இவ்வியக்கத்தின் பங்களிப்பு சாதனை பற்றி நோக்கவதற்கு இக்காலப் பின்னணியில் எழுந்த இலக்கிய போக்குகள் குறித்த தெளிவு அவசியமானதொன்றாகும்.
1. முதலாவது பிரிவினர் கலை இலக்கியம் சமுதாய சட்டத்திட்டங்களுக்கும் விதிகளுக்கும் உட்படாது என்றனர். இலக்கியத்திற்கு புறநோக்கம் ஏதுவும் இல்லை எனக் கருதிய இவ்வணியினர் இலக்கியத்தில் அழகே பிதானமானது என்ற இலக்கிய போக்கினை வலியுறுத்தி நின்றனர். ‘கலை கலைக்காக’ என்ற கோட்பாட்டை வலியுறுத்திய இவர்கள் கலை இலக்கியத்தை சமூக முரண்பாடுகளின்றும் பிரச்சனைகளின்றும் பிரித்து நோக்கினர். மக்களின் பிரச்சனைகளோ அவர்கள் சார்ந்த அரசியலோ கலை இலக்கியத்தில் இடம்பெற்றால் இலக்கியம் அதன் தன்மையை இழப்பதாக கருதுகின்றனர். வெளிப்படையாக கூறுவதென்றால் சமூகத்தில் வாய்ப்பும் வசதியும் பெற்றவர்களின் குரலாகவே இப்போக்கு அமைந்துக் காணப்படுகின்றது.
இலக்கியம் பிரச்சாரம் செய்யக் கூடாது எனக் கூப்பாடு எழுப்பும் இவர்கள் தமக்கு படிக்காத-முரணான இலக்கிய படைப்புகளையே அவ்வாறு நிராகரிக்கின்றனர். இவ்வம்சம் அவர்களின் வர்க்க நலன் சார்ந்த அம்சமாகும். இவர்கள் அறிந்தோ அறியாமலோ சமூகமாற்றத்திற்காக பேனா பிடிக்கும் எழுத்தாளர்களின் படைப்புகளை நிராகரித்தனர்.
2. இரண்டாவது பிரிவினர், தேசிய பிராந்திய வெறியோடு இலக்கியத்தை நோக்கினர். ‘கல்தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன்னரே வாளோடு தோன்றியது மூத்தத் தமிழ்’ , ‘தலித் பற்றிய எழுத்துக்களை தலித்துக்கள் மட்டுமே எழுத முடியும்,’ ‘பெண்ணியம் சார்ந்த படைப்புகளை பெண்கள் மட்டுமே படைக்க முடியும்’ என்ற குறுகிய சிந்தனைகளை முன் வைத்தனர்.
மார்க்சிய மூலவர்களான காரல் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் இன்னும் இத்தகையோர் தொழிலாளர் வர்க்கத்திலிருந்து தோன்றவில்லை என்பதற்காக தொழிலாள வர்க்கம் சார்ந்த இவர்களின் சிந்தனைகளை நிராகரிப்பதா? பாரதி பிறப்பால் தலித் இல்லை என்பதாலோ அல்லது பெண் இல்லை என்பதாலே இவரது சாதி, பெண் விடுதலை தொடர்பாக முன் வைத்தக் கருத்துக்களை நிராகரிப்பதா? என்ற வகையில் நோக்குகின்ற போது நிராகரிக்க வேண்டும் என்பதே இவர்களின் வாதமாக அமைகின்றது.
உழைக்கும் மக்களின் போராட்டங்களை சிதைத்து அதனை கூனி குறுக்கி இறுதியில் படுத்தோல்வி அடையச் செய்வது இப்போக்கின் அடிப்படையாகும். இவ்வகையில் இவர்களால் படைக்கப்படுகின்ற இலக்கியங்கள் யாவும் மனிதனை அவனது ஆக்கப்பூர்மான செயற்பாட்டிலிருந்து பிரித்து அழிவுக்கு இட்டுச்செல்வதாகவே அமைந்திருக்கின்றன.
3. மூன்றாவது பிரிவினர் கலை இலக்கியத்தை சமுதாயத்தின் விளைப் பொருளாக நோக்கினர். இலக்கியம் சமுதாயத்தின் உற்பத்தி பொருளாக அமைந்திருப்பதுடன் அது சமுதாயத்தை உருவாக்குகின்ற பணியினையும் ஆற்றுகின்றது என்பதை இவர்கள் உறுதியாக நம்பினர். அழகியல் நிர்ணிப்புகளும் எழுத்து நடைகளும் சமுதாய சூழலுக்கு ஏற்றவகையில் மாறுகின்றன. அந்தவகையில் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கான முயற்சிகளை சிறந்த முறையில் பிரதிப்பலிக்கும் போது இலக்கியம் புத்துயிர் பெறுகின்றது. அவ்வாறில்லாதபோது தேக்கம் அடைகின்றது.
சமூகமாற்றப் போராட்டத்தில் கையிலேந்திச் செல்லக் கூடிய போர் வாளாக இலக்கியம் திகழ்கின்றது. எனவே சமூகமாற்றப் போராட்டத்தில் அக்கரைக் கொண்டு செயற்படுகின்றவர்கள் அரசியல் பொருளாதார போராட்டங்களில் எத்தகைய அக்கரை செலுத்த வேண்டுமோ அதேயளவு அக்கரையை கலை இலக்கிய போராட்டங்களிலும் செலுத்த வேண்டும் என்பதன் அவசியத்தை உணர்ந்திருந்தனர்.
இவ்வகையில் இ.மு.எ.ச. திற்கு கம்யூனிஸ்டுகளும் கம்யூனிஸ்ட் அல்லாத தேசிய ஜனநாயக முற்போக்கு சக்திகளுமே உந்து சக்தியை வழங்கினர்.இவ்வகையில் மூன்றாவது அணியினரே இ.மு.எ.ச.திற்கு இதயமாக திகழ்ந்தனர். இவ்வணியினர் புதியதோர் சமூகத்திற்காக அதன் மாற்றத்தில் பங்கு கொள்ளும் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், புத்திஜீவிகள் இன்னும் இத்தகையோரை இணைத்துதுக் கொண்டு சமூக போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இ.மு.எ.ச. சர்வதேச பாஸிசத்திற்கு எதிராகவும் உள்நாட்டு பிற்போக்கு சக்திகளுக்கு எதிராகவும் உறுதிமிக்கப் போராட்டங்களை; முன்னெடுத்தனர். இவர்களின் சிந்தனை, செயற்பாடுகள் என்பன ஒரு தத்துவார்த்த தளத்தில் முன்னேறிச் சென்றது. அத்தத்துவமானது அந்நியர் ஆட்சியை எதிர்ப்பதாக மட்டுமன்று சுதந்திரத்திற்கு பின்னர் இந்தியாவில் தோன்றக் கூடிய புதியதோர் சமூதாய மாற்றம் குறித்தும் கவனம் செலுத்தத் தலைப்பட்டிருந்தன. இந்திய சூழலைக் கனக்கிலெடுத்து ஒவ்வொரு மாநிலத்திலும் முகிழக் கூடிய கலை இலக்கியங்கள் குறித்து தீவிர கவனமெடுத்தனர்.
