சமீபத்தில் மூன்று விவசாய மசோதாக்களை மத்திய அரசு சட்டமாக்கியது. விவசாயிகளின் கருத்துக்களைக் கேட்காமல் அமல் படுத்தப்பட்ட இந்த மசோதா வட இந்திய விவசாயிகளிடம் கொந்தளிப்பை உருவாக்கியது. பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் இந்த சட்டத்திற்கு எதிராக திவீரமான போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் ‘டெல்லி சாலோ’ என்ற போராட்டத்தை பஞ்சாப், ஹரியனா விவசாயிகள் அறிவித்தனர். இவர்கள் அறிவித்த இந்த போராட்டத்தை இடதுசாரிகள், காங்கிரஸ் உட்பட பல கட்சிகளும் ஆதரித்திருந்தன.
பல மாநிலங்களில் இருந்து வந்து டெல்லியை முற்றுகையிட்டு
மோடி அரசின் கவனத்தை ஈர்ப்பதுதான் போராட்டத்தின் நோக்கம்.
விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்து விடக்கூடாது என டெல்லி எல்லைகளை மூடியிருந்தது கெஜ்ரிவால் அரசு. டெல்லி அரசுக்கு என்று போலீஸ் அதிகாரம் கிடையாது. மத்திய உள்துறையி
ன் கட்டுப்பாட்டின் கீழ்தான் டெல்லி போலீஸ் அதிகாரம் வருகிறது என்பதால் விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்குவதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அக்கறை காட்டுவதாகக் கூறப்படுகிறது.
டெல்லியின் சிங்கு பகுதியில் போலீசாரின் தடைகளை உடைத்தபடி விவசாயிகள் டெல்லியை நோக்கி முன்னேறினார்கள். பல்லாயிரக்கணக்கில் டெல்லியை முற்றுகையிடும் விவசாயிகளை கைது செய்து அடைத்து வைக்க டெல்லியைச் சுற்றி உள்ள 9 விளையாட்டு மைதானங்களை மத்திய அரசு கேட்டது. ஆனால், டெல்லியை ஆளும் கெஜ்ரிவால் அரசு விவசாயிகள் கோரிக்கை நியாயமானது அவர்களை கைது செய்து தடுத்து வைக்க மைதாங்களை தர முடியாது என்று கைவிரித்து விட்டது.
வட இந்தியாவில் சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற அமைப்பும் கிசான் சங்கர்ஷ் என்ற ஒருங்கிணைப்புக் குழுவும்தான் வட இந்திய விவசாயிகளிடம் பிரபலமான அமைப்புகள் இந்த அமைப்புகள்தான் போராட்டங்களை நடத்துகிறது. வெள்ளிக்கிழமைக்குள் ஐம்பதாயிரம் விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவார்கள் என்று இந்த அமைப்பு அறிவித்திருந்த நிலையில், டெல்லி சாலோ போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கண்ணீர்புகைக் குண்டுகளை வீசியதோடு, தடியடி தாக்குதலும் நடத்தப்பட்டதால் இந்த போராட்டம் வட இந்தியாவில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.