சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா இன்று மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்தார். இப்போதைக்கு பெங்களூருவில் உள்ள பண்ணை வீட்டில் தங்கியிருக்கும் சசிகலா பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழகம் வர இருக்கிறார்.
அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும் நிலையில் சசிகலா ஜெயலலிதாவின் அடையாளங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்.
அதிமுகவின் கொடியை பயன்படுத்தும் சசிகலா ஜெயலலிதா பயன்படுத்திய காரையே இப்போதும் பயன்படுத்துகிறார். காரணம் ஜெயலலிதா, அதிமுக கட்சி இரண்டுக்குமான பிரதான நிறுவனமாக இருந்தது ஜெயா பப்ளிகேஷன்ஸ் என்ற நிறுவனம். இந்த நிறுவனத்தினால் நடத்தப்படுவதுதான் நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் மற்றும் ஜெயா தொலைக்காட்சி இரண்டும். இதுதான் அதிமுகவின் அதிகார பூர்வ பத்திரிகையாகவும், தொலைக்காட்சியாகவும் இருந்தது. இதன் பங்குதாரர் சசிகலாதான். அதனால் இவைகள் அவருக்கு உரிமையுடதாகவே இருந்து வருகிறது.
அந்த நிறுவனத்தின் பெயரில் ஜெயலலிதா கடைசியாக வாங்கிய காரும் சசிகலா கையில்தான் இருக்கிறது அதனால் அவரே அந்தக் காரை பயன்படுத்துகிறார். அதிமுக கட்சிக்கொடியை பொருத்தவரை சசிகலா இப்போது அதிமுகவின் பொதுச் செயலாளர்தான். அவர் சிறை சென்ற பிறகு அவரை அதிமுகவை விட்டு நீக்கியது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ளது. அந்த வழக்கில் சசிகலா கொடியை பயன்படுத்த தடை விதிக்கவில்லை. அதனால் அவர் பயன்படுத்துகிறார்.
மேலும் சிலர் இன்று சசிகலாவை புகழ்ந்ததால் சஸ்பெண்ட் ஆகியுள்ளார்கள். சசிகலா தமிழகம் வரும் போது மேலும் அதிமுகவில் உட்கட்சிப்பூசல் வெடிக்கலாம்.