தமிழ்நாட்டில் தற்போது அமலில் உள்ள கொரோனா வைரஸ் ஊரடங்கு வரும் மே 24-ஆம் தேதி அதிகாலை முடிவடைய உள்ள நிலையில் மேலும் ஒரு வாரம் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடப்பில் உள்ள ஊரடங்கு போல அல்லாமல் தளர்வுகளே இல்லாத ஊரடங்காக இது இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இப்படி தளர்வுகள் இல்லாத ஊரடங்கு ஒரு வாரம் அமல்படுத்தப்படவுள்ளதால் நாளை ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் கடைகள் அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அனைத்து சட்டமன்றக் கட்சிப் பிரதிநிதிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பான முடிவை எடுத்தார்.
ஒரு வாரகால தளர்வுகள் அற்ற ஊரடங்கின்போது பால், குடிநீர், செய்தித்தாள் விநியோகம் மட்டும் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்நடை மருந்தகங்களும் அனுமதிக்கப்படும்.
உணவகங்களில் பார்சல் சேவைகளுக்கு மட்டும் சில மணி நேரங்கள் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.