இன்றும் இலங்கையில் நாம் பழைய விவசாயச் சமூகம் கடைப் பிடித்த நடை முறைகளையே கடைப் பிடிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிற நிபுணர்கள் இருக்கிறார்கள். பேரினவாதிகள் நடுவிலும் தமிழ்ப் பழமைவாதிகள் நடுவிலும் இவ்வாறான கொள்கைகள் உள்ளன. இந்தியாவிலும் இப் போக்கு உள்ளது. இவர்கள் சொல்கிற விடயங்கள் முற்றிலுந் தவறானவை என்றோ ஆதாரமே அற்றவை என்றோ நான் கூற மாட்டேன். எனினும் தாம் அடையாளங் காணுகிற விவசாய உற்பத்தி தொடர்பான நெருக்கடிகளை அயலிலிருந்து வந்த தொழில் நுட்பம் நவீன உற்பத்தி முறை போன்றவற்றின் மீது சுமத்துவதோடு இது வரையிலும் ஏற்பட்டுள்ள சமூக பொருளியல் மாற்றங்களை எல்லாம் புறக்கணித்து ஒரு உன்னதமான கடந்த காலத்தை நோக்கி செல்வது பற்றிப் பேசுவோரிடம் நவீன விவசாயம் பற்றியும் மக்களின் பொருளியற் தேவைகள் பற்றியும் மிகவும் மேலோட்டமான ஒரு பார்வையே உள்ளது. இவர்களில் எவரும் மக்களுடன் தங்களது எண்ணங்களைப் பகிர்ந்து தமது கருத்துக்களை நடைமுறை மூலம் விருத்தி செய்யாததாலேயே இவர்களது பார்வை விறைப்பானதாக உள்ளது.
இந்த விதமான பார்வைகளால் ஏகாதிபத்தியத்தையோ அதன் பொருளியல் ஊடுகுவலையோ தேசிய பொருளாதாரம் ஒன்று எழாமல் தடுக்கும் அதன் செயற்பாடுகளையே தடுக்க வழிகாட்ட இயலுவது இல்லை. மாறாகப் பழமைவாதத்தை முற்றாக மறுப்பதாகக் கூறி வெளியிலிருந்து வருகின்றவற்றை எல்லாம் குருட்டுத் தனமாகப் பின்பற்றுகிறவர்கள் தேசியப் பொருளாதாரத்தைச் சீரழிக்கிறவர்களாக மட்டுமன்றித் துரிதமாக நாட்டையே அழிவுப் பாதையிற் கொண்டு செல்கிறவர்களாக இருக்கிறார்கள். மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதாரம் ஏகாதிபத்தியத்தின் பிடியினின்று மீள முடியாமல் ஒரு புறமும் வரலாற்று வழியாக நிலவுடைமை சார்ந்த தனது சமூக உறவுச் சிக்கல்களினால் மறு புறமும் தடுமாறுகிறது. இச் சூழலலியே ஒரு புறம் தீவிரமான பேரின வாதம் உட்பட்ட குறுகிய இன வாதம், மத வாதம், பிரதேச வாதம், இனத் தூய்மை, மத அடிப்படை வாதம் போன்ற கோட்பாடுகளை முன்னெடுத்துக் கொண்ட ஏகாதிபத்திய மேலாதிக்கத்துடன் சமரசம் செய்கிற ஒரு ஆபத்தான அரசியல் போக்கு பல நாடுகளிலும் விருத்தி பெற்று வந்துள்ளது. இவ்வாறான பிரச்சனையை நாங்கள் பண்பாடு தொடர்பாகவுங் கலை இலக்கியங்கள் தொடர்பாகவுங் காண இயலும். மொழி தொடர்பாகவும் இவ்வாறான அணுகுமுறை நடைமுறைகளில் உள்ளது.