இதன் தாக்கத்தை நாம் கேரளத்தில் தோன்றிய கலை இலக்கிய படைப்புகளில் காணலாம். குமரன் ஆசான், கோசதேவ், வைக்கம் முகமது பஷிர், பொன்குன்றம் வர்க்கி, குரூப், பொற்றேகாட் முதலானோரின் எழுத்துக்களில் இவ்வியக்கத்தின் தாக்கத்தைக் காணலாம். இவர்களில் சிலர் சுதந்திர போராட்டத்தில் நேரடியாக பங்கு கொண்டவர்கள்.
இத்தகைய இலக்கியப் போக்கில் முக்கியமான தடத்தைப் பதித்தவர் தகழி சிவசங்கரம்பிள்ளை. அவர் எழுதிய முக்கியமான நாவல்களில் ஒன்றுதான் செம்மீன(1958);. இந்நாவலுக்கான கேரள சாகித்ய அகாதமி பரிசும் கிடைத்தது. இந்நாவல் திரைபடமாகவும் வெளிவந்தது. இதன் காரணமாக இந்நாவல் பலருடைய கவனத்தைப் பெற்றது.
கதை இப்படிதான் தொடங்குகின்றது….!
கேரளத்துக் கடற்கரை எத்தனையோ சிறு சிறு மீனவ கிராமங்களைக் கொண்டது. கடலுடன் தம் வாழ்வை இணைத்துக் கொண்டு எளிய மீனவர்கள் வாழும் சின்னஞ்சிறு செம்படச் சேரிகள். அத்தகைய சேரியை மையமாகக் கொண்ட மீனவர்களின் கதை.
கடின உழைப்பின் மூலம் உயர்ந்த வாழ்க்கையை அடைய துடிக்கும் செம்மன்குஞ்சு, அவனது மகள் கறுத்தம்மா வடிவும் திடகாத்திரமும் கொண்ட பெண். கடல் கன்னி என வர்ணிக்கத்தக்களவிற்கு அவள் நாவலில் பாத்திரமாக்கப்பட்டுள்ளாள். கறுத்தம்மா சிறுவிபாரியான பரீக்குட்டி என்னும் முஸ்லிம் இளைஞனைக் காதலிக்கின்றாள். அவர்களது காதல் தூய காதல். அது நிறைவேறாது முடிகின்றது நாவல். அவர்களது காதல் நிறைவேறாது என்பது கறுத்தமாவுக்கும் பரீக்குட்டிக்கும் தெரியும். சுமூகக் கட்டுப்பாடுகள் வலுவானவையாக காணப்படுகின்றன.
பரீக்குட்டியிலிருந்து தன் நினைவை அகற்ற கறுத்தமாவால் முடியவில்லை. இவ்வாறான நிலையில் மிகுந்த சோகத்துடன் இளம் மீனவனான பழனி என்ற இளைஞனை மனக்கின்றாள். பழனி யாருமற்ற அநாதை.
கறுத்தமாவின் தந்தை செம்மன்சுஞ்சு தான் செந்த படகு வாங்குவதற்காக சம்பாதித்த பணத்துடன் மிகுதியை நிறைவு செய்ய பரீக்குட்டியிடம் பணத்தை பெறுகின்றான். பணத்திற்கு பதிலாக மீன் தருவதாக வாக்குறுதி கொடுத்த செம்மன்குஞ்சு நிறைவேற்றத் தவறுகின்றான். பரீக்குட்டிக்கு மீன் கொடுக்கவும் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்கவும் செம்மன்குஞ்சு மறுத்துவிடுகின்றான். காதலில் ஏற்பட்ட தோல்வி ஒருபுறமும் வியாபாரத்தில் ஏற்றபட்ட நஷ்டம் இன்னொரு புறமும் வாட்டி வதைக்க பரீக்குட்டி அநாதரவான நிலையில் கடல்கரைப்பரப்பில் பைத்தியகாரனைப் போல் அலைந்து திரிகின்றான்.
கரம் பிடித்த கனவனுக்கு உண்மையான மனைவியாக வாழ கறுத்தம்மா எவ்வளவோ முயன்றுப் பார்த்தாள். இறுதியாக தோல்வியையே தழுவுகின்றாள். நாவலில் இந்த மனப் போராட்டத்தை சித்திரிக்கும் பகுதிகள் உள்ளத்தை உருக்குவனவாய் அமைந்துள்ளன. கறுத்தமாவின் ஒழுக்கத்தில் சந்தேகம் கொண்ட மீனவர்கள் ஒருசந்தர்ப்பத்தில் தோணியை செலுத்துவதில் முரட்டத்தனமாக நடந்துக் பழனியை ஏசுகின்ற போது கறுத்தமாவையும் இழுத்துவிடுகின்றனர். மறநாட் காலையில் பழனியை ஒதுக்கி விட்டே கடலுக்கு செல்லும் காட்சி, பழனி கறுத்தமாவின் மனவோட்டங்கள் யாவற்றையும் வாசிக்கின்ற போது வாசகனின் கண்கள் குலமாவதை தடுக்க முடியாது. கறுத்தமாவின் ஓழுக்கம் குறித்து பழனிக்கு நம்பிக்கையிருப்பினும் ஊர்பழிச் சொல் இவ் இளம் தம்பதிகளின் வாழ்க்கையை சிதைத்து சின்னாபின்னமாக்குகின்றது.
இது இவ்வாறிருக்க கறுத்தமாவின் திருமணத்தின் போது ஏற்பட்ட தகராரில் நோயாளியாகிவிட்ட சக்கி இறந்துவிடுகின்றாள். மரணப்படுக்கையிலிருந்த தன் தாயை விட்டு சென்றமையினாலும் பழனி கறுத்தமாவை கூட்டி செல்வதில் பிடிவாதமாக இருந்தனாலும் கோபமடைந்த செம்மன்குஞசு சக்கியின் இறப்பை சறுத்தமாவிற்கு தெரிவிக்க மறுத்துவிடுகின்றான்.
