Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

டக்ளஸின் குழுவுக்கென ஓர் இலவச புகையிரத வண்டி !

மே தின ஊர்வலத்துக்காக வருகை தந்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியைச் சேர்ந்த குழுவினர் இலவசமாகப் பயணிக்கவென கொழும்பிலிருந்து வவுனியா வரையில் விஷேட புகையிரத வண்டியொன்றைக் கொடுக்க நேர்ந்ததன் காரணமாக இலங்கை புகையிரதத் திணைக்களத்துக்கு ரூபாய் 15 இலட்சத்துக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக அகில இலங்கை புகையிரத ஊழியர்களின் பொதுச் சேவை சங்கத்தின் தலைவர் திரு.எஸ்.பி. விதானகே தெரிவித்துள்ளார்.

அமைச்சர் திரு. குமார வெல்கம, புகையிரத நிலைய அதிகாரிகளுக்கு இட்ட கட்டளையின் காரணமாக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 11 பெட்டிகளைக் கொண்ட புகையிரத வண்டியொன்றை வவுனியா வரை ஓடச் செய்ததாகவும், 10,000 பயணிகள் பயணம் செய்யக் கூடிய இப் புகையிரதத்தில் அன்று 48 பயணிகள் மாத்திரமே பயணித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். விஷேட புகையிரத வண்டியை ஓடச் செய்வதென்றால், அப் புகையிரத வண்டியை ஓடச் செய்யும் நேரம், குறிப்பிட்ட புகையிரத வண்டிப் பாதையில் கடமையிலிருக்கும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் அனைவருக்கும் சில தினங்களுக்கு முன்பே அறியத்தர வேண்டும் என்றும் இப் புகையிரத வண்டியை ஓடச் செய்ய சொற்ப நேரத்துக்கு முன்பே புகையிரத நிலைய அதிகாரிக்கு அறிவித்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியைச் சேர்ந்தவர்களை வவுனியா வரையில் ஏற்றிச் சென்ற புகையிரதம் திரும்ப கொழும்பு வரை எந்தப் பயணிகளையும் ஏற்றாமலேயே திரும்பி வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version