நம் பண்பாட்டின் மேன்மை பற்றியும் பழமை பற்றியும் பெருமை பேசுகிறவர்கள் நமது பண்பாடும் கலை இலக்கியங்களும், மொழியும் அயலிலிருந்து உள் வாங்கியவை பற்றிப் பாசாங்கவே பேசுகின்றனர். நம்மிடையே உள்ள சடங்கு கம்பிரதாயங்களும் கலை இலக்கிய வளங்களும் மொழியின் செழுமையான கூறுகளும் காலத்தால் மாறி வந்துள்ளன என்பதை ஏற்க அவர்கள் மிகவுந் தயங்குகின்றனர். நம்மிடம் உள்ள எதுவுமே பிற பண்பாடுகளிலிருந்தும் பிற சமூகங்களின் நடைமுறைகளினின்றும் உள்வாங்கப் பட்டதல்ல என்பதை அவர்கள் வற்புறுத்த முற்படுகின்றனர். இவ்வாறான சிந்தனையின் தாக்கம் நம்மிடையே மிகவும் வலிது. எனவே எதையும் ஏற்புடையது ஆக்குவதற்கு அதற்கு ஒரு தொன்மையையும் தமிழ்த் தன்மையையும் வழங்குவது தேவை என்று நினைக்கின்றனர். சிலர் அதுவே போதுமானது என்றுங் கருதுகின்றனர்.
அதே வேளை நம்மை அறியாமலே அயலிலிருந்து பல விடயங்கள் நம்மிடம் வந்து தொற்றிக் கொள்கின்றன. அவற்றின் நன்மை தீமை அறியாமால் நாம் அவற்றை உள்வாங்கிக் கொள்கின்றோம். அவை நமது மொழியினதும், கலை இலக்கியங்களினதும் பண்பாட்டினதும் பகுதி ஆகி விடுகின்றன. அவற்றில் எவை நமது இருப்பை அடையாளப்படுத்துபவை, அவற்றில் எவை நமது சமூகத்தை முன்னேற்றப் பாதையில் உந்தி விடக் கூடியவை என்பது பற்றி நாம் திரும்பத் திரும்பக் கேள்விகளை எழுதத் தவறினால் எவை எல்லாம் சமூகக் கேடானவையோ அவை எல்லாம் நம்மில் ஒரு பகுதியாகக் குடிகொண்டு விட நேரும்.
கேடானவற்றைப் பற்றிய கண்டனப் பிரகடனங்களும் விமர்சனங்களும் அவற்றை நீக்கப் போதுமானவை அல்ல. தீயதை நீக்குவது பற்றிப் பேசுகிற போது அதனிடத்தில் நல்லது எது வர வேண்டும் என்ற தெளிவு நம்மிடம் இருக்க வேண்டும். பல வேளைகளில் நாம் நோயையும் அதன் அறிகுறிகளையும் குழப்பிக் கொள்ளுகிறோம். நமது பண்பாடு, மொழி, கலை இலக்கியங்கள் ஆகியவற்றின் வலிய அம்சங்களையும் வலுவீனமான அம்சங்களையும் வேறுபடுத்தத் தவறி விடுகிறோம். எது சாராம்சமானது எது நம்மைச் சரிவர அடையாளப் படுத்துவது என்பன குறித்து நம்மிடையே தெளிவு இல்லாமையாலேயே தூய்மை பற்றியும் தனித்துவம் பற்றியும் தொன்மை பற்றியும் நாம் மிகவும் குழம்பிப் போய் விடுகிறோம்.
இன்று இந்து சமயம் பற்றிப் பேசப் படுகிது. அதன் ஏற்புடைமை பற்றிய விவாதம் பெரும்பாலும் அது ஆரியரதா திராவிடரதா, குறிப்பாகச் சொன்னால் தமிழருடையதா, என்ற கேள்வி மீது தான் நடை பெறுகிறது. எனவே வலிந்து அதற்கு ஒரு தமிழ்த் தன்மை கற்பிக்கவம் அதன் வரலாற்றைத் தமிழர் வரலாறு என்று நம்மிடையே நிலவுகிற புனைவுகளுடன் பின்னிப் பிணைக்கவும் நமக்கிடையே சில கட்டாயங்கள் ஏற்படுகின்றன. இவ்வாறான போக்கை ராமாயணந் தொடர்பாக எழுப்பி, ராமன் ஆரியன், ராவணன் திராவிடன் என்ற போலிக் கட்டுமானத்தின் மீது புனைவுகள் எல்லாம் வரலாறாக்கப் பட்டுப் பயனில்லாத விவாதங்கள் நடக்கின்றன. ராமாயணத்துடனும். மகா பாரதத்துடனும் இந்துத்துவம் கொண்டாடும் உறவு எவ்வாறு விமர்சிக்கப்பட வேண்டும் என்ற விடயத்தை விட்டுப் பலரது கவனம் வீணான நிந்தனைகளிலும் பயனற்ற விவாதங்களிலுஞ் செலவாகிறது.
