Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஜெயலலிதாவின் ஊழல் கல்வியில் கைவைப்பதிலிருந்து ஆரம்பமாகிவிட்டதா என சந்தேகம்

ஊழல் மலிந்த கருணாநிதியின் குடும்ப ஆட்சியை முடிவிற்குக் கொண்டுவரை மக்கள் அவருக்கு எதிராக வாக்களித்தனர். இப்போது ஜெயலலிதாவின் ஆட்சி சமச்சீர்க் கல்வியை நிறுத்துவதில் ஆரம்பித்திருக்கிறது. இத்திட்டத்தின் அடிப்படையில் ஜெயலலிதா தனியார் கல்வி நிலையங்களிடம் பெருந்தோகையான பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளாரா என்ற சந்தேகம் வலுவடைவதாகத் தமிழ் நாட்டின் அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை, சமச்சீர் கல்வி முறையை இந்த கல்வியாண்டிலேயே தொடர்ந்து அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக பண்ருட்டியைச் சேர்ந்த எம். சேஷாச்சலம், சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை எஸ்.டி. மனோன்மணி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
அவர்கள் இருவர் சார்பிலும் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவையில் சமச்சீர் கல்விச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, அதன் அடிப்படையிலேயே சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், ஏற்கெனவே அமலில் உள்ள ஒரு சட்டத்தை, அமைச்சரவைக் கூட்டம் ஒன்றில் எடுக்கப்படும் ஒரு கொள்கை முடிவு மூலம் நிறுத்தி வைக்க முடியுமா?
தமிழக அரசின் சமச்சீர் கல்விச் சட்டம் சென்னை உயர் நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டு, ஏற்கெனவே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஒரு கொள்கை முடிவின் மூலம் செல்லாதது ஆக்க முடியுமா?
முந்தைய அரசு எடுக்கும் கொள்கை முடிவை, அடுத்து பொறுப்புக்கு வரும் அரசு மாற்றுவது நல்லதல்ல என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் முந்தைய அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி முறையை, இப்போது புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள அரசு கொள்கை முடிவு என்ற பெயரில் நிறுத்தி வைக்க முடியுமா என்பவை போன்ற கேள்விகளை நீதிமன்றத்தில் வில்சன் எழுப்பினார்.
சமச்சீர் கல்வித் திட்டத்தை கைவிடுவது என்பது, அரசுக்கு 200 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்துவது மட்டுமில்லாமல் மாணவர்களின் நலனையும் பாதிக்கும் என்று அந்த பொதுநல வழக்கில் கூறப்பட்டுள்ளது.
அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி சென்றடைய வேண்டும் என்கிற நோக்கில் உருவாக்கப்பட்ட சமச்சீர் கல்வித்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது:
சமச்சீர் கல்விச் சட்டத்தின் நோக்கம் மிகத் தெளிவானது. சிறந்த வல்லுனர்களைக் கொண்ட ஆய்வுக் குழு விரிவாக ஆராய்ந்து சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்த பரிந்துரை செய்துள்ளது. அந்தக் குழுவின் பரிந்துரைகளை எளிதாகப் புறக்கணித்து விட முடியாது. இது தவிர, ஏற்கெனவே, பெரும் தொகை செலவிடப்பட்டுள்ள நிலையில், மேலும் பெரும் தொகையை செலவிடுவது அவசியம்தானா?
இவை பற்றியெல்லாம் அட்வகேட் ஜெனரல் அரசுக்கு தக்க ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
மேலும், ஏற்கெனவே அமலில் உள்ள ஒரு சட்டத்தை, இந்த நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்ட சட்டத்தை அமைச்சரவைக் கூட்டத்தின் கொள்கை முடிவு மூலம் நிறுத்தி வைக்க முடியுமா என்பவை போன்ற கேள்விகள் மனுதாரர்கள் சார்பில் எழுப்பப்பட்டுள்ளன.
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தமிழக அரசின் சார்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Exit mobile version