள் என்றார். அ.மார்க்ஸ் போராளிகள் என்கிறார். சேகுவேரா டீசேர்ட் அ.மார்க்சுக்கு எரிச்சலைத்தருகிறது என்றால், அவருக்கு நாம் மாற்றாக ஒரு டீசேர்ட் பிம்பத்தைப் பரிந்துரைக்கலாம், பின்லாடன் ரஜினிகாந்தைவிடவும் வசீகரமானவர், அ.மார்க்ஸ் சேகுவேராவுக்குப் பதில் பின்லாடனை வேண்டுமானால் தேர்ந்து கொள்ளட்டும். பாவம், சேகுவேரா டீசேர்ட்டை மற்றவர்களுக்கு விட்டுவிடுங்கள், சிபிஎம், சிபிஐ தோழர்கள் பிழைத்துப் போகட்டும், அவர்களுக்கு பின்லாடனைவிட சேகுவேராதான் வசீகரமானவராகத் தெரிகிறார், என்ன செய்ய?
4
ஜெயமோகன் வசனம் தவிர தனது வலைத்தளத்தில் ‘நான் கடவுள்’ பற்றிக் கதா காலட்சேபமும் நடத்தி முடிந்தாகிவிட்டது. நான் கடவுளைப் பற்றி எழுத ‘ஏழாம் உலகமெல்லாம்’ போக எனக்கு விருப்பமில்லை. எப்போது ருத்ரன் வந்தானோ அப்போதே இந்தப் படம் பாலாவின் இன்னொரு படம். சுவர்ஸ்நேக்கரின் ‘பிரிடேட்டர்’ படம் பாரத்திருப்பவர்களுக்குத் தெரியும், அந்தப் படத்தில் வருகிற ‘ஏலியன்’ மாதிரியான பரட்டை முடியும் கையில் கயிறுகளால் முடிந்த ஒரு நீண்ட கம்பும் கொண்டவன்தான் ருத்ரன்.
மூன்று பிம்பங்கள் எனக்கு நான் கடவுள் பாரத்ததும் ஞாபகம் வந்தன. ஓன்று கால்களையும் கைகளையும் அகட்டி நீர்த்திவலைகள் எழும்ப நடந்து வரும் பிரிடேட்டரின் பிம்பம் ஒன்று. பிறிதொரு பிம்பம் இந்தியாவில் நடக்கும் கும்பமேளா நிகழ்வுகளின் போது போலீஸ் புடைசூழ வரும் கஞ்சா உடம்பில் புழதிபடிந்த சாமியார்களின் ஊர்வலம். மூன்றாவதாக எனக்கு வந்த பிம்பம் பாப்ரி மஜீத்தின் மீது சூலங்களோடு ஏறி அதனை உடைத்த வெறி கொண்ட கும்பலின் கூசசல். ரஜனியின் பாபாவை பாலா இயக்கினால் நான் கடவுள் மாதிரித்தான் வந்திருக்கும். அமானுஷ்யரான பாபா ரஜினி, அமானுஷயனான அகோரி நான் கடவுளை, உச்சி மோர்ந்து பாராட்டியதில் ஆச்சர்யமேதுமில்லை.
பாலா உணர்ச்சிகளின் அதீதத்தை உக்கிரமாகப் படம் பிடிப்பவர். விளிம்புநிலை மாந்தர்களின் வன்முறையின் பின்னிருக்கும் வன்முறையின் காரணிகளை இரண்டு படங்களில் – நந்தா மற்றும் பிதாமகன் – அலச முயன்றவர். இந்த அதீப்படுத்தல்தான் பாலாவின் பலம். மற்றபடி அவரது சேது மிக மோசமான பெண்வெறுப்புப் படம். நான் கடவுள் எந்த விதத்திலும் பிச்சைக்காரர்களின் அல்லது ஊனமுற்றவர்களின் வலியின் யதார்த்தத்தைத்; பிரதிபலிக்கும் படம் அல்ல.
ஜெயமோகனின் வசனங்களுக்கான வெகுமக்கள் ஏற்புக்கான வெளி, ஏற்கனவே திராவிட இயக்கத்தின் கடவுள் மறுப்பு விமர்சனம் ஏற்படுத்தியிருக்கும் வெளிதான். ஜெயமோகனுக்கென இதில் தனித்துவம் ஏதும் இல்லை. தமிழ்சினிமா திராவிட நாத்திக மரபின் தொடர்ச்சியாகவே ஜெயமோகனின் வசனங்கள் பார்வையாளர் மனத்தில் பதிகிறது. ஆன்மீகம் மசிர் மண்ணாங்கட்டி, அகோரி என என்னதான் தத்துவக்கதைகள் விட்டாலும், நான் கடவுள் விளிம்புநிலை மனிதர்கள் மீதான வெறுப்புப் படம்தான்.
