மர்ம மனிதன் என்ற போர்வையில் தமிழ் பேசும் மக்களின் மீது மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளை உடன் நிறுத்து
கொடிய போர் தமிழ் மக்கள் மீது திணிக்ப்பட்டு அதன் சுமைகளை தாங்கமுடியாமல் தாங்கி உடமைகளை இழந்து உறவுகளை இழந்து சுயத்தை தொலைத்து அதனில் இருந்து மெல்ல மெல்ல எம் இனம் மீள முடியாமல் மீண்டு வரும் இந்த வேளையில் தமிழ் பேசும் மக்கள் மீது இன்னுமொரு அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது.
உலக நாடுகளின் போட்டிகளிற்கும் அவற்றின் தன்நலன் சார்ந்த செயற்பாடுகளிற்கும் மத்தியில் தமிழ் பேசும் மக்களாகிய எங்களது பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் அவர்களின் கைகளில் விளையாட்டுப்பொருளாக இருக்கின்ற வேளை இந்த மர்ம மனிதர்கள் எங்கள் மக்களின் மேல் ஏறி விளையாடுகின்றார்கள்.
உலகப் பார்வையே எம்மீது படும் இந்தவேளையில் நாங்கள் அடுத்தது என்ன செய்வது என்று சிந்திப்பதற்குள் இன்னுமொரு அடக்குமுறையை நாம் எவ்வாறு எதிர்கொள்வது? தமிழ் பேசும் மக்களாகிய நாங்கள் பிறப்பில் இருந்து பல்வேறு வகையான அடக்குமுறைகளை எதிர்கொண்டு வருகின்றோம்.
அவற்றில் காலத்திற்கு காலம் வடிவங்களில் மாத்திரமே மாற்றம் காண்கிறோம். எனினும் அவற்றை எல்லாம் துணிவோடு எதிர்கொண்டோம். ஆனால் இன்று போர் முடிவுற்றதாக கூறப்படும் நிலையிலும் தமிழ் பேசும் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளிற்கு தீர்வு காணப்பட வேண்டிய நிலையில் தமிழ் பேசும் மக்களால் என்றும் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் இன்னும்மொரு அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
நாங்கள் ஒருபோதும் வன்முறையை விரும்புவர்கள் அல்ல வன்முறையோடு பிறப்பெடுத்தவர்களும் அல்ல ஆனால் தொடர்ந்தும் எங்கள் மீது வன்முறைகள் திணிக்கப்பட்டால் நாம் மனிதராய் வாழ்வதில் அர்த்தமென்ன?
இன்று இனங்களிற்கிடையே புரிந்துணர்வு காணப்பட வேண்டிய நிலையில் தமிழ் பேசும் மக்களிற்கும் சிங்கள மக்களிற்கும் இடையேயான இடைவெளியை குறைக்க வேண்டிய நிலையிலும் வெறுமனே தமிழ் பேசும் மக்கள் வாழும் இடங்களில் மட்டும் இன்று கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை எமக்கு பெரும் அதிருப்தியையும், மன வேதனையையும் தருகிறது.
பெண்களை எம் தேசத்தின் கண்களாக காண்பவர்கள் நாம். இவர்கள் தமிழ் பேசும் மக்களின் இழக்க முடியாத அளப்பெரிய சொத்து. இத்தாய்மை இனத்தின் மீது எத்தனையோ வகையான வன்முறைகளை கடந்த காலங்களில் கட்டவிழ்த்து விடப்பட்டு வந்தமையை தாங்கள் அறிவீர்கள்.
அவர்களின் வாழ்க்கை சிதைக்கப்பட்டு வேரோடு அழிக்கப்ட்டன. இன்று கொடியபோர் தந்த பரிசால் எங்கள் தாய்மை இனம் வேலியில்லாத காணிக்குள்ளும், கதவுகளில்லா வீட்டிற்குள்ளும் கணவனை இழந்து கண்ணீரோடும் வாழும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டு அல்லலுற்று சொல்லெணா துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் இவ் வருத்தம் தோய்ந்த வேளையில் மர்ம மனிதன் என்ற போர்வையில்; மீண்டும்மொரு வன்முறை தாண்டவமாட தம் ஒருவேளை சோற்றுக்காக தினமும் அல்லலுறும் எம் தாய்மையினமும் ஆதரவில்லா குழந்தைகளும் வீட்டு மூலைக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.
யார் இந்த மர்ம மனிதர்கள்? இவர்கள் தமிழ் மக்களிடம் இதற்கு மேலும் எதை எதிர்பார்க்கின்றார்கள்? எம்மை அடிமைகளாக்க எண்ணும் காரணம் என்ன? நாம்; உண்ர்ச்சி மிக்கவர்கள் தான் ஆனால் உணர்வுபூர்வமானவர்கள். உலகின் எந்த இனத்திற்கும் எதிரானவர்கள் அல்ல. அப்படியிருக்கையில் ஏன் எம்மீது இத்தனை அடக்குமுறைகள்? ஒர் நாட்டில் பல்வேறு மொழிகளை பேசும் இனங்கள் வாழலாம் ஆனால் அந்நாட்டில் உள்ள சட்டங்கள் சகல மொழி பேசும் மக்களிற்கும் பொதுவானதே.
