Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழகத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்கிறார் ராமதாஸ் ஏன்?

தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று அடிக்கடி பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் சொல்வார். இப்போதோ தமிழகத்தை கோவை, மதுரை, சென்னை என மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்கிறார். முதலில் அவருடைய பதிவு சொல்வது இதுதான்…

“மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு 17.04.2021 சனிக்கிழமை நடைபெற்று முடிந்திருக்கிறது. எட்டாம் கட்டத் தேர்தல் வரும் 29ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அதற்கு இன்னும் 12 நாட்கள் உள்ளன. சுனில் அரோரா தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த காலத்தில் தொடங்கிய மேற்குவங்கத் தேர்தல் அவர் ஓய்வு பெற்று சுஷில் சந்திரா தலைமைத் தேர்தல் ஆணையராகிய நிலையில், அவர் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழ்நாட்டில் எப்போது சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது என்பதே மறந்து போய்விட்டது. மக்கள் தீர்ப்பை அளித்த பிறகு அதை அறிந்து கொள்வதற்கான காத்திருப்பு மிகவும் நீண்ட நெடியதாக உள்ளது. ஆனாலும், பலவகைப் பட்ட மாநிலங்களைக் கொண்டுள்ள இந்தியாவில், ஜனநாயகத்தின் தன்மைகளைக் காப்பாற்றுவதற்காக தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிகளின்படி பார்த்தால் இந்தக் காத்திருப்பு தவிர்க்க முடியாதது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 234. அத்தனைத் தொகுதிகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. கேரளத்தில் 140 தொகுதிகள், புதுச்சேரியில் 30 தொகுதிகள் இந்த மாநிலங்களிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இன்னும் கேட்டால் மொத்தம் 404 தொகுதிகள் கொண்ட இந்த 3 மாநிலங்களிலும் ஒரே நாளில் அமைதியாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. இதை சாதனையாக கூற முடியாது. ஏனெனில் இவை அமைதியான மாநிலங்கள்.


ஆனால், 126 தொகுதிகளைக் கொண்ட அசாமில் 3 கட்டங்களாகவும், தமிழகத்தை விட சற்று அதிகமாக 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும் வாக்குப்பதிவுகள் நடத்தப்படுகின்றன. இதற்கு காரணம் அங்கு நிலவும் தீவிரவாதமும், அமைதியின்மையும் தான். தீவிரவாதத்திற்கும், அமைதியின்மைக்கும் காரணம் அங்கு நிலவும் வளர்ச்சியின்மையே. பரந்து விரிந்து கிடக்கும் நிலப்பரப்பை சிறப்பாக நிர்வகிக்க முடியாததே இதற்கு காரணம் என்றால் அது மிகையல்ல.

மேற்கு வங்கத்தின் வளர்ச்சியின்மைக்கான முக்கியக் காரணங்களில் ஒன்று அதன் மிகப்பெரிய நிலப்பரப்பு ஆகும். மேற்கு வங்கத்தின் மொத்த மக்கள்தொகை சுமார் 10 கோடி. தமிழ்நாட்டில் 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்ற அடிப்படையில் புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. அதன்படி கடந்த இரு ஆண்டுகளில் 6 புதிய மாவட்டங்கள் உருவாகியுள்ளன. தமிழகத்தில் இப்போது 38 மாவட்டங்கள் உள்ளன. அடுத்த சில மாதங்களில் இது 40-ஆக உயரும். ஆனால், மேற்குவங்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மொத்தம் 20 மாவட்டங்கள் மட்டும் தான் இருந்தன. இப்போது தான் 3 புதிய மாவட்டங்கள் உருவாக்கப் பட்டுள்ளன.

