Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

டெல்லி போராட்டத்தில் வன்முறை கும்பல் புகுந்து தாக்குதல்!

கடந்த இரு மாதங்களாக டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில் இன்று சிங்கு பகுதியில் உள்ளூர் வாசிகள் என்ற பெயரில் சில நூறு ரவுடிகள் விவசாயிகள் போராட்டத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள்.

மத்திய உள்துறை அமைச்சகமும், உத்தரபிரதேச அரசும்  போராட்ட இடத்தை காலி செய்ய வேண்டும் என்று சொல்லியும் போராடும் விவசாயிகள் இடத்தை காலி செய்யவில்லை. நேற்று மத்திய ராணுவத்தின் பல பட்டாலியன் படைகள் போராட்டம் நடக்கும் சிங்கு, காசிப்பூர் எல்லையில் குவிக்கப்பட்டன. அந்நிய தேசத்துடன் யுத்தம் நடக்கும் போதுதான் இது போன்று படைகள் குவிக்கப்படும். தங்கள் உரிமைகளுக்காக போராடும் விவசாயிகளை கட்டுப்படுத்தவும் ராணுவம் குவிக்கப்பட்டு வருவது வேடிக்கையாக இருக்கிறது.

இந்நிலையில் விவசாய சங்க தலைவர்கள் இடத்தை காலி செய்ய மறுத்து விட்டனர். மேலும் போராடும் இடங்களை நோக்கி பல மாநிலங்களில் இருந்து விவசாயிகள் வந்து கொண்டிருப்பதால் நிலமை மேலும் மோசமாகியது. மேலும்  இன்று வெள்ளிக்கிழமை மதியம் சிங்கு பகுதியில் வசிக்கும் உள்ளூர் வாசிகள் என்ற பெயரில்  நூற்றுக்கணக்கானோர் ஆயுதங்கள் கற்களோடு வந்து விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தினார்கள். அவர்கள் எப்படி போலீஸ், ராணுவத்தை மீறி உள்ளே வந்தார்கள் என்று தெரியவில்லை.

இது பற்றி பேசிய விவசாயிகள் “இவர்கள் பாஜகவினரால் ஏற்பாடு செய்த நபர்கள். எங்கள் போராட்டத்தை வன்முறைக்களமாக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்கள்.

வன்முறை கும்பல் விவசாயிகள் மீது தாக்குதலை தொடுத்திருக்கிறது. பலர் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Exit mobile version