எனவே இறப்புச் சேதியை கறுத்தமாவிற்கு தெரிவிக்க பரீக்குட்டியே திருக்குன்னப்புழைக்கு போகிறான். ஆவனை கடல் கரையில் கண்ட சக தோணிக்காரர்கள் தவறான கதையை பரப்பி வீடுகின்றனர்.விட்டிலிருக்கும் மனைவி கற்பொழுக்கம் கெட்டுவிட்டால் கடல் தாயின் கோபத்திற்கு ஆளாக வேண்டிவருவதுடன் அது கணவனின் உயிருக்கும் ஆபத்தாகிவிடும் என்ற புராணிக நம்பிக்கையை காரணம் காட்டி சக மீனவர்கள் பழனியிடமிருந்து விலகிவிடுகின்றனர். தனியாளாகி தான் மிகவும் சிரமபட்டு வாங்கிய சிறிய தோணியிலேயே மீன் பிடிக்கப் போக வேண்டிய நிலைமை ஏற்படுகின்றது. இவ்வாறான நிகழ்வுகள் கறுத்தமாவிற்கும் பழனிக்கும் இடையே குடும்ப முரண்பாடுகளை ஊக்கிரம் அடைய செய்கின்றன. இந்த வேதனையும் துன்பமும் வாட்ட பழனி கடலை நோக்கி செல்கின்றான். இந்நிலைமை அவனது உயிரை இழக்கும் அளவுக்கு கடலின் வெகு தூரத்திற்கே செல்ல வைக்கின்றது.
சமுகத்தாலும் கணவனாலும் பாதிப்படைந்த கறுத்தமா விரக்த்தியின் விளிம்பிற்கே சென்று விடுகின்றாள். இந்த சூழல் இயல்பானவே அவளை பரீக்குட்டி மீது காதல் கொள்ளவும் பாலுறவுக் கொள்ளவும் நிர்பந்திக்கின்றது. இதே நேரத்தில் மீன் பிடிப்பதற்காக ஆழ் கடலுக்கு சென்ற பழனி தூண்டிலில் மாட்டிய சுறாவுடன் போராடி உயிரிழக்கின்றான்.
எதிர்பாராதவிதமாக கடலில் ஏற்பட்ட புயல்காற்று அந்த கடற்கரையையே நாசமாக்கியது. கடலுக்கு சென்ற பழனி திரும்பி வரவில்லை. இருதினங்களுக்கு பின், ஆண்-பெண் ஆகிய இரண்டு பிணங்கள் கடற்கரையில் ஒதுங்கின. அவை பர்pக்குட்டியும் கறுத்தமாவும். அவை ஒன்றையொன்று ஆரத் தழுவிக் கொண்டன. அதேசமயம் செறீயெழிக்கல் என்ற அடுத்த ஊரின் கடற்கரையில் தூண்டிலை விழுங்கிவிட்ட சுறாமீனும் ஒதுங்கின.
இந்நாவலின் பாத்திர படைப்புகள் இவ்வாறு அமைந்திருக்கின்றன:
கறுத்தமாவை எடுத்துக் கொண்டால் கதாநாயகியான அவள் கடல் கரையில் தன் காதலன் பரீக்குட்டியிடம் உரையாடுவதிலிருந்து நாவலின் இறுதிவரையில் அவள் பாத்திமாக்கப்பட்டுள்ளாள். பரீக்குட்டியின் மீது காதல் கொண்ட அவளின் மனவோட்டங்களையும் பூரிப்பையும் தகழி இவவாறு சித்திரிக்கின்றார்:
‘ அன்றும் பரீக்குட்டி பாடினான். சிதலமடைந்த அந்தக் குடிசையினுள் முடங்கிக் கிடந்தவாறு கறுத்தம்மா பாட்டைக் கேட்டுக் கொண்டிருநதாள். ஒரு விடயத்தை பரீக்குட்டியிடம் சொல்லிவிட வேண்டுமென்று அவளுக்குத் தோன்றியது. அதாவது: அவளுடைய மார்பகங்களை அவள் வெறித்துப் பார்க்க கூடாது. அதோடு இப்போது மற்றொரு விஷயமும் சேர்ந்துக் கொண்டது: அவன் பாடவும் கூடாது!
வெகு உற்சாகத்துடன் பட்டுப் பூச்சி போல் அவள் பறந்து திரிந்துக் கொண்டிருந்தாள். இரண்டு நாட்களுக்குள் அவளிடம் என்ன என்ன மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன! ஆற அமர அமர்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டிய சங்கதிகளும் முளைத்து விட்டன. தன்னையே அவள் அறிந்துக் கொள்ளத் தொடங்கினாள். வாழ்வுக்கே ஒரு முக்கியத்துவத்தை தருகின்ற விஷயங்கள் அல்லவா அவை! அவள் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மிகுந்த கவனத்துடன் அவள் எடுத்து வைக்க வேண்டும். இவைகளையெல்லாம் சிந்தித்து பார்த்த பின்னர், முன்போல் ஓடியாடி திரிந்துக் கொண்டிருக்க முடியுமா? ஓர் ஆண்மகன் அவளுடைய மார்பகங்களை வெறித்து, அதன் அழகை பருகிவிட்டான். அவள் ஒரு யுவதியாகி விட்டாள் என்பதில் என்ன சந்தேகம்? (ப.25)
காதல் தோல்வியுற்று எல்லாவற்றையும் இழந்து தனக்காக வழி என்ன என்பதையே அறியாது நிற்கும் பழனியியை தகழி பின்வருமாறு படம் பிடித்துக் காட்டுகின்றார்:
‘…வாழ்க்கையில் தனக்கு சொந்தமென்று இருந்த அனைத்தையும் இழந்துவிட்டுப் பித்துப் பிடித்தவன்போல் கடற்கரையில் வாய்விட்டுப் பாடிக்கொண்டே அலைந்து திரிந்துக் கொண்டிருக்கும் பரீக்குட்டி, பஞ்சமி மனமுருக, மிகுந்த பரிவுணர்ச்சியுடன் விவரித்தாளே, அதே கோலத்தில் கறுத்தம்மாவின் முன்னால் தோன்றினான். ‘நான் வரை வாழ்நாள் முடிவது வரை இப்படிப் பாடிக் கொண்டே இருப்பேன், திருக்குன்றப்புழைக் கடற்கரையலில் கேட்க வேண்டாமா? அதற்காகத்தான்! என்று அவன் அன்று சொன்ன வார்த்தைகள் அவளுடைய செவியினுள் முழங்கின.'(ப.332)
அரயனாக வாழ்வதற்குரிய பழனியின் ஆளுமைக்; குறித்தும் தன் மனைவி கறுத்தம்மா பற்றி எழுகின்ற ஊர் பழிச் சொற்களும் அவனை வாட்ட அத்தகைய யதார்த்த சூழலில் பழனியின் நிலையையும் மனவோட்டங்களையும் தகழி இவ்வாறு சித்திரிக்கின்றார்:
‘…..அரயனாக கடலின் அருமைக் குழந்தையாக வாழ்ந்தே தீருவது என்ற அவனது வேட்கை எத்தனை அழகானது. மலைப்போல் ஓர் அலை- அன்று வரையிலும் அத்தனைப் பெரிய அலை ஒன்று எழுந்தது இல்லை என்று சொல்லாம்- எழுந்து அவனது தலைக்கு மேலாக உருண்டோடிச் சென்றது. மறு வினாடி அதே அலை அவனது சக்தி அனைத்தையும் ஒட்ட உறிஞ்சி எடுத்துக் கொண்டு, பந்துபோல் அவனை ஒரே சுருட்டாய்ச் சுருட்டிக் கரை மீது தூக்கி எறிந்து விட்டுச் சென்றது.