மேற்கு வங்கத்தில் உள்ள 23 மாவட்டங்களில் 11 மாவட்டங்களின் மக்கள்தொகை 50 லட்சத்திற்கும் அதிகம். வடக்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தின் மக்கள்தொகை ஒரு கோடியே 10 லட்சம். தெற்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தின் மக்கள்தொகை ஒரு கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. மேற்கு வங்கத்தை மூன்றாக பிரித்து மேற்குவங்கம், கூர்க்காலாந்து, காம்தாப்பூர் ஆகிய மாநிலங்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக எழுப்பப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மேற்கு வங்க மாநிலத்தில் வளர்ச்சி சாத்தியமாகும்.

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் உத்தரப்பிரதேசம். 2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி அம்மாநிலத்தின் மக்கள்தொகை 19.98 கோடி ஆகும். இப்போது குறைந்தது 21 கோடிக்கும் கூடுதலாக இருக்கும். இவ்வளவு மக்கள்தொகையுடன் கூடிய உத்தரப்பிரதேசத்தை தனி நாடாக அறிவித்தால், சீனா, இந்தியா, அமெரிக்கா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு அடுத்த படியாக உலகின் ஐந்தாவது பெரிய நாடாக இருக்கும். பாகிஸ்தான், ரஷ்யா, ஜப்பான், பிரேசில், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் உத்தரப்பிரதேசத்தை விட சிறிய நாடுகளாக இருக்கும். சிங்கப்பூர், டென்மார்க் உள்ளிட்ட உலக மக்கள்தொகையில் கடைசியில் உள்ள 125 நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள்தொகையைக் கூட்டினாலும் அது உத்தரப்பிரதேசத்தை விட குறைவாகத் தான் இருக்கும்.

125 நாடுகளாக இருக்க வேண்டிய ஒரு நிலப்பகுதியை ஒரே மாநிலமாக வைத்திருப்பது எவ்வளவு பெரிய அநீதி. 125 அதிபர்கள் அல்லது பிரதமர்களால் நிர்வகிக்கப்பட வேண்டிய நிலப்பரப்பை ஒரு முதலமைச்சர் நிர்வகித்தால் அந்த மாநிலத்தில் வளர்ச்சி எவ்வாறு சாத்தியமாகும். உத்தரப்பிரதேசத்தில் இருந்து ஏற்கனவே உத்தர்காண்ட் என்ற மாநிலம் 20 ஆண்டுகளுக்கு முன் பிரிக்கப்பட்டு விட்டது. உத்தரப்பிரதேசத்தை ஐந்தாக பிரித்து உத்தரப்பிரதேசம், ஆவாத் பிரதேசம், பிராஜ் பிரதேசம், புந்தல் காண்ட், பூர்வாஞ்சல் ஆகிய மாநிலங்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

புதிய மாநிலங்கள் உருவாக்கப்படுவது நல்லதா? என்றால் நிச்சயம் நல்லது தான். கடந்த 2000ஆவது ஆண்டில் பிகார், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைப் பிரித்து ஜார்க்கண்ட், உத்தர்காண்ட், சத்தீஸ்கர் ஆகிய 3 புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. புதிதாக பிரிக்கப்பட்ட 3 மாநிலங்களும் அவற்றின் தாய் மாநிலங்களை விட அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. 2014ஆம் ஆண்டில் பிரிக்கப்பட்ட ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களும் கூட போட்டிப்போட்டுக் கொண்டு வளர்ச்சியடைந்து வருகின்றன. ஆகவே மாநிலங்கள் பிரிக்கப்படுவது மிகவும் நல்லது. அது வளர்ச்சிக்கு நிச்சயமாக வழி வகுக்கும்.

மற்ற மாநிலங்கள் மட்டும் அல்ல…. தமிழ்நாட்டில் கூட சென்னை, கோவை ஆகியவற்றுக்கு இணையாக மதுரையில் தொழிற்சாலைகள் இல்லை என்பதால் தென் மாவட்டங்களை தனியாக பிரிக்க வேண்டும் என்று அங்குள்ளவர்களும், கொங்கு நாடு என்ற புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்று கொங்கு மண்டலத்தில் உள்ளவர்களும் வலியுறுத்தி வருகின்றனர் என்பது நினைவு கூறத்தக்கது. சிறியவையே அழகானவை!