வேத் மேத்தா போன்ற ஊனமுற்ற இந்திய இலக்கியவாதிகள், ஸ்டீபன் ஹாக்கின்ஸ் போன்ற ஊனமுற்ற விஞ்ஞான மேதைகள் வாழும் காலம் எம் காலம். பூஜாவை ஆர்யா கொன்று விடுதலை செய்தார். சரி. அதை வேடிக்கை பார்த்து நிற்கும் ஆயிரம் ஆயிரமான ஊனமுற்றவருக்கு எந்த மசிரான் விடுதலை வாங்கித் தருவான்? இந்த நாதாரி அகோரிக்கு கொலை மூலம் விடுதலை வாங்கித் தரும் உரிமையை எவன் கொடுத்தவன்?
திரைப்படமும் அது முன்வைக்கும் பிம்பமும் நிலவும் சமூக ஒழுங்குக்கான அல்லது ஒழுங்கின்மைக்கான எதிர்விணைதான். விளிம்புநிலை மனிதர்களின் அவலத்திற்கான எதிர்விணை என்று நாம் நான் கடவுளைக் கொள்வோமாயின், அந்த எதிர்விணை இன்றைய சூழலில் இந்துத்துவ வன்முறையினைக் கொண்டாடும் எதிர்விணை என்றே பார்க்கப்பட வேண்டும்.
உலகையும் ஜெர்மனியையும் தூய்மைப்படுத்த, ஜெர்மானிய சமூகத்திட்டத்தைச் செயல்படுத்த இட்லர் முடிவு செய்தபோது, உடல் ஊனமுற்றவர்களுக்கும், ஜிப்ஸிகளுக்கும், யூதர்களுக்கும், கம்யூனிஸ்ட்டுகளுக்கும் ‘விடுதலை’ கொடுத்து உலகைச் சுத்தப்படுத்த நினைத்தான். பாலாவின் அகோரியான ருத்ரனுக்கும் இட்லரின் கோரனான (கோரம்-கோரன்) பாசிஸ்ட் அதிமனிதனுக்கும் என்ன வித்தியாசம்? பாலுமகேந்திராவின் மாணவன் என்கிற பெயரை பாலா நான் கடவுளில் தொலைத்திருக்கிறார்.
5
நதியா நடித்த ‘பட்டாளம்’ படத்தைப் பார்க்க வேண்டும் எனக் கருதிப் பார்த்ததைப் போல, ஸன் தொலைக் காட்சி இசை நிகழ்ச்சியான ‘அதிரடி சிங்கர்’ தொடரைத் தொடர்நது பார்த்து வந்தேன். தொடர் கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி நிறைவடைந்துவிட்டது. மான்சி எனும் பதினாறு வயதுப் பெண் முதல்பரிசையும், மாதங்கி எனும் பெண் இரண்டாம் பரிசினையும் பெற்றார்கள். சிறந்த குரல், பொழுதுபோக்குத் தன்மைமிகு பாடகர், வேறுபட்ட தன்மைகளில் பாடிய திறன்மிக்கோர் எனப் பரிசுகள் வழங்கப்பட்டன. டோரதி எனும் எளிமையான பெண் பரிசு பெற்றதினைக் குறித்து நிறையப் பேர் சந்தோசப்பட்டிருப்பார்கள்.
பரிசளிப்பில்; மிக முக்கியமான விஷயமாக எனக்குப்பட்டது, திறன் என்பது குறித்த சமூகப் பார்வையும் நடுவர்களின் தேர்வில் இடம்பெற்றிருந்துதான். இசைஞானம், நிகழ்த்திக்காட்டல் என்கிற கருத்தமைவில் இடம்பெற்ற இந்நிகழ்வு மரபு இசைப் பயிற்சிiயுயும் அதே வேளை வெகுஜன சினிமா இசையையும் கலந்து முன்வைத்ததாக இருந்தது. இசை அமைப்பரளர் விஜய் ஆண்டனி மற்றும் ஈரோடுமகேஸ் தவிர இந்த நிகழ்வின் கலைமதிப்பீடுகளுக்குப் பொறுப்பாக இருந்தவர்கள் பிராமண சமூகத்தைச் சார்ந்த ஆளமைகள் என்பது மட்டுமல்ல, இந்த இசைப் போட்டியில் பங்குபெற்ற போட்டியாளர்களில் பெரும்பாலுமானவர்கள் பிரதானமாக பிராமண சமூகத்தைச் சார்ந்தவர்கள்தான்.
