
இவ்வாறு புதிய – ஜனநாயக மாக்சிச – லெனினிசக் கட்சியின் அரசியல் குழு சார்பாகப் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளர்.
மேலும் அவ் அறிக்கையில், கடந்த அறுபத்திரண்டு வருடகால பாராளுமன்ற – நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையின் கீழ் பெரும்பான்மையின் பெயரால் எடுக்கப்பட்டு வந்த பேரினவாத முடிவுகளும் செயற்பாடுகளும் தான் நாட்டின் இன்றைய அவல நிலைக்கு அடிப்படையாகும். அதன் விளைவே தேசிய இனப் பிரச்சினை இன்றும் பிரதான பிரச்சினையாக இருந்து வருகிறது. இத்தகைய சூழலில் அதற்கு நியாயமான அரசியல் தீர்வை முன்வைத்து இனங்களுக்கிடையே புரிந்துணர்வு ஐக்கியம் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டிய ஜனாதிபதியும் அரசாங்கமும் அவற்றுக்கு வேட்டு வைப்பது போன்று முற்றிலும் இனவாத அடிப்படையைக் கொண்ட சிங்களத்தில் மட்டும் தேசிய கீதத்தைப் பாடும் தீர்மானத்தை எடுத்திருப்பது கண்டனத்திற்குரியதாகும். இத்தகைய மலிவான இனவாதத் தீர்மானங்கள் மூலம் சிங்கள மக்கள் முன் எழுந்து நிற்கும் பாரிய பொருளாதாரப் பிரச்சினைகளைத் திசைதிருப்பி வைத்திருக்க மட்டுமே உதவக் கூடியதாகும். அத்துடன் ஐக்கியப்பட வேண்டிய தமிழ், சிங்கள, முஸ்லீம், மலையகத் தமிழ் உழைக்கும் மக்களிடையே குறுகிய இனக் குரோத உணர்வுகள் தூண்டப்படுவதற்கும் களம் அமைக்கப்படுகிறது. அதன் மூலம் உழைக்கும் வர்க்க மக்களைப் பிளவு படுத்தி பேரினவாத முதலாளித்துவ ஆட்சி அதிகாரத்தை நீடித்துக் கொள்ளும் ஒரு வழிமுறையாகவும் தேசிய கீதம் பற்றிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றே கொள்ள முடியும்.
சி.கா. செந்திவேல்.
பொதுச் செயலாளர்.