Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

டெல்லி தாக்குதல் உத்தரபிரதேசத்தில் வெடித்தது விவசாயிகள் போராட்டம்!

இந்தியாவில் நடக்கும் அத்தனை அரசுக்கு எதிரான போராட்டங்களிலும் ஒரே மாதிரியான தாக்குதல்கள் நடக்கின்றன. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது  ஆயுதம் தாங்கிய மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினார்கள். அவர்கள் கைது செய்யப்படவில்லை.ஆனால், போராடிய மாணவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடிய இஸ்லாமிய மக்கள் மீது குடியிருப்பு வாசிகள் என்ற பெயரில் மர்ம நபர்கள் கலவரம் செய்து அக்கலவரத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள். பெருவாரியானவர்கள் முஸ்லிம்கள். அதிலும் நடவடிக்கை இல்லை ஆனால் போராட்டத்தை தூண்டியதாக   பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்கும் கைது நடவடிக்கைகளும் பாய்ந்தன.

இப்போது 60 நாட்களுக்கும் மேலாக போராடும் விவசாயிகள் மீது சிங்கு பகுதி குடியிருப்பு வாசிகள் என்ற பெயரில் ஒரு கும்பல் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது. போலீஸ், ராணுவமும் தாக்குதல் நடத்திய கும்பலை கண்டுகொள்ளவில்லை. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், குடியுரிமை திருத்தச் சட்டம் போன்றவற்றில் எப்படி தாக்குதல் நடந்ததோ அதே பாணியில்தான் இந்த தாக்குதலும் நடந்துள்ளது.

இந்த தாக்குதல் செய்தி பரவியதும் ஹரியனா, பஞ்சாப், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து விவசாயிகள் பேரணியாக டெல்லி நோக்கி புறப்பட்டார்கள். மேலும் உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் விவசாயிகளின் மகா பஞ்சாயத்து கூடப்பட்டுள்ளது. இந்த பஞ்சாயத்தில் பல்லாயிரம் விவசாயிகள் திரண்டுள்ளார்கள்.

முசாபர்நகர் முன்னர் மதக்கலவரம் நடந்த இடம் அங்கும் இந்துப் பெண்களை முஸ்லீம்கள் தூக்கிச் செல்கிறார்கள் என்று பரப்பிய தகவலையடுத்து 50-க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள். இப்போது இந்துக்களும் முஸ்லீம்களும் திரண்டு போராடி வருகிறார்கள்.

Exit mobile version