Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

டொன் கிஹோட்டே : சிவசேகரம்

1
மிபுவெல் டி ஸெர்வான்ட்டெஸ்
அலொன்ஸோ கிஹானோவைப் புனைகிறார்
அலொன்ஸோ தன்னையே
டொன் கிஹோட்டேயாகப் புனைகிறான்
பெருங்குடி மரபின் வீர விழுமியங்களின்
இறுதிக் காவலனாகத்
தன் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கும்
நிலப்பிரபு யுகத்தின்
இறுதி வீரப் பெருந்தகையாகத்
தன்னைப் புனைந்த பின்பு
றொசினான்ட்டே எனப் பேர்சூட்டிய
ஒரு நோஞ்சான் குதிரை
ஒரு போர்ப்புரவியாகித்
தன் வீரப் பெருந்தகையைச் சுமக்கிறது
டொன் கிஹோட்டே தன் காவியத் தலைவியாக
டுல்ஸியானாவைப் புனைகிறான்
யதார்த்தம்
சன்ச்சோ பன்ஸா என்ற பேருடன்
கழுதை முதுகேறி
டொன் கிஹோட்டேயைத் தொடர்கிறது
எதிர்ப்படும் ஒவ்வொருவனிலும்
ஒரு கொடிய பகைவனையோ― இடையிடையே
தஞ்சம் கோரும் ஏதிலியையோ
நம் வீரப் பெருந்தகை காணுகிறான்
ஒவ்வொரு சத்திரமும்
ஒரு பகைவனின் கோட்டையாகிறது
ஒவ்வொரு காற்றாலையும்
மறித்துநிற்கும் ஒரு அரக்கனாகிறது
குத்தீட்டியால் அரக்கர்களைச் சாடியே
அவனது பொழுது கழிகிறது
ஒவ்வொரு ஏமாற்றத்தையும்
எண்ணத்தின் ஈடேற்றமாக்கவும்
ஒவ்வொரு வீழ்ச்சியைவும்
ஒரு எழுச்சியாகவும்
ஒவ்வொரு தோல்வியையும்
ஒரு வெற்றியாகவும் மாற்றும்
டொன் கிஹோட்டேயின் வல்லமையின் முன்
சன்ச்சோவின் யதார்த்தம் புறமுதுகிடுகிறது
டொன் கிஹோட்டேயை நிதானப் படுத்தவும்
தனது நிம்மதியைக் காத்துக்கொள்ளவுமாக
யதார்த்தம்
புனைவுகளுடன் சமரசம் செய்கிறது
ஈற்றில்
யதார்த்தம் வெற்றி கண்டபோது
டொன் கிஹோட்டே
அலொன்ஸோ கிஹானோவாக மீளுகிறான்
அவனது வாழ்வு
பொருளற்று அழிந்து போகிறது

2
மெய்யுலகில் இயங்க மட்டுமன்றித்
தொடர்ந்து இருக்கவும் வாய்ப்பற்ற
டொன் கிஹோட்டே
பலராலும்
பலவாறான வாசிப்புக்கட்கு உட்படுகிறூன்
மீள மீள நிகழும் வாசிப்புக்கள்
ஸெர்வான்ட்டெஸையும்
அலொன்ஸோ கிஹானோவையும்
டொன் கிஹோட்டேயையும்
அவனது புனைவுலகையும்
சன்ச்சோ பன்ஸா என்ற
யதார்த்த மதிலையும்
தாவிக் கடக்கின்றன
வீர உணர்வு மிக்க
இலட்சிய வேட்கையின் உருவகமாக
தன்முனைப்பின் மிக்க தனிமனிதவாதியாக
இறந்தொழிந்த விழுழியங்களின்
இறவாத குறியீடாக
கனவுலகிற் கரைந்தழியும் எவனுமாக
இன்னும் ஒவ்வொரு வகையான
உலகக் குடிமகனாக
ஒவ்வொரு சோடிக் கண்களும்
ஒவ்வொரு விதமாகக் காணுகிற
டொன் கிஹோட்டே
எண்ணற்ற சிற்பிகட்கும் ஓவியர்கட்கும்
கலைப் பண்டமாகிற
கவிஞர்களின் பாடுபொருளாகிற
இசைக் கருவிகளுடு காற்றை நிரப்புகிற
மேடைகயிலும் திரைகளிலும்
திறந்தவெளி அரங்குகளிலும்
ஓய்வின்றி உலாவித் திரிகிற
டொன் கிஹோட்டே
ஒவ்வொரு வாசிப்பும்
டொன் கிஹோட்டேயை
மீளப் பிறப்பிக்கிறது
டொன் கிஹோட்டேயை
மீளப் புதைக்கிறது

3
நம் ஒவ்வொருவருக்குள்ளும்
ஒரு டொன் கிஹோட்டேயும்
கூடவே ஒரு சன்ச்சோ பன்ஸாவும்
ஒளிந்திருக்கலாம்
எவருக்கும்
இலட்சியப் பற்றுள்ள ஒருவன்
டொன் கிஹோட்டே போலத் தெரியலாம்
இலட்சியம் மானுட மேம்பாடாக
சிந்தனை யதார்த்தமாக
செயல்கள் மக்களைச் சார்ந்ததாக
அமைகையில்
சன்ச்சோ
டொன் கிஹோட்டேயை மேவிவிடுகிறான்
தன்னை விட்டால்
உலகை உய்விக்க ஆளில்லை
என்று நினைத்துத்
தன்னையே மேய்ப்பனாக அறிவிக்கும்
நவீன டொன் கிஹோட்டே
தன்னையே மீட்பனாகவும்
அதி உத்தம
இறுதிப் புரட்சியாளனாகவும்
தன் கருத்தை
ஏற்காதவனை எதிரியாகவும்
விமர்சிப்பiனைத் துரோகியாகவும்
அறிவித்துக் கொள்கிறான்
அடிமை விசுவாசத்தைத் தவிர
எதையுமே ஏற்க இயலாத அவன்
மனித நேயத்தைப் பற்றியும்
விடுதலையைப் பற்றியும்
புரட்சியைப் பற்றியும்
ஏவ்வளவுக்கு எவ்வளவு பேசுகிறானோ
அவ்வளவுக்கு அவ்வளவு
மனித நேயமற்றவனாகவும்
விடுதலையின் விரோதியாகவும்
எதிர்ப்புரட்சியாளனாகவும்
நவீன டொன் கிஹோட்டே
தன்னைத் தகவமைத்துக் கொள்கிறான்.

4
ஸெர்வான்ட்டெஸின் டொன் கிஹோட்டே
இன்னமும்
றொசினான்ட்டேயின் முதுகில்
லா மான்ச்சாவின்
சமதரைகளிலும் மலைச் சரிவுகளிலும்
ஓய்வின்றி அலைகிறான்
காற்றாலைகளைத்
குத்தீட்டியாற் சாடுகிறான்
தகவல் யுகத்தின் டொன் கிஹோட்டே
‘எலி’யின் முதுகில்
கணினித் திரைப்பரப்பில்
தான் புனைந்த
சமதரைகளிலும் மலைச் சரிவுகளிலும்
ஓய்வின்றி அலைகிறான்
காற்றாலைகளை
விசைப்பகையாற் சாடுகிறான்

Exit mobile version