இந்த நீண்ட பதிவில் மூன்று மாநிலங்களாக தமிழகத்தைப் பிரிக்க சொல்லும் காரணங்களில் முதன்மையானது தேர்தலை  ஒரே நேரத்தில் நடத்தாமல் பலப் பல பகுதிகளாக பல கட்டங்களாக நடத்துகிறார்கள் என்பதுதான். அது உண்மையா என்றால் ஆமாம். ஆனால் அது ராமதாஸ் கூட்டணி வைத்திருக்கும் பாஜகவின் செயல் தந்திரம் என்பதை மறைத்து விடுகிறார்.

இதற்கு முன்னர் இப்படி ஒரு நிலை இருந்ததில்லை. பாஜக எங்கு வெல்ல நினைக்கிறதோ அந்த மாநிலங்களில் பல கட்டங்களாக பகுதி பகுதியாக தேர்தல் நடத்துகிறது . அஸ்ஸாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தவேண்டிய அவசியமே இல்லை. ஆனால் தான் வென்றே ஆக  வேண்டும் என்று அபப்டி நடத்துகிறது. அதே போன்று மேற்கு வங்க மாநிலத்தில் எட்டு கட்டங்களாக நடத்துகிறது. அதுவும் பாஜக வென்றாக வேண்டும் என்ற வெறியோடு தேர்தல் அமைப்பையே உடைத்து எட்டு கட்டங்களாக நடத்துகிறது. இதற்கு முன்னர் மேற்குவங்கத்தில் இப்படி தேர்தல் நடத்தப்படதே இல்லை. இதை எல்லாம் மறைத்து விட்டு பாஜக பண்ணும் வேலைகளை ஏதோ தமிழகப் பிரச்சனை போல பேசுகிறார் ராமதாஸ்.

மேலும் வளர்ச்சி இல்லை என்கிறார். உண்மையில் தமிழகம் ஒப்பீட்டளவில் இந்தியாவின் பிற மாநிலங்களை விட வளர்ச்சியடைந்திருக்கிறது அது போதுமா என்றால் இல்லை. இன்னும் அது வளர வேண்டும். ஆனால், ராமதாஸ் மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்று சொல்வதன் உள் நோக்கம் வேறு.

தன் மகன் அன்புமணியை முதல்வராக்க முயன்று அதில் தோற்றுப் போனவர் ராமதாஸ். 2016 சட்டமன்ற தேர்தலில் “மாற்றம் முன்னேற்றம் அன்புமணி” என்ற கோஷத்தோடு களமிரங்கி பல இடங்களில் டெப்பாசிட் இழந்து தோற்றது பாமக.

கடந்த நாடளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இப்போது நடைபெற்று முடிந்திருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதே அதிமுக கூட்டணியில் தொடரும் பாமக 23 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஒரு வேளை 23 தொகுதிகளிலும் வென்றாலும் கூட அன்புமணி முதல்வர் ஆக முடியாது. மொத்தத்தில் வட மாவட்டங்களில் வன்னியர் சாதி மக்களே பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை. என்பதைத்தான் கடந்த பல தேர்தல்களில் பார்க்க முடிகிறது. இப்போது வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியிருப்பதால் இனி மக்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என நம்பும் ராமதாஸ் சென்னையையொட்டிய வட மாவட்டங்களை தனி மாநிலமாகப் பிரித்தால் வன்னியர் மக்கள் தனக்கு வாக்களிப்பார்கள் தன் மகனை முதல்வராக்கி விடலாம் என நினைக்கிறார். ஆனால்  வேடிக்கை என்னவென்றால் தமிழகத்தை நான்காகப் பிரித்தால் கூட  திமுக அல்லது அதிமுகவே வெல்லும் பாட்டாளி மக்கள் கட்சியால் வட மாவட்டங்களில் கூட ஒரு போதும் வெல்ல முடியாது என்பதை தேர்தலுக்குப் பின்னர்  புரிந்து கொண்டால் சரி.

Exit mobile version