Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

டேவிட் கமரூன் – ஈழத் தமிழர்களின் புதிய கதாநாயகன்?! : சண் தவராஜா

davidcameronஉலகெங்கும் பிரச்சனைகளோடு வாழும் சாமான்ய மக்களுக்கு தமது சார்பில் தமது பிரச்சனைகளைக் கையாள அல்லது அவற்றைத் தீர்த்து வைக்க யாராவது தேவைப்படுகின்றார்கள். அவ்வாறு யாராவது வந்துவிட்டால் அவர்களைத் தமது தலைவர்களாக, கதாநாயகர்களாகக் கொண்டாட அவர்கள் தயாராக இருக்கின்றார்கள்.
இந்தியாவில் வெள்ளையர்களுக்கு எதிரான போராட்டத்தில் காந்தி அந்த மக்களால் கதாநாயகனாகக் கருதப்பட்டது போன்று, அமெரிக்காவில் கறுப்பின மக்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை வெளிக்கொணர்ந்த மார்ட்டின் லூதர் கிங் அந்த மக்களின் கதாநாயகனாக மாறிப் போனார். உலகெங்கிலும் இது போன்று பல உதாரணங்களைக் கூற முடியும்.
அதேவேளை, இன்றைய கதாநாயகர்கள் நாளைய வில்லன்களாகவும், சில வேளைகளில் ஒரு காலத்தில் வில்லன்களாகக் கருதப்பட்டவர்கள் பிற்காலத்தில் கதாநாயகர்களாகவும் மாறி இருக்கிறார்கள். இதற்கு சிறந்த உதாரணமாக அடொல்ப் ஹிட்லரைக் குறிப்பிடலாம். 1930 களில் யேர்மன் மக்களின் மிகப்பெரிய கதாநாயகனாக விளங்கிய அவர் இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் அனைவராலும் வெறுக்கப்படும் மிக மோசமான வில்லனாக மாறிப் போனார்.
ஆனால், வெகு மக்கள் திரளைப் பொறுத்தவரை காலாகாலமாக அவர்களுக்குக் கதாநாயகர்கள் தேவைப்படுகிறார்கள் என்பதில் மாத்திரம் மாற்றம் வரவில்லை.
ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களின் வரலாற்றில் காலத்துக்குக் காலம் பல கதாநாயகர்கள் இடம் பிடித்திருந்தார்கள். அண்மைக்கால அரசியல் வரலாற்றில் தந்தை செல்வா அவர்கள் நிரந்தரக் கதாநாயகனாக – அவர் இறக்கும் வரை – இருந்தார். அவரைத் தொடர்ந்து கதாநாயகன் பாத்திரத்தை ஏற்ற அ. அமிர்தலிங்கம் விரைவிலேயே வில்லனாகிப் போனார். பதிலாக, வே. பிரபாகரன் கதாநாயகன் பாத்திரத்தை ஏற்றுக் கொண்டார். 2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட நாள் வரை அல்லது அதற்கு ஒருசில மாதங்கள் முன்வரை தனது கதாநாயக அந்தஸ்தை அவர் பேணி வந்தார்.
இடைப்பட்ட காலத்தில் பாரதப் பிரதமர் இந்திரா காந்தியும், அவரின் விசேட தூதுவராக இலங்கை வந்த வி; பார்த்தசாரதியும், பி.வி. நரசிம்மராவும் கூட ஈழத் தமிழர்களின் கதாநாயகர்களாக சொற்ப காலம் வலம் வந்தார்கள்.
2009 மே மாதத்தின் பின்னான ஈழத் தமிழ் அரசியலில் கதாநாயகர்கள் இல்லாத ஒரு சூழல் நிலவியது. தேர்தல் சமயங்களில் மாத்திரம் தனி ஒருவராக அல்லாது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரகள் பலரும் கதாநாயகர்களாக விளங்கினார்கள். ஆனால், அவர்களின் பாத்திரம் மாறும் தன்மையுடையதாக விளங்கி வந்தது. இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சி; சிறிதரன், பா. அரியநேத்திரன் என கதாநாயகர்கள் மாறிக் கொண்டே வந்தனர். சில வேளைகளில் மனோ கணேசன், விக்கிரமபாகு கருணாரத்ன போன்றோரும் இந்தப் பாத்திரத்தை ஏற்றுக் கொண்டார்கள்.
வடக்கு மகாணசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட போது புதிய கதாநாயகனாக சி.வி. விக்னேஸ்வரன் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். அதேவேளை அவருக்குப் போட்டியாக அனந்தி சசிதரனும் அந்தப் பாத்திரத்துக்குப் போட்டியிட்டு ஓரளவு வெற்றியும் பெற்றார்.
ஆனாலும் கூட வே. பிரபாகரனுக்குப் பின்னால் நிரந்தரக் கதாநாயகர்களாக யாரும் வரவில்லை.
வடக்கு மகாணசபைத் தேர்தலின் முன்னர் ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் கலாநிதி நவநீதம் பிள்ளை வடக்குக்கு விஜயம் செய்தபோது அவரும் கதாநாயராகக் கொண்டாடப்பட்டார். தமிழர்களின் கதாநாயகர்களாக நிரந்தரமாக யாரும் இல்லாத நிலையில் தற்போது பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் தமிழர்களின் கதாநாயனாக கருதப்படுகின்றார்.
டேவிட் கமரூன் அவர்களைத் தமிழர்களின் கதாநாயகனாகக் கொண்டாடுவதில் தவறில்லை. ஆனால், தமிழர்களின் எதிர்பார்ப்பு யாவற்றையும் அவர் பூர்த்தி செய்துவிடுவார் என நம்புவதும், அனைவரும் அவ்வாறு நம்ப வேண்டும் எனத் தூண்டுவதும், அவ்வாறு நம்ப மறுப்பவர்களைச் சபிப்பதும் தவறானது.