இயல்பாகவே அது அவ்வாறுதான் இருக்கும். பயிற்றுவிப்பவர்களும் இசை குறித்த மதிப்பீட்டாளர்களும் மரபிசையைப் படித்துத் தேர்வதற்கான பொருhளதார வாய்ப்பும் பயிற்சியும் அவர்களிடம்தான் இருக்கிறது. இருப்பினும் இந்நிகழ்வில் பிராமணரல்லாதவர்களும், விளிம்புநிலைச் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் தலித் சமூகத்;தைச் சேர்ந்தவர்களும் போட்டியாளர்களாகப் பங்கு பற்றினார்கள். அவர்கள் பாடிய பெரும்பாலுமான பாடல்கள் மரபிசைச் சாயல் இல்லாத வெகுஜனத்; திரைப்படப் பாடல்கள்தான். போட்டியில் கடுமையாக உழைத்ததற்காக அவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
நடுவர்களில் ஒருவரான மரபிசைப் பாடகர் பிரசன்னா ஒரு முறை சொன்னது ஞாபகம் வருகிறது : ஒரு விளிம்புநிலையாளரின் வாய்ப்பற்ற வாழ்வு குறித்து ஈரோடுமகேஷ் விவரித்ததற்கான மறுவிணையாகவே இதனைப் பார்க்க வேண்டும். ‘நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள், நீங்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள் என்பது முக்கியமில்லை. நீங்கள் இந்த மேடையில் எப்படி நிகழ்ச்சியில் ஈடுபடுகிறீர்கள் என்பதுதான் முக்கியம். அந்த வகைகயில் உய்களது செயல்பாடு எனக்குத் திருப்தி இல்லை’ என்றார் பிரசன்னா. இட ஒதுக்கீடும் அது தொடர்பான விவாதங்களும் எனக்கு இங்கு ஞாபகம் வந்தன. ஈரோடுமகேஷ் வாய்ப்பு மறுக்கப்பட்டவரின் அவலம் பற்றிப் பேசியதற்கான எதிர்விணையாகவே பிரசன்னாவின் அபிப்பிராயத்தை என்னால் பாரக்க முடிந்தது.
நிகழ்ச்சியின் கடைசியில் எனக்குப் பார்வையாளனாக உறுத்திக் கொண்டிருந்த விஷயம் இதுதான்: சீனிவாஸ் என்றொரு பாடகர் இரண்டு பாடல்களைப் போட்டியாளராகப் பாடினார். தாiயைப் பற்றிய உருக்கமான பாடல் ஒன்று. பிறிதொன்று திருவிளையாடல் படத்தில் பாலமுரளிகிருஷ்ணா பாடிய ‘இன்றொரு நாள் போதுமா?’ பாடல். கடவுளுக்குச் சவால் விடும் கலைஞனின் செருக்கும் பெருமிதமும் பொங்கும் பாடல் அது. சீனிவாஸ் பாடிய இரண்டு பாடல்களிலும,; அசல் பாடலை விடவுமான உணர்ச்சிபாவமும் இம்ப்ரூவைசேஸனும் இருந்தது. அவருக்கான அங்கீகாரம் இந்தப் போட்டியில் கிடைக்கவில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது.
முழுப் பார்வையாளர்களையும் அசைத்த பாடகராக சீனிவாஸே இருக்கிறார். பயிற்சியாளரான ஷாஸ்வதி குறிப்பிட்டது போல சீனிவாஸ் போட்டியாளர்களிலிருந்து இடையில் இல்லாமல் போனது வருத்தமாக இருந்தது போலவே, அவருக்கான தந்தே தீரவேண்டிய அங்கீகாரம் அவருக்குத் தரப்படாமலே போனதுக்காக காரணம் அவரது குரலில் தொனித்த பெருமிதமும் செருக்குமாக இருக்குமோ எனும் கேள்விமட்டும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது.
————————–
26 ஏப்ரல் 2009