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ராமாயணமும் மகாபாரதமும் அவற்றின் வேறுபட்ட பல வியாக்கியானங்களாக மக்களிடையே உலாவுகின்றன. கலை இலக்கியங்களில் குறிப்பாகக் கிராமியக் கூத்து, இசை போன்றவற்றில் அவை கலந்துள்ளன. கிராம மக்களைப் பொறுத்த வரை அவற்றின் வழிபாட்டுப் பரிமாணத்தை விட அவற்றின் பண்பாட்டுப் பரிமாணம் முக்கியமானது. திரும்பத் திரும்ப சில மாதங்கட்கு ஒரு முறையோ வருடந் தோறுமோ அவர்களை ஒரே கதையைக் கேட்டு மகிழச் செய்வது என்ன? அதை அறியாமல் அதன் நன்மை தீமைகளை விவாதித்தும் பயனில்லை.
இங்கெல்லாம் ஒன்று அந்நியமானது என்பதாலோ இடையில் வந்து புகுந்தது என்பதாலோ மட்டும் மக்கள் அதை விலக்கப் போவதில்லை. அது கேடானது என்றாற் கூட அது பற்றி மக்கள் தம்மிடையே கலந்து பேசாமல் எதையுமே செய்யப் போவதில்லை. அதிலும் மரபின் தாக்கம் வலிது. பரம்பரை பரம்பரையாக நடத்தப்பட்டுச் சடங்காகி விட்டவற்றை மக்கள் நிராகரிக்க வேண்டுமானால் மாற்றாக வழங்கப்படுவது சமூகப் பயனுள்ளதாக மட்டுமன்றி மக்களைக் கவரக் கூடியதாகவும் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாகவும் அமைய வேண்டும். எனவே இறுதி ஆராய்வில் மாற்றுக் கலை இலக்கியங்கள் பற்றியும் புதிய பண்பாடு பற்றியுமான விவாதங்கள் எவற்றையும் விட முக்கியமாக அமையப் போவது அவற்றை மக்கள் நடுவே கொண்டு செல்லக் கூடிய நடைமுறை. மக்களிடமிருந்தே மாற்றுக் கலை இலக்கியங்களையும் புதிய பண்பாட்டையும் உருவாக்க இயலும். எனவே தான் சுயசார்பு, தனித்துவம் என்பன பற்றிய கலை இலக்கியப் பண்பாட்டுக் கொள்கைகள் சமூக நடைமுடையுடன் தொடர்புபடுத்தி விருத்தியாக வேண்டும்.
