Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

டிராக்டர் பேரணியில் கலந்து கொண்ட நூறு விவசாயிகளைக் காணவில்லை!

மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யக் கோரி டெல்லியை முற்றுகையிட்டு போராடிய விவசாயிகளில் நூற்றுக்கணக்கானோரை காணவில்லை என்று விவசாய சங்கத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.மோடி அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் 60-பது நாட்களுக்கும் மேலாக போராடி 11 கட்ட பேச்சுவார்த்தையை அரசோடு நடத்தினார்கள். ஆனால், மத்திய அரசு வேளாண் சட்டங்களை கைவிட மறுத்த நிலையில் குடியரசு தினத்தன்று டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணி அறிவித்தனர்.

உத்தரபிரதேசம், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உட்பட பல மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் டிராக்டர்களில் டெல்லியில் குவிய அது போலீஸ் விவசாயிகள் இடையே மோதலாக வெடித்தது. ஒரு விவசாயி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக விவசாயிகள் அறிவித்தார்கள்.
இப்போதும் டெல்லியில் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் இந்த போராட்டத்தின் பின்னர் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளைக் காணவில்லை என்று விவசாயிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்கள். பல விவசாயிகள் காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் இது குறித்து ஆய்வு செய்ய தனிக்குழுவையும் விவசாயிகள் அமைத்துள்ளார்கள். போராட்டத்தை நடத்தும் சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு இது தொடர்பாக தொலைபேசி தொடர்பு எண் ஒன்றையும் வெளியிட்டு. காணாமல் போன விவசாயிகள் தொடர்பான தகவல்களை சேகரித்து காவல்துறையிடம் அளிப்பார்கள் என்று விவசாய சங்கம் அறிவித்துள்ளது.

Exit mobile version