பழனி தோல்வி கண்டு விட்டான். சோர்வினால் கீழே விழுந்து விட்டான் அவன். ஆவன் சட்டென்று எழுந்திருந்து வலைக்காரன் குஞ்சனுடைய வீட்டை பார்க்க ஓடினான். அவனுடைய முகத்தை ஏறிட்டுப் பார்த்து ஒரு கேள்வி கேட்க வேண்டியிருந்தது.
‘கடல் வேலைக்கு நான் லாயக்கத்தவனா?’
ஒரு கனம் பதில் சொல்ல முடியாமல் தயங்கினான் குஞ்சன்:
‘டேய், வந்து….வந்து’
‘ அது பொய் ….பச்சைப் பொய்,…. அவ கெட்டுப் போனவ இல்லே. எனக்கு நல்லாத் தெரியும்.’
‘இருந்தாலும் எல்லோரும் சொல்றாங்களே’
மிகுந்த கோபத்துடன் பழனி கத்தினான்:
‘சொல்லாங்க’
அவன் வழி பார்த்து திரும்பி நடந்தான்.
இவ்வகையில் இந்நாவலை நோக்குகின்ற போது செம்மன்குஞ்சு என்ற மீனவனின் உயர்வையும் வீழ்ச்சியையும் குறிக்கும் கதையாக உள்ளது. இன்னொருவகையில் கடற்கரைகன்னி கறுத்தமாவின் தூய காதல் கதை: காதலுக்காக தான் செய்வது தியாகம் என்றுணராத பரீக்குட்டியின் கதை: ஊக்ககும் உற்சாகமும் உருவான கறுத்தமாவின் தாயான சக்தியின் கதை: ஆண்மையும் ரோசமும் கொண்ட பழனி என்ற இளைஞனின் கதை என்று சொல்லத்தக்க வகையில் கேரள மீனவ கிராமமொன்றின் வாழ்வியல் கோணங்களின் பல் பரிமாணத்தை நாவலாசிரியர் சித்திரிக்க முனைகின்றார். ஏனைய பாத்திரங்களின் குணநலன்களை வாசகர்களே படித்து சுவைக்வேண்டியதுதான்! இந்நாவலில் எளிய கதாப்பாத்திரங்கள் அசாதாரணமான ஆற்றலைப் பெற்று விளங்குகின்றது எனத் துணிந்துக் கூறலாம்.
இக்கதையின் ஊடாக ஆசிரியர் எதனை உணர்த்த வருகின்றார் என்பதும் சுவாரசியமாக வினாவாகும்.
அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை படைப்பாக்கியவர்களை இரண்டு விதங்களில் காணலாம். ஒன்று நகர வாழ்வில் ஏற்படுகின்ற நெருக்கடிகளையும் முரண்பாடுகளையும் கண்ட அதிருப்தி அடைந்தவர்கள் கிராமபுற வாழ்க்கை இன்பலோகமாக கருதி அவ்விலக்கிய தொகுதியை நோக்குபவர்கள். எளிமை, இனிமை, தூய்மை என்பன அவ்விலக்கிய தொகுதியின் உயிர் நாடியாக அமைந்துள்ளது எனக் கூறுவர். இதனை வெறும் உணர்ச்சிமயமான கற்பனாவாதம் என விமர்சகர்கள் கூறுவர். கிராம வாழ்க்கை தூரத்தே விலகி நின்று பார்ப்பவர்களுக்கு இன்பலோகமாக தென்படும். அவை வெறும் புறத்தேற்றங்கள் என்பதை அறிவதற்கு அவர்களது உணர்வோ வக்கப் பின்னணியோ இடம் தருவதில்லை. மறுப்புறத்தில் அவ்வாழ்க்கையில் காணப்படும் முரண்பாடுகளையும் பிரச்சனைகளையும் கூர்ந்து அவதானிப்பவர்களுக்கு அப்பண்பாட்டினுள் உள்ள மோதல்கள், பிணி, சூது, பொறாமை போன்ற பண்புகள் அங்கும் உண்டு என்பதை அவதானிக்கலாம். பேராசிரியர் க. கைலாசபதி கூறுவது போல ‘ மனிதன் படைத்த அத்தனைக் ‘கெடுப்பிடி’களும் குறைந்த அளவிலேனும் அங்குண்டு. வாழ்க்கை அங்கும் போராட்டந் தான்.’ இந்த யதார்த்த்தை உணர்ந்து வகைமாதிரியான சூழலில் இயங்க கூடிய உண்மையான மாந்தரை படைக்கும் படைப்பாளியே இன்றைய மக்கள் இலக்கியத்திற்கு உயிர் தருவோன்னாகின்றார். இந்த இரண்டாவது இலக்கிய போக்கினை அழகுற வெளிப்படுத்தியதில் செம்மீன் நாவலுக்கு முக்கிய இடமுண்டு.
இந்நாவலில் கறுத்தமா பற்றி எழுகின்ற சமுதாயப் பழிச் சொற்கள் இதற்கு தக்கசான்றுகளாக காணப்படுகின்றன. தான் திருமணமாகி சென்ற ஊரான திருக்குன்னப்புழையில் கறுத்தமாவின் மீது சக பெண்களால் பாடப்படும் வசைமொழிகள் பற்றி ஆசிரியர் பின்வருமாறு சித்திரித்துக் காட்டுகின்றார்.
….. அன்று கடற்கரையில் பெரும் பூசல் ஒன்று கிளம்பிற்று. வியாபாரத்திற்கு சென்;றுவரும் மற்ற எல்லாப் பெண்களும் ஒன்று சேர்ந்து, ஒரே கட்சியாக நின்று கொண்டு கறுத்தமாவை வாயில் வந்தபடி வைதுநொறுக்கினர். அவர்களில், ஒருத்தியின் ஏச்சுக்குப் பதில் சொல்லக் கூடக் கறுத்தமாவின் நாவுக்கு நீளம் பற்றாது. புpன் எவ்வாறு ஐந்தாறு பெண்களுக்கு பதில் சொல்லப் போகிறாள் அவள்? இவள் வாய்விட்டு அழுது விட்டாள்! ஒருத்தி அப்போது கோபவெறியில் கத்தினால்;:
‘ ஏதோ ஒரு கடற்கரையிலே எவனோ ஒரு துலுக்கப்பயலெக் கட்டிக்கிட்டுக் கிடந்தவ, நம்ப நம்ப கடல்கரையை அழிக்க வந்து சேர்ந்திருக்கா.’