யாழ்ப்பாணத்துக்கான அவரது வருகையும், அவர் அங்கே நடந்து கொண்ட விதமும், கொழும்பில் வைத்து அவர் நடந்து கொண்ட விதமும், ஊடகர் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்களும் அவர் ஒரு சிறந்த அரசியல்வாதி என்பதைக் காட்டுகின்றதே தவிர, தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத் தரவல்ல ஒரு நியாயவாதி என்பதைக் காட்டவில்லை.
உலகெங்கும் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளைத் தனது காலனியாக வைத்திருந்த ‘சூரியன் மறையாத சாம்ராஜ்யம்” என்ற ‘பெருமை” பெற்ற பிரித்தானியா காலனியாதிக்க காலத்தில் காலனித்துவ நாடுகளில் இழைத்த மனித உரிமை மீறல்களுக்காக தொடர்ச்சியாக மன்னிப்புக் கோரி வருகின்றது. இறுதியாக கென்யா நாட்டில் ‘மாய் மாய்” இயக்க போராளிகளுக்கு எதிராக இழைக்கப்பட்ட மோசமான மனித உரிமை மீறல்களுக்கு எதிராக மன்னிப்புக் கோரப்பட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடும் வழங்கப்பட்டிருந்தது.
சிறி லங்கா விடயத்திலும் அந்தப் பொறுப்பு பிரித்தானியாவிற்கு உள்ளது. ஆனால், டேவிட் கமரூனோ அன்றி பிரித்தானிய அரசாங்கப் பிரதிநிதிகளோ அதனைப் பற்றி என்றுமே கதைத்ததில்லை. அது மாத்திரமன்றி இரண்டு தேசங்களாக விளங்கிய சிங்கள மற்றும் தமிழ் தேசங்களை தனது நிர்வாக வசதிக்காக ஒரே அலகாக இணைத்து இன்றைய இன முரண்பாட்டிற்கு அடித்தளம் இட்டதும் பிரித்தானியாவே.
இறுதிக் கட்ட யுத்தம் வரை ஆயுதங்களையும் ஆலோசனைகளையும் வழங்கி தமிழர்களைக் கொன்றொழிக்கத் துணை நின்ற நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்று.
அது தவிர தற்போதும் கூட போர்க் குற்றங்களைப் பற்றிப் பேசினாலும், அரசியல் தீர்வு தொடர்பில் மறந்தும் கூட மூச்சு விடாத பிரித்தானியாவின் பிரதமர் தமிழர்களுக்குத் தனிநாட்டைப் பெற்றுத் தந்து விடுவார் போன்றும், மகிந்த குழுமத்தைத் தூக்குக் கயிற்றில் போட்டு விடுவார் போன்றும் ஒரு தோற்றப்பட்டைக் காட்டிவிடுவதில் தமிழர்கள் சிலர் முண்டியடித்து வருவதைக் காணக் கூடியதாக உள்ளது.
இவ்வாறு கூறுபவர்கள் ஒன்றைக் கருத்திலெடுக்க மறந்து விடுகின்றனர். பிரித்தானியா உட்பட மேற்குலக நாடுகள் இன்னமும் – தமிழர்களுக்குக் கிஞ்சித்தும் நம்பிக்கையற்ற -கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்ட விடயங்களை அமுல் படுத்துவதிலேயே ஆர்வம் கொண்டுள்ளன என்பதை மறந்துவிடக் கூடாது. உள்நாட்டில் நீதியான விசாரணையை மகிந்த குழுமம் நடாத்தும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு நிறையவே உள்ளது. அதற்காகவே தொடர்ச்சியாக சிங்கள அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கப்பட்டு வருகின்றது என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.
இத்தனையையும் கவனத்தில் எடுத்துப் பாரத்தால் டேவிட் கமரூன் உண்மையிலேயே ஒரு நல்ல கதாநாயகனா அல்லது அன்ரி-ஹீரோ எனப்படும் தீய பழக்கங்களைக் கொண்ட கதையின் நாயகனா எனப் புலப்படும்.
இதேவேளை, கமரூன் அவர்களுக்குக் கிடைத்த மக்கள் செல்வாக்கைக் கண்டுகொண்ட பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் யாழ்ப்பாணம் செல்வதற்கு முயற்சிப்பதாக ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. அவ்வாறு அவர் சென்றால் அவரை வரவேற்க அரசாங்க நிகழ்வுகளுக்கு ‘ஆள் பிடிப்பதை”ப் போன்று ஆட்களைப் பிடிக்க வேண்டிய நிலையே உருவாகும் என எதிர்பார்க்கலாம். ஏனெனில், ஒரு காலத்தில் தமிழ் மக்களின் இரட்சகனாகக் கருதப்பட்ட இந்தியாவின் பிம்பம் தமிழ் மக்கள் மத்தியில் தற்போது அவ்வாறுதான் இருக்கிறது.
விடுதலைப் புலிகள் களத்தில் இல்லாத இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களின் தலைவிதியைத் தாமே தீர்மானிப்போம் எனப் பல சக்திகள் புறப்பட்டுள்ளன. ஒரு நிரந்தரமான புதிய கதாநாயகன் தமிழ் மக்கள் மத்தியில் உருவாகும் வரை கமரூன் போன்றவர்கள் அந்த இடத்தை நிரப்ப முயற்சிக்கவே செய்வர்.

Exit mobile version