கொரோனா பரவல் இந்தியாவை நாளுக்கு நாள் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் அதிக அளவு அரசு மருத்துவமனைகளையும் அதிக அளவு மருத்துவ படுக்கைகளையும் கொண்ட மாநிலம் தமிழகம் மட்டுமே அனைத்து விதமான நோய்களுக்கும் முதல் தர சிகிச்சை கிடைக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. ஆனால் கொரோனா பெருந்தொற்று பரவல் தமிழக மருத்துவக் கட்டமைப்பிற்கும் பெரும் சவாலை உருவாக்கியுள்ளது.
இன்று ஒரெ நாளில் 18 ஆயிரத்து 692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 11 லட்சத்து 66 ஆயிரத்து 756 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 128 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரேநாளில் 16 ஆயிரத்து 7 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 37 ஆயிரத்து 582 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 113 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 46 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் முதல் நிலை கொரோனா பரவலில் தமிழகம் கொரோனா பாதிப்பில் முதன்மையான மாநிலமாக இருந்தது.இப்போதும் அப்ப்டித்தான் உள்ளது. ஆனால் ஓரளவு நிர்வாகத் திறமையும் கட்டமைப்பும் இருந்தமையால் சமாளித்து வந்த தமிழகம் இப்போது கொரோனா நோயாளிகளை கையாள முடியாமல் தடுமாறி வருகிறது.
சென்னையில் உள்ள பெரிய மருத்துவமனையான ஓமந்தூரார் அரசு மருத்துவமனையிலும், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும் படுக்கைகள் நிரம்பி வழிகிறது.புதிய கொரோனா நோயாளிகள் ஆம்புலன்சில் வந்தால் வெளியில் பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் உள்ளது. ஆக்சிஜன் தடுப்பாடு இல்லை என்றாலும் படுக்கைகளை ஒதுக்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதே நிலை நீடித்தால் வட இந்தியா போன்று இல்லா விட்டாலும் நிலை மேலும் மோசமாகலாம் என்று சில மருத்துவர்கள் கவலையை வெளியிட்டுள்ளார்கள்.