அப்போது மற்றொருத்தி சொன்னால்:
‘அவளக்கு நிறைய வியாபாரம் கிடைக்கத்தான் செய்யும். எல்லா வீட்டிலேயும் அவ கிட்ட தான் வாங்கணும்னு ஆம்புளைங்க சொல்லுவாங்க. ஆளை மயக்குற ராங்கிக் காரியல்ல அவ.’
இப்படியெல்லாம் கறுத்தமாவின் எதிரே நின்று பேசும்படியாகிவிட்டது.(பக்.246,245)
மேலும், செம்மன்குஞ்சு, அச்சக்குஞ்சு முரண்பாடு:; ஊர்மக்களுக்கும் செம்மன்குஞ்சுக்கும் இடையிலாண முரண்பாடு: இருக்கமான சமூககட்டுபாடுகள் மரபுகள்: சாதிய பிரிவுகள்: என்பன கிராம வாழ்க்கையி; காணப்படும் முரண்பாடுகளுக்கு தக்க எடுத்துக்காட்டகளாகும்.
இத்தயை முரண்பாடுகளை சுட்டிக்காட்டிய ஆசிரியர் அம்மக்களிடையே துளிர்விட்டிருந்த மனிதாபிமானத்தைம் சுட்டிக்காட்டத்தவறவில்லை. எடுத்துக்காட்டாக சக்தி இறந்த பின்னர் செம்மன் குஞ்சு தனக்கு இரண்டாம் தாரமாக ஒரு காலத்தில் மிகுந்த செல்வாக்குடன் இருந்து தனது கணவனின் இறப்பிற்கு பின் நிராதரவான கண்டங்கோரனின் மனைவியை திருமணம் செய்துக் கொள்கின்றான். காலப்போக்கில் ஏற்பட்ட குடும்பதாராறு காரணமாக அவளை செம்மன்குஞ்சு வீட்டை விட்டு வெளியேற்றி விட அவள் அநாதரவான நிலையில் கடற்கரையை சுற்றி வருகின்றாள். இந்த சூழலில் அவளுடன் முன்னர் முரண்பட்ட அச்சக் குஞ்சுவின் மனைவி அவளை வீட்டிற்கு அழைத்து ஆதரிக்கின்றாள். இது உழகை;கும் வர்க்கத்திற்கே உரித்தான நாகரீகத்தை எடுத்துக் காட்டுகின்றது.
இந்நாவல் ஒருவகையில் மீனவர்களின் அயராத உழைப்பு, கொடிய வறுமை, எளிமை, இவற்றினடியாக எழக்கூடிய முரண்பாடுகள் என்பனவற்றை தத்துருபமாக சித்திரித்துள்ளது. இந்த வாழ்க்கையை அவர்கள் எவ்வாறு ஏற்றுக் கொண்டார்கள் என்பது பற்றியும் நல்லோரைக்காத்து தீயோரை அழிக்கும் கடலன்னை, அதன் மீது அம்மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைகள் அவற்றினடியாக எழுகின்ற கருத்தோட்டம் போன்ற அம்சங்கள் இந்நாவலில் நுண்ணயத்துடன் தீட்டப்பட்டுள்ளது. அவ்வாறே இந்ந கடினமான சூழலிலும் அவர்களின் வாழ்வில் இடம்பெறக் கூடிய இன்பங்கள் களியாட்டங்;கள் குறித்தும் ஆசிரியர் படைபாக்கம் செய்யத் தவறவில்லை.
வலை நிறைந்து வழியும் நாட்களில் மீனவர்கள் அருகே உள்ள நகரத்திற்கு சென்று கொண்டாடுவார்கள். அவ்வாறே ஆண்டுக்கொரு முறை ஆயில்ய விழாவை வெகு சிறப்பாக கொண்டாடுவார்கள். இந்த வாழ்க்கை முறையில் முகிழக் கூடிய காதல்- நிறைவேறிய நிறைவேறாத காதல் எல்லாம் மனக்கண் முன் தோன்று காட்சி நாவலில் வருகின்றது. இவ்வாறு நெற்கன்றம், திரிகுன்றம், புழைகிராத்து மீவனர் குடிசைகளும் அவர்களது வாழ்வும் எவ்வாறு எளிமையும் அன்பும் நிறைந்துள்ளது என்பது பற்றியும் நாவல் சித்திரிக்கின்றது.
மற்றோரு முக்கியமாக விஷயம், இந்நாவலின் உரையாடல்கள்யெல்லாம் கேரளத்தில் உள்ள மீனச் செம்பட சேரிகளின் மண்வாசைன மனங்கமழும் பேச்சுத் தமிழில் அமைந்துள்ளன. அவற்றை புரிந்துக் கொள்வதில் சிரமம் இல்லை. நாவலில் பின்வரும் உரையாடல்கள் தக்க எடுத்துக்காட்டுகளாகும்.
செம்மன் குஞ்சுக்கும் சக்கிக்கும் இடையிலான உரையாடல்:
செம்மன் குஞ்சு சொன்னான்:
‘அதெல்லாம் எனக்குத் தெரியும். நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம். நானும் ஒரு மனிசப் பிறவிதானே.’
சக்கி கோபத்துடன் சொன்னாள்:
‘பூ ! மனிசன் அப்படி நெனச்சிக்கிட்டிருந்தாப் போதும். மக அநியாயமா கெட்டுப் போவா ஆமா,’
‘போடி போ ! அதுக்கு ள்ளே நான் அவளைக் கட்டிக் கொடுத்திடுவேன்’
‘அது என்னமா முடியும்? காசு கொடுக்காமெ எந்தப் பய வருவான்னு கேக்கறேன்’
‘இதைக் கேளு புள்ளே’ என்று ஆரம்பித்து, தன் வாழ்க்கைத் திட்டத்தை சவிஸ்தாரமாகச் சொன்னான் செம்மன் குஞ்சு. கறுத்தமாவும் அதை நூறாவது முறையாக கேட்டுக் கொண்டிருந்தாள்.
வருத்தத்துடனும், கோபத்துடனும் சக்கி கேட்டாள்:
‘அப்போ தோணியும் வலையும் சம்பாதிச்கிட்டு உக்காந்திரு.’ (ப. 21)
இவ்வாறே கறுத்தமாவிற்கும் பரீக்குட்டிக்கும் இடையிலான உரையாடல்களும் சுவாரசியமிக்கதாய் காணப்படுகின்றன.