ஆனால் இங்கு மட்டும் சட்டங்கள் சந்தர்ப்பங்களிற்கேற்றவாறு இயற்றப்பட்டு அது இங்கு வாழும் மக்கள் மீது வௌ;வேறாக பிரயோகிக்கப்படுவதை சர்வதேச சமூகத்திற்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். உலக நாடுகளே ஒருகனம் நின்று சிந்தியுங்கள்.
மர்ம மனிதன் விவகாரம் தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசமான மலையகத்தில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் கிழக்கிற்கு நகர்ந்து இன்று வடக்கில் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் நாம் சர்வதேசத்திடம் பின்வருவனவற்றை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
Ø இந்த மர்ம மனிதன் விவகாரம் சிங்கள மக்கள் வாழும் எந்த ஒரு பிரதேசத்திலும் நடைபெறவில்லை.
Ø கிழக்கிலும் வடக்கிலும் தமிழ் மற்றும் சகோதர இனமான முஸ்லீம் மக்கள்; ஒற்றுமையாக வாழும் பிரதேசங்களின் ஒற்றுமையை குலைக்கும் ஒரே நோக்கமாக நடைபெற்றமையை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
Ø மர்ம மனிதன் யாராக இருக்கலாம் அவர்கள் எங்கள் வாழ்கையின் இயல்புநிலையை சீர்குலைக்க முயன்றால் அதை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
Ø வாய் பேச முடியாத விலங்கினம் கூட தம்மை துன்புறுத்தம் போது தம்மை பாதுகாக்க திருப்பித்தாக்கும். ஆனால் இச் சுதந்திரம் கூட இல்லாத மனிதர்கள் நம் தேசத்தில்.
Ø வேலியால் மேயப்படுகின்ற பயிர்கள் நாம். மக்களை பாதுகாக்கவேண்டியவர்கள் மக்களை தாக்கினால் நாங்கள் எங்கே சென்று முறையிடுவது?
Ø தங்களை பாதுகாக்கும் உரிமை தமக்கில்லாத போது எமது மாணவர்களிற்கு ஏன் தலைமத்துவ பயிற்சி?
Ø மர்ம மனிதன் விவகாரம் தொடர்பில் இதுவரை எதுவித நடவடிக்கைகளும் சட்டங்களும் அரச தரப்பால் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக மர்ம மனிதனிடமிருந்து தம்மை பாதுகாக்கும் மக்கள் மீது பயங்கரவாதச்சட்டம் எதற்கு?
இது போன்ற பிரச்சினைகளை எமது மக்கள் இன்று எதிர்கொள்கின்றனர். தமிழ் பேசும் மக்களின் அழிக்கப்பட முடியாத சொத்து கல்வி ஒன்றே ஆனால் எங்கள் மாணவர்கள் மர்ம மனிதன் விவகாரத்தால் கல்வி கற்பதை விட்டு காவல் கடமை செய்கின்றனர். எங்கள் வீடுகளில் உள்ள சகோதரிகளை பாதுகாக்க நாங்கள் காவல் கடமை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இதேவேளை நாவாந்துறையில் கைதாகி தாக்குதலுக்கு உள்ளானவர்களில் உயர்தரப்பரீட்சை எழுதும் மாணவர்களும் உண்டு. எமது பல்கலைக்கழக்தின் பல்வேறு பீடங்களில் இன்று பரீட்சைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. மர்ம மனிதனால் உள ரீதியாக பாதிப்புக்குள்ளான நாங்கள் எவ்வாறான மனநிலையில் பரீட்சைகளை எதிர்கொள்வது?
எனவே நாங்கள் எங்கள் கல்வி நடவடிக்கைகளை கைவிட்டு எமது மக்களை பாதுகாக்க காவல் கடமை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஆகவே இந்த மர்ம மனிதன் விவகாரம் தமிழ் பேசும் மக்களின் மீது அடக்குமுறையை பிரயோகிக்கும் வேளை அது தமிழ் பேசும் மக்களின் கல்வி தரத்தினை சீரழிக்கும் ஒர் செயற்பாடாகவே நாங்கள் கருதுகின்றோம். பல்கலையில் பட்டப்படிப்பை தொடரும் நாம் வீட்டுப்படலையில் உறக்கம் தொலைக்கிறோம்.
இந்நிலை தொடருமானால் தமிழ் பேசும் மக்களின் வாழ்க்கைத்தரம் கேள்விக்குறியே. எனவே எங்கள் மக்கள் மீது திணிக்கப்பட்ட அடக்குமுறைகளை உடன் நிறுத்தி இயல்பு நிலையை ஏற்படுத்துமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் வேண்டிநிற்கின்றோம்.
நன்றி
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய