கலை நோக்கில் ஜெய்பீம் மார்க்சிய அழகியலை ஒரு நவீனத்துவச் சட்டகத்தில் தீட்டிக் காட்டுகிறது. ஜெய்பீமில் அமைந்துள்ள புதிரீடு திரைக்கதையை நகர்த்தும் முக்கிய அசைவியக்கமாக உள்ளது. ஒரு நவீனத்துவ அவநம்பிக்கைவாதமும், மார்க்சிய நன்னம்பிக்கைவாதமும் முரணியக்கம் கொள்வதை இந்த படத்தில் காணலாம். குடிசை வீட்டில் வாழும் ராசாக்கண்ணு குடும்பம் செங்கல் வீட்டில் வாழ்வதை கனவாக கொண்டது. அந்த கனவு மிக விரைவிலேயே சிதைக்கப்படுகிறது. படம் முழுவதும் ஏக்கப் பெருமூச்சாக செங்கேணியின் கை பதிந்த ஒரு ஒற்றை செங்கல் படிமமாக வருகிறது. இராசாக்கண்ணுவுக்கும், செங்கேணிக்கும் நடக்கும் தீவிர அந்தரங்க உரையாடல்களில் எல்லாம் செங்கல் வீடு இடம் பெறுகிறது. ராசக்கண்ணு சித்திரவதைக்குள்ளாகும் அரை மயக்கத்தில் அது எட்டிப் பார்க்கிறது.
அது வசதியான வீடு பற்றிய கனவு மட்டுமல்ல; அதனை முன்னேற்றத்தின், சாதிய நுகத்தடியிலிருந்து வெளியேற விரும்பும், பொதுநீரோட்டத்தில் கலக்க விரும்பும் ஏக்கம் என்று பலவாறு புரிந்து கொள்ள முடியும். கோர்ட் தீர்ப்பின் போது அந்த வீடு சாத்தியமாவது போல தோன்றினாலும் அதில் வாழ இராசாக்கண்ணு உயிருடன் இல்லை. அதே நேரம் சட்டப் போராட்டத்தை முன்னெடுக்கும் சந்துருவின் போராட்டம் ஒரு நம்பிக்கையை சாத்தியமாக்கும் எதிர்பார்ப்பை முதலிலேயே ஏற்படுத்தி விடுகிறது. கம்யூனிஸ்ட்களின் போராட்டம், பிரச்சினையை எளிதில் விட்டுவிடாத அவர்களின் விடாப்படித்தன்மை, அரசு நிர்வாகம் மற்றும் போலீசுக்கு அது ஏற்படுத்தும் அழுத்தம் மற்றும் நெருக்கடி ஆகியவை இந்த வழக்குக்கு கிடைக்கப் போகும் தர்க்க முடிவு பற்றிய நம்பிக்கையை பார்வையாளர்களிடம் ஆரம்ப நிலையிலேயே கடத்துகிறது. செங்கேணியின் சிதைந்த கனவின் துன்பவியலும், கம்யூனிஸ்ட்கள் மற்றும் இடதுசாரி சிந்தனை கொண்ட வக்கீல் ஒருவரின் போராட்டம் வழங்கும் நன்னம்பிக்கைவாதமும் கொள்ளும் முரணிசைவில் தான் இப்படத்துக்கு ஒரு உருவ அமைதி கிடைக்கிறது. இது ஒரு ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை வாழ்வின் வலியை காட்சிப்படுத்தியதால் மட்டும் மார்க்சிய அழகியலை கொண்டிருக்கவில்லை. கம்யூனிஸ்ட்களின் போராட்டம் மிகக் குறைந்த அளவுக்கு தான் முக்கியத்துவம் பெற்றுள்ளது. வழக்கமான ஒரு பிரச்சார இலக்கியத்தின் திகட்டல் இல்லை.
பொதுச்சமூகம் அன்றாடத்தில் மும்முரமாக இயங்கிக் கொண்டிருக்க சில பேர் மட்டும் தீவிர முகபாவத்துடன் தோள்களில் சிகப்புத் துண்டை போட்டுக் கொண்டு கரங்களில் சிவப்புக் கொடியை ஏந்தியவாறு சாலை ஓரத்தில் முழக்கமிடும் காட்சிக்கீற்று ‘all is well’ என்று நம்பத் தலைபடும் பாவனையை கலைத்துப் போடுகிறது. சாதரணமாக கடந்து போக நினைக்கும் ஒன்றை அசாதாரணப்படுத்திக் காட்ட கம்யூனிஸ்ட்கள் போராட்டத்தை இயக்குநர் கையாள்கிறார். ஒரு சாதாரணப் பழங்குடி பிரச்சினையை உயர்நீதிமன்றம் வரை இழுத்து வந்து விட்டாயே என்று எஸ்.ஐ.ஐ டிஜிபி கடிவதில் அது வேறு முறையில் ஒலிக்கிறது. ஜெய்பீமில் போலீஸ் சித்திரவதை மிகை உணர்ச்சி வகைப்பட்ட நாடகீயத் தன்மையை கொண்டிருப்பதாக ஒரு விமர்சனம் வந்துள்ளது. வேறொரு காட்சிப் பொருளின் மீது அந்த உணர்ச்சிக் கடத்தப்படவில்லை என்பது போன்ற விமர்சனம். ஒரு பூவை கசக்குவது போலவோ அல்லது ஒரு பட்டாம் பூச்சியை நசுக்குவது போலவோ ஒரு காட்சிப் பிம்பம் இல்லை என்பது அது. நேரடி சித்திரவதைக் காட்சிகள் உணர்ச்சித் தூய்மையையும், பச்சாதாபத்தை கோருவதுமான முறையில் உள்ளது என்ற வகையில் அவை முன் வைக்கப்படுகின்றன.
இந்த விமர்சனத்தை முன் உணர்ந்ததாலோ என்னவோ இயக்குநர் சித்திரவதையை ஒரே நேரத்தில் முன் வைக்காமல் படம் முழுதும் பகுதி, பகுதியாக பகிர்ந்துள்ளார். இதன் மூலம் கலை இலக்கியத்தின் செவ்வியல் கால பாதிப்பு முறை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இன்னொன்று, அடுத்த நொடி ஒளித்து வைக்கும் ஆச்சரியம் நிறைந்தது அல்ல; ஆபத்து சூழ்ந்திருப்பது தான் ஒரு பழங்குடி வாழ்க்கை. இழப்புகளை எதிர்பார்த்து கழிவது தான் பழங்குடிகளின் அன்றாடம். வன்முறை அவர்கள் வாழ்வில் ஏற்கனவே நிறுவனமயமான ஒன்று. பொய்க் குற்றச்சாட்டை ஏற்க மறுக்கும் ராசாக்கண்ணுவும், நீதிக்கு போராடும் செங்கேணியும் பழங்குடிகளின் பிறழ் பாத்திரங்கள். இவற்றை கவனத்தில் கொள்ளாமல் விமர்சனம் என்ற பெயரில் வன்மத்தை உமிழ்வது போன்ற அபத்தம் ஏதுமில்லை.