சென்னை புறநகர் பகுதியான திருமுல்லைவாயல் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள் ஆனந்தன்- மனைவி மீனா தம்பதியினர்.
இவர்களுக்கு சந்தோஷ் (6), சுதாகர் (3 1/2), சஞ்சய் (1 1/2) ஆகிய குழந்தைகள் உள்ளன. இவர்களில் சந்தோஷ், சுதாகர் ஆகியோர் திருமுல்லைவாயல் அரும்பாக்கத்தில் உள்ள லிட்டில் ஹோலி ஏஞ்சல் மெட்ரிக்பள்ளியில் படித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று காலை 8 மணி அளவில் வீட்டின் அருகே பள்ளி வான் வந்தது. மீனா தனது மகன்கள் 1 1/2 வயது குழந்தை சஞ்சய்யை கீழே விட்டு விட்டு மற்ற சந்தோஷ், சுதாகர் ஆகியோரை வானில் ஏற்றி விட்டார்.
அப்போது சஞ்சய் தவழ்ந்த படியே வானின் கீழ் சென்று விட்டான். இதை கவனிக்காத ஓட்டுநர் வானை எடுக்க, குழந்தை சஞ்சய் வானின் பின் சக்கரத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிர் இழந்தான்.
அருகில் நின்றவர்களும் ஓடி வருவதற்குள் வேன் டிரைவர் தப்பிவிட்டார். ஆவேசம் அடைந்த பொதுமக்கள் குழந்தைகளை இறக்கி விட்டு வேனை அடித்து நொறுக்கினர். தகவல் அறிந்ததும் காவல்துறையினர் விரைந்து வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினர்.
ஏற்கனவே சீயோன் பள்ளி வாகன விபத்தில் குழந்தை பலியான சோகம் அடங்குவதற்குள் மேலும் ஒரு குழந்தை பள்ளி வாகனத்தில் சிக்கி பலியாகி இருப்பது சென்னை மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.