இருவரும் ஒருவருக்கெருவர் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அந்த மௌனநிலை அப்படியே நீடித்து விடுமொ என்றுக் கவலைக் கொண்டவள் போல் கறுத்தம்மா சொன்னாள்:
‘அம்மா இப்போ வந்துடுவாங்க.’
‘அதனால என்ன?’
பயந்துப் போய் அவள் சொன்னாள்:
‘ஐயோ, அது தப்பு. nரிய தப்பாய் போயிடும்.’
‘நீ உள்ளே இருக்கே. நான் வெளியிலே நின்னுக்கிட்டிக்கேன்.பின் என்னவாம்?’
அதையும் அவனிடம் விளக்கிப் புரியவைக்க வேண்டும். ஏப்படி முடியும்? சொல்ல ஆரம்பித்தால், அது எவ்வளவு இருக்கிறது!
பரீக்குட்டி கேட்டான்:
‘உனக்கு எம்மேலே பிரியம் தானே?’
அவள் சட்டென்று பதில் கொன்னாள் :
‘ஆமா’
பரீக்குட்டி ஆவேசத்துடன் கேட்டான்:
‘அப்படீனா ஏன் நீ வெளியே வராம உள்ளேயே இருக்கே?’
‘நான் வரமாட்டேன்’
‘நான் சிரிப்பு மூட்டமாட்டேன். ஒருதரம் உன்னைக் கண்ணாலே பார்த்துப்புட்டு போறேன்.’
‘ஐயோ வேண்டாம்’ என்றாள் அவள், ஆற்றாமைத் தொணிக்கும் குரலில்.(பக்.29,30)
இவ்வகையில் பேச்சுத் தமிழை சிறப்பாக கையாண்டுள்ளமை நமக்கு ஓர் இன்ப அனுபவமாகவே உள்ளது. இத்தகைய பேச்சு நடை இந்நாவலின் தனிச்சிறப்பு. இவ்விடத்தில் தகழியின் மொழிநடைக் குறித்து டாக்டர் ஜோசப் முண்டச்சேரி தகழியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் என்ற தொகுப்பின் முன்னுரையில் கூறுகின்ற பின்வரும் கூற்று கவனத்தில் கொள்ளத்தக்கது:
‘தகழியின் மொழிநடையைப் பற்றி ஒரு வார்த்தை. பல்வேறு மேடைகளில் தகழி, தான் இலக்கணம் படித்தவன் இல்லை என்றும் தனக்கு மொழிப் புலமை இல்லையென்றும் பிரகடனப்படுத்தியுள்ளார். ஒரு வகையில் அதுவும் சரியே. அவர் படித்தது வாழ்க்கையின் இலக்கணத்தைதான் என்பதும், எழுதியது வாழ்க்கையின் மொழியைதான் என்பதும் தான் உண்மை. வாழ்க்கையின் ஆழமான பகுதிகளைப் பற்றி அறிய வந்தப் போது செல்லவேண்டியதை சொல்லத் தொடங்கினால் அதற்காக அவருக்கென ஒரு மொழி உண்டாயிற்று. தான் சொல்லக் கூடிய விஷயத்தை சரியாக விளக்கி சொன்னார் என்பது இருக்க, அதன்பின் அதை தெளிவாக கூறும்போது அந்ந மொழிக்கு ஓர் இலக்கணம் தானாகவே ஏற்பட்டுவிடுகி;றது. ஆனால் ஆரம்பத்தில் ஒரு விஷயத்தில் மற்ற எழுத்தாளர்களைப் போலவே, தகழியும் கற்பனையையும் மொழியையும் வௌ;வேறாகவே கண்டுள்ளார். அதோடு மட்டுமல்ல அப்போது கற்பனையை விட மொழி நடைக்கு அவர் முக்கியத்தவம் அளித்தாரோ என்ற சந்தேகமும் வருகிறது. அதனால் தகழியின் மொழிநடை கொஞ்சம் கூடுதலாகவே செயற்கைத்தன்மை தானாகவே மறைந்துவிட்டது. பெரிய நாவல்களியெல்லாம் அவர் எழுதிய மொழியை அதுவரை அவருடைய பேனா அறிந்திருக்வில்லை எனலாம். அந்தளவிற்கு இயல்பாகவும் அழகாகவும் உள்ளது அந்த மொழிநடை. தகழியின் ஒவ்வொரு வாக்கியத்தாலும் எந்த ஒரு வாசகனின் இதயத்திக்குள்ளும் சிரமமின்றி பதிய முடியும்.
அதுவே ஒரு நல்ல நடையின் முதல்தர லட்சணமாகும்’ (மே.கு.நூ.பக்.319,320)
காதல் என்பது இன, மத, மொழி, சாதி, பிரதேசம் கடந்தது எனச் சிலர் தத்துவம் பேசினாலும் கூர்ந்து நோக்கின் காதலும் இத்தகைய தாக்கங்களுக்கும் பாதிப்புக்கும் உட்பட்டிருப்பதை அவதானிக்கலாம். இங்கு திருமணம் என்பது இரு உள்ளங்களின் உடலின் சேர்க்கை என்பதை விட இரு குடும்பங்களின் சேர்க்கையாகவே அமைந்துக் காணப்படுகின்றது. அந்தவகையில் மதம் காதல் வாழ்க்கையில் ஏற்படுத்தக் கூடிய பாதிப்பு பற்றி இந்நாவல் அழகுற எடுத்துக் காட்டுகின்றது. இதனை இன்குலாப்பின் ‘மதம்’ என்ற குறுநவாலும் சிறப்பாக சித்திரிக்கின்றது. நாவலில் பச்சைக் கிளிக்கும் யூசுப் இடையிலாக மலரும் காதல் மதவெறி தாக்குதல்களால் சின்னாப்பின்னமாக்கப்புடுகின்றன. இவையெல்லாம் எதனை எடுத்துக் காட்டுகின்றன? மதவெறி என்கின்ற நச்சு மரம் படந்து நிற்பதைக் காட்டுகின்றது. இம்மரத்தை இலகுவாக வெட்டியெறிந்துவிட முடியாது. பலம் கொண்ட கோடரியால் பிளக்க வேண்டும் என்பதை இவை எடுத்துக் காட்டுகின்றன. அந்தவகையில் இந்நாவல் சோகத்தை இசைத்தாலும் கூட அவை கூட மனிதனில் நம்பிக்கையை ஏற்படுத்தி அவனை ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளுகளுக்கு இட்டுச் செல்கின்றது.
