Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தடுப்பூசி மாநில அரசுகள் மோடிக்கு எதிராக திரளுமா?

இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் ஒன்றிய அரசு தோல்வியடைந்துள்ளது. தடுப்பூசி விநியோகம், ஆக்சிஜன் விநியோகம் உள்ளிட்டவைகளில் பாரபட்சம் காட்டப்படுகிறது. இது பாஜக ஆளாத மாநிலங்களில் கடும் சர்ச்சைகளை  உருவாக்கியிருக்கிறது.

சமீபத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பாஜக ஆட்சி செய்யாத 11 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதினார். அதில் தடுப்பூசிகளை ஒன்றிய  அரசு இலவசமாக மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்பதை மாநில அரசுகள் கேட்க வேண்டும் எனக் கோரினார். இதில் மாநில முதல்வர்களின் கோரிக்கை ஒரே குரலில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதே போன்று ஒரு கோரிக்கையை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் வைத்தார். சத்தீஸ்கர் மாநில அரசும் இதே போன்று விமர்சனங்களை மத்திய அரசு மீது முன் வைக்கிறது. பாஜக ஆட்சி செய்யாத அனைத்து மாநிலங்களிலுமே ஒன்றிய  அரசு மீது அதிருப்தி உருவாகியிருக்கும் நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும் இப்போது ஒன்றிய அரசுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் எழுதியுள்ள கடிதத்திற்கு பதில் அளித்துள்ள ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி “கொரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசி ஒன்றே ஆயுதம், மாநில அரசுகள் ஒப்பந்தங்கள் மூலம் தடுப்பூசி தயாரிப்பாளர்களிடம் இருந்து நேரடியாக தடுப்பூசி வாங்க  முயன்றாலும் எந்த நிறுவனமும் மாநில அரசுக்கு தடுப்பூசி வழங்க முன்வருவதில்லை.ஆனால், ஒன்றிய அரசும் போதுமான அளவு தடுப்பூசிகளை வழங்க முன் வரவில்லை. இதனால் தடுப்பூசி விவகாரம் ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான ஒன்றாக மாறியிருக்கிறது. தடுப்பூசி விநியோகத்தில் ஒன்றிய அரசு ஏற்படுத்தும் கால தாமதம் தடுப்பூசி போடுவதில் சுணக்கத்தை ஏற்படுத்துவதோடு இது நோய்த் தொற்றை கடுப்படுத்துவதில் குழப்பத்தையும் உருவாக்கும்.  மேலும் அதிக விலை கொடுத்து தடுப்பூசிகளை வாங்கவேண்டியிருக்கிறது. இதனால் தடுப்பூசி விநியோகத்தில் முறையான கொள்கைகளை வகுத்து விநியோகம் செய்யும் பொறுப்பை மத்திய அரசே எடுத்துக் கொள்ள வேண்டும் என அனைத்து மாநில முதல்வர்களும் வலியுறுத்த வேண்டும்.ஒன்று பட்டு செயல்பட்டால் முடிவுகள் மிகச்சிறப்பாக இருக்கும்” என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version