தனித்துவம் என்பதை ஒரு சமூகம் தானே உருவாக்கிக் கொள்கிறது. கிறிஸ்துவமும் இஸ்லாமும் தமது பொதுவான பல இயல்புகட்கும் ஒவ்வொரு சமூகச் சூழலிலும் தமக்குரிய தனித்துவத்தைப் பேணுகின்றன. அத் தனித்துவம் காலப் போக்கில் வலுப் பெற்றே வருகிறது. இந்து மதம் என்பதன் மீது ஒரு பொதுமையைத் திணிக்கிற முயற்சிகள் சமய நம்பிக்கை என்ற நோக்கில் நடக்கிறதாகக் கூற இயலாது. அவை மதவெறியைக் கிளப்புகிற நோக்கிலேயே மேற்கொள்ளப் படுகின்றன. சகல மத அடிப்படை வாதங்களும் தொன்மை, தூய்மை, தனித்துவம் என்கிற பேர்களிலும் மனிதரது இருப்புக்கும் பலவேறு தேவைகட்கும் அப்பாற்பட்ட சிந்தனைகளையும் செயல்களையும் தூண்டி விடுகின்றன. இவை யாவுமே தமது சமூகங்களைப் பிற சமூகங்களினின்று தனிமைப் படுத்துகிறதில் தீவிரமாக உள்ளன. அதே வேளை சமூகங்களைப் பிளவு படுத்துவதன் மூலம் நன்மை பெறக்கூடிய உலக மேலாதிக்க வாதிகளை அவர்கள் கண்டு கொள்வதில்லை. சில சமயங்களில் அவர்களுடன் சேர்ந்தும் இயங்குகின்றனர். இது தான் அவர்களது தூய்மையின் தன்மை.
நாம் சுயசார்பையும் தனித்துவத்தையும் வற்புறுத்துவது தூய்மைவாத நோக்கிலாக இருக்க முடியாது. அவை நமது கலை இலக்கியப் பண்பாட்டு விருத்தி அடிப்படையில் நமது வாழ்வும் வளமும் பற்றியனவாக அவற்றைச் சார்ந்தனவாக அமைவதை வற்புறுத்துகின்றன. அயலில் இருந்து வருவதை மட்டுமன்றி நாமாகத் தேடிப் பெறக் கூடியதைக் கூட நாம் திறந்த மனத்துடன் நோக்க வேண்டும். அவற்றை உள் வாங்குவதன் பலா பலன்களை அவை எவ்வாறு உள் வாங்கப் படக் கூடும் அவை எவ்வாறு நம்மிடையே உள்ள வளங்களுடன் பொருந்தி வரக் கூடும் அவற்றை நாம் எவ்வாறு மேலுஞ் செழுமைப் படுத்த இயலும் என்பனவற்றின் அடிப்படையில் நாம் முடிவு செய்ய வேண்டும்.
தொன்மை, தூய்மை என்பன பற்றி நம்மிடையே நிலவுகிற மயக்கங்களை நாம் இல்லாமல் ஆக்க வேண்டும். நமது சுயசார்பு பிறரிடமிருந்து நம்மைத் தனிமைப் படுத்துவதாக இல்லாமல் பிறருக்கும் நமக்கும் நன்மை தருவதாக அமைய வேண்டும். நமது தனித்துவம் நம்மைப் பிறரினும் உயர்ந்தவர்களாகக் கற்பனை செய்ய இடமளியாமல் வேறுபாடுகளின் இடையிலான உடன்பாடு என்கிற திசையில்; நம்மை முன்னேற்ற உதவ வேண்டும்.
ஏகாதிபத்தியத்தின் உலக ஆதிக்கத்திற்கான உலக மயமாதலுக்கு முன்பிருந்தே இன்னொரு வகையான உலக மயமாதல் இருந்து வந்துள்ளது. அது நாடு, மதம், மொழி என்கிற எல்லைகளைக் கடந்து நீதி, சமத்துவம் என்கிறவற்றின் மீது கட்டி எழுப்பட்ட உலகளாவிய பார்வை சார்ந்தது. மனித சமூகங்களின் இடையிலான உறவின் விருத்தி சமத்துவ அடிப்படையில் அமைந்ததால் அதற்கு இடையூறு ஏற்பட்டது. அந்தத் தடையை நீக்கி மானுடத்தின் பலவேறு பிரிவினரது தனித்துவத்திற்குக் கேடில்லாத சுய சார்பை மதிக்கிற சமத்தும் பேணுகிற ஒரு உலகப் பார்வை மாக்ஸியத்தின் வருகையோடு தான் இயலுமாயிற்று. அதை மேலும் வளர்த்தெடுத்து மக்களிடை கொண்டு செல்வது தான் சமூக அக்கறையுடைய படைப்பாளிகளின் முன்னுள்ள பணி.