நாவலில் கடல்கரை வாழ்வு சார்ந்த ‘இருத்தல் ஒழுக்கம்’ சிறப்பாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. ஆடவர் தம் தொழிலுக்காக கடலை நோக்கி செல்வதும் பெண்கள் அவ்வாடவருக்கு ஏதும் நடாக்காமல் இருப்பதற்காக கற்பொழுக்கத்துடன் கடலன்னையை பிராத்தித்து இருக்க வேண்டும் என்பது இவ்வnhழுக்கத்தின் பாற்படும். அவ்வகையில் பெண்களுக்கு கற்பு தூய்மையும் ஆண்களுக்கு உடலுறுதியும் நெஞ்சுரமும் முக்கியமான இலட்சனங்களாகும். கரையில் உள்ள பெண்களின் கற்பின் வலிமையினால் தான் கடலில் படகேறி செல்லும் ஆடவரின் உயிர் பாதுகாக்கபடுகின்றது என்ற புராணிக நம்பிக்கை இதன்பாற்படும்.
பெண்களுகளுக்கு கற்பு ‘நாற்படையும் நாற் குணமும்….’ கொண்டதாக இருக்க வேண்டும் என பெண்களின் ஒழுக்கம் பற்றி பண்டைய இலக்கியங்கள் தொடக்கம் இன்றைய இலக்கியங்கள் வரையில் போதித்து வருகின்றன. இந்நாவலில் இடம் பெறும் இந்நம்பிக்கை குறித்த தகழியின் காலத்திலேயே பல விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. இது தொடர்பில் தகழியின் பின்வரும் வரிகள் கவனத்தில் கொள்ளத்தக்கது:
‘ செம்மீனைப் பற்றி வெளிவந்த பலத்த விமர்சனங்களையெல்லாம், நான் குருட்டு நம்பிக்கையை உறுதிப்படுத்த முயன்றுள்ளேன் என்பதாக இருந்தன. தூரத்தில் நடுகடல் வரையில் சிறு படகில் மீன் பிடிக்கச் செல்பவனின் உயிருக்குப் பாதுகாப்பு, கடற்கரையில் வசிக்கும் அவனுடைய மனைவியின் நன்னடத்தையில்தான் உறுதிப்பட்டுள்ளது எனும் நம்பிக்கையானது ஒரு குருட்டு நம்பிக்கையாகி விட்டிருக்கிறது போலும். ஒரு பெண்ணின் நன்நடத்தையைப் பற்றி ஆழமாகச் சொல்லுவது தவறா? எப்போதாவது மனம் நிலைத்தடுமாறுவது போல் தோன்றும் போது, ‘என் கடலம்மே’ என்று அழைத்து கடற்கரையிலேயே கவிழ்ந்தடித்து படுத்துக் கொள்ள வேண்டும் என்று நல்லபெண் அரையத்தி(மீனவப் பெண்) கறுத்தமாவிற்கு உபதேசிக்கின்றாள். நல்லது கெட்டது அறியாத கடற்கரையோரம் உள்ள கள்ளமற்ற ஆத்மாக்களான கறுத்தமாக்கள் கடல் தாயிடம் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளாமல் வேறென்ன செய்யப் போகிறார்கள். கடும்புயலிலும் சூறாவளியிலும் சுழற்கியிலும் உழலும் பழனியின் மனதிற்கு தைரியம் அளிப்பதும், தசைநார்களுக்குக் கடும்புயலையும் வட்டம் சுற்றி சுழலும் கடல் அலைகளையும் தேற்கடிக்க கூடிய ஊறுதியை கொடுப்பதுவும், வெகுதூரத்தில் கடற்கரையிலுள்ள குடிசையில் இருக்கும் தன்னுடைய வாழ்க்கைத் துணைவி கற்புடையவள்தான் என்னும் நம்பிக்கையேயாகும். ஒரு நல்ல போக்கு நிலைப்பதற்காக ஒரு குருட்டு நம்பிக்கை நிலைத்திருக்கின்றது என்றால் அதிலென்ன தவறு இருக்கின்றது? மனிதனின் ஜீவித பார்வை முழுவதும் விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டால் தாயையும் தந்தையையும் எப்படி காண முடியும்?
கணவன் மனைவியின் உறவை அறிவியல் கண்ணோட்டத்தில் மட்டுமே நோக்கினால், மனைவிக்கு எத்தனைக் காதலர்கள் உண்டாகிறார்கள் என்பதிலும் தவறில்லை. மனிதனும் ஒரு மிருக இனத்தை சார்ந்தவன்தான்.’ (1988ல் கேரள பல்கலை கழகத்தில் ஆற்றிய கொற்பொலிவிருந்து, குறிஞ்சிவேலன்(தொகுப்பும் மொழிபெயர்ப்பும்) 1994, தகழி, வேர்கள் இலக்கிய இயக்கம், நெய்வேளி, பக்.342,343.)
இவ்வகையான கருத்துக்கள் மரபுகள் யாவும் ஆண்களின் ரோமம் அடர்ந்த கரங்களின் ஆதிக்கத்தை நிலை நிறுத்தியதுடன் பெண்களின் மானசீகமான உணர்வுகள் மறுக்கப்படுவதற்கும் அவை காரணமாக அமைந்தன. கற்நெறியை பெண்ணுக்கு மட்டும் உரித்தானதாக பார்க்கின்ற ஆண் ஆதிக்கம் சார்ந்த பிற்போக்கான பார்வையாகும். இந்நாவலிலும் இக்கருத்து முனைப்படைந்துக் காணப்படுகின்றது. இப்பண்பு இந்நாவலின் பலவீனமான அம்சங்களில் ஒன்றாகும்.
இவ்விடத்தில் பிறிதோரு விடம் குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது. இந்தியாவின் இனக்குழு வாழ்க்கை முறையை உணராத சில அதி தீவிர புரட்சியாளர்கள் தம்மை புரட்சியின் புனிதர்களாக காட்டுவதற்காக ஐரோப்பாவில் இடம் பெற்ற வர்க்க ஆய்வை இந்திய சூழலிலும் அப்படியே பொருத்திப் பார்க்க முற்பட்டனர். அவர்களால் ரசிய, சீன புரட்சியை நிகழ்த்தி காட்டியளவிற்கு இந்திய புரட்சியை நிகழ்த்திக் காட்ட முடியாமல் போயிவிட்டது துரதிஸ்டமானதொன்றே. அப்பார்வையை தமிழியல் சூழலுக்கு ஏற்ப பொருத்தி பார்க்க தவறிய இவர்களின் சிந்தனை, செயற்பாடு என்பன தனக்கும் நட்டத்தை ஏற்படுத்தியதுடன் சமுதாயத்திற்கும் நட்டத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது. இந்தப் பின்னணியிலிருந்து அதி தீவிர இடதுவாதத்ததால் முடக்கப்பட்டவர்கள் சிலரால் இந்நாவல் மீது கர்ணக்கொடுரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. மீனவர் சமூகம் சார்ந்த அரசியல் எழுச்சிகளையோ அம்மக்களிடையே எழக் கூடிய இயக்கங்களையோ தகழி படைப்பாக்கி தரவில்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டன. இந்த விமர்சனத்தின் பின்னணில் தகழியின் முழு இலக்கியப் பங்களிப்பும் நிராகரிக்கப்பட்டன. இது தொடர்பில் தகழியின் பின்வரும் பதில் கவனத்தில் கொள்ளத்தக்கதொன்றாகும்:
‘…..கம்யூனிட்டுகளின் அன்றைய திட்டங்களை வைத்துக் கொண்டு திறனாய்வாளர்கள் இலக்கிய படைப்புகளை மதிப்பிடுவார்கள். இந்தக் கட்டத்தில் தான் ‘செம்மீன்’ எழுத உறுதிக் கொண்டேன். கடலோர மீனவர்கள் அப்போதும் சங்கம் இல்லாமல் தான் இருந்தார்கள். எந்தவொரு கொடியின் கீழேயும் அவர்கள் அணிவகுக்கவில்லை. அவர்களின் வழக்கமே அதுதான். ‘செம்மீன் என்ற நாவலை நான் எழுதப் போகின்றேன் என்று நான் கொஞ்ச நாட்களாக சொல்லிக்கொண்டு வந்தேன். ஆந்த நாவலில், நடுத்தர வாசிகளின் சுரண்டலையும் அதிலிருந்து தப்பிப்பதற்கு மீனவத் தொழிலாளர் வர்க்கம் ஒன்று சேர முயல்வதையும் தான் நான் எழுதப் போகிறேன் என்று எல்லோரும் எண்ணியிருந்தார்கள். ‘ரண்டிடங்கழி’யை அவர்கள் படித்ததால் இப்படியொரு எண்ணம் பரவியிருந்தது. மீனவர்களிடம் நான் நெருங்கி பழகியதால் அப்படியொரு கதையை எழுத என்னால் முடியவில்லை. அன்றைய மனோநிலையும் மாறிதாகவே இருந்தது. கம்யூனிஸ்டு கட்சி என்னும் அமைப்பிலுள்ள எதிர்ப்புகளை என்னால் கண்டுக் கொள்ள முடிந்தது. அதனால் சிறு சிறு நாவல்களை நான் எழுதினேன். இதற்கு ‘பேரில்லாக் கதை’ ஒரு உதாரணமாகும். அப்போது நான் எழுதியிருந்த கதைகளும் நாவல்களும் கட்சி தலைமைக்கு எரிச்சல் ஊட்டியிருந்தது.
தேவ் அப்போது நிறையவே எழுதினார்: கம்யூனிஸ்டு சித்தாந்தத்திற்கும் கட்சிக்கும் எதிர்ப்பாக பலமான மொழியில் எழுதினார்: ஒரு பகைவனைப் போல் எழுதினார். என்னுடைய பார்வை அப்படியிருக்கவில்லை என்றுதான் எனக்கு இப்போதும் தோன்றுகின்றது. என்னுடையது ஒரு உறவினரின் பார்வையாக இருந்து ஏழே நாட்களில் நான் ‘செம்மீன்’ நாவலை எழுதி முடித்தேன்.'(மே.கு.நூ.பக்.341,342.)
தமிழர் பண்பாட்டுச் சூழலில் மார்க்சிய சித்தாந்தத்தையும் அதன்வழியான இலக்கிய செயற்பாடுகளையும் முன்னெடுப்பவர்கள் முரண்பாடுகளையும் அதில் ஈடுப்பட்டள்ள சமூக வர்க்கங்களையும் ஆய்வு செய்து- அவற்றுக்கும் சர்வதேச நிகழ்விற்கும் இடையிலான உறவை ஆய்வு செய்வது என்பது தான் அறிவியல் பூர்வமான அணுகு முறையாகும். இத்;தகைய பண்பாட்டு ஆய்வுக் குரிய ஆய்விற்கான அணுகுமுறையையும் உணர்வையும் ‘செம்மீன்’ நாவல் தருவது இதன் பலமான அம்சமாகும்.
செம்மீன் நாவலை சுந்தரராமசாமி அதன் உள்ளடக்க-உருவக பண்பு சிதையாத வகையில் மொழிப்பெயாப்பு செய்துள்ளார். சுந்தரராமசாமி இந்நாவலை மொழிப்பெயர்ப்ப செய்ததன் மூலம் தமிழுக்கு காத்திமான பங்களிப்பினை செய்துள்ளார் என்றே கூறவேண்டும்.
முடிவாக நோக்குகின்ற போது உழைக்கும் மக்கள் சார்ந்த அவலங்கள் துன்பங்கள் வெளிக்கொணரப்படாவிட்டால் அவற்றினை அழிக்கவும் முடியாது. இந்நாவலின் ஊடாக அந்நோக்கம் நிறைவேறுகின்றது. நாவல் உள்ளடக்த்துக்கு ஏற்ற வடிவத்தையும் பெற்றிருப்பதனால் மலையாள இலக்கி பண்பாட்டுதளத்தில் முகிழ்ந்த இந்நாவல் உலக இலக்கியத்திற்கான அடித்தளத்தையும் கொண்டிருக்கின்றது. ‘பல தல இலக்கியங்களின்றும் பிரதேச இலக்கியங்களின்றும் ஒர் உலக இலக்கியம் உருவாகின்றது’ என காரல் மார்க்ஸ் கூறிய விடயம் இங்கு நிதர்சனமாகின்றது.
நமது பண்பாட்டுச் சூழலில் உலகமயத்தின் தாக்கமும் வணிக கலாசார தாக்கமும் இலக்கிய உலகினையும் பாதித்துள்ளது. இந்த சூழலில் வெளிவருகின்ற மதாந்நத நாவல்கள், வாரவெளியீடுகள், தொடர் கதைகள் எனும் பெயரில் பால்வக்கிரங்களும் வன்முறைக்கலாசாரங்களும் வாசகர் உள்ளத்தை கொள்ளை நோய் போல தாக்கி வரும் இத்தருணத்தில் ‘எல்லாம் மனிதனுக்கே! மனிதகுலத்தின் நல்வாழ்விற்கே’ எனும் சீரிய இலட்சியம் கொண்ட இலக்கியப் படைப்புகள் தோன்ற வேண்டியது காலத்தின் தேவையாகும். எண்ணிக்கையில் மட்டுமன்றி தரத்திலும் அவை உயர்ந்தவையாக இருக்க வேண்டும். இந்தகைய உயரிய இலட்சியத்திற்காய் கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில், உலக நாவல் இலக்கியத்தில் தனித்து நின்று ஒளி வீசும் தனித்துவம் கொண்ட நாவலாக செம்மீன் திகழ்கின்றது எனத் துனிந்துக் கூறலாம்.