Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஜெனீவா தீர்மானம் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்

gajanஜெனீவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும் என் எச்சரித்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதே வேளை கூட்டமைப்பு தவறாக நம்பிக்கை வழங்கி ஏமாற்றுவதாகவும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது. ஜ.நா. மனிதவுரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படும் தீர்மானம் குறித்து தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அதீத எதிர்பார்ப்புக்கள் இறுதியில் ஏமாற்றத்தையளிப்பதாகவே அமையும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு மக்களுடைய நலன் சார்ந்து ஒரு நிலைப்பாட்டினை முன்னெடுக்காத வரையில், தமிழர்களது 60வருட அரசியல் அபிலாஷைகளை நிறைவு செய்யும் வகையிலான தீர்மானமொன்றை சர்வதேசம் ஒருபோதும் கொண்டுவரப்போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் (Jaffna press club) ஜெனீவா தீர்மானம் குறித்து இன்;று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார் இந்தச் சந்திப்பில் மேலும் அவர் கருத்து வெளியிடும் போது, தமிழ்தேசிய கூட்டமைப்பு ஜெனீவாவுக்குச் செல்வதாக ஊடகங்கள் பரபரப்பான செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஜெனீவா தீர்மானம் குறித்து மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புக்களும் வலுவடைந்து வருகின்றன.

புதிய போர்க்குற்ற ஆதாரங்களையும் கூட்டமைப்பு கொண்டுசெல்வதாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன. சர்வதேசத்திடம், ஜ.நா.விடம் இல்லாத ஆதாரங்கள் எதனை கூட்டமைப்பு ஜெனீவாக்கு கொண்டு செல்கின்றது? தமிழ்க் கூட்டமைப்பு ஜெனீவாவுக்கு செல்கின்றது சரி. அங்கு சென்று என்ன செய்யப்போகின்றார்கள்? இன்றுவரையில் கூட்டமைப்பு ஜெனீவாவில் எதனை வலியுறுத்தப்போகின்றோம் என்ற தமது உத்தியோகபூர்வ நிலைப் பாட்டினை இதுவரைக்கும் தெளிவுபடுத்தவில்லை.

அண்மையில் தென்னாபிரிக்காவுக்குச் சென்றிருந்த கூட்டமைப்பின் தலைவர்,இரா.சம்மந்தன் தனது கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜெனீவா அமர்வுகள் குறித்தும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதில் 2012ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் அழுத்தம் கொடுக்கும் வகையிலான தீர்மானம் ஒன்று அமையவேண்டும் என குறிப்பிட்டிருக்கின்றார். இதுவே இவர்களுடைய நிலைப்பாடு.

2012ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தீர்மானம் இலங்கை அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவேண்டும், குறிப்பாக அதில் பொறுப்புக் கூறல் என்ற விடயத்தில் அதிகம் அக்கறை காட்டப்படவேண்டும் என்றவகையிலேயே அமைந்தது.

ஆனால் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியானபோது அதனை விமர்சித்திருந்த இதே கூட்டமைப்பு பின்னர் ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் அந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தினால் போதும் தமிழர்களுடைய அரசியல் அபிலாஷைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என 47நாடுகளுக்கம் கடிதம் எழுதியது.

இவர்களுடைய உத்தியோகபூர்வமான நிலைப்பாடு என்ன ? எனவே 2012ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் என்ன முன்னேற்றம் ஏற்படும்? என்பதெல்லாம் குழப்பமாகவே உள்ளன.

இன்றும் கூட சந்தர்ப்பம் கைநழுவிச் செல்லவில்லை. இன்னமும் காலம் இருக் கின்றது. 2013ஆம் ஆண்டு மனிதவுரிமைகள் பேரவையின் அமர்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் உலகம் 3ஆம் தரப்பாக களத்திலிருக்கும் மக்களுடைய நிலைப்பாட்டை ஐ.நா எதிர்பார்க்கின்றது.

அந்த எதிர்பார்ப்பு மக்கள் பிரதிநிதிகளால் நிறைவேற்றப்படாத வரையில் சர்வதேசம் எமக் காக ஒரு தீர்மானத்தை கொண்டுவரவோ, நிறைவேற்றவோ போவதில்லை. கடந்தாண் டைப்போன்று மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்து விட்டு இறுதியில் ஏமாற்றத்தை யளிக்கும் ஒரு முடிவே கிடைக்கும் என்றார்.

இப்பத்திரிகையாளர் மாநாட்டில் முன்னணியின் பொது செயலாளர் கஜேந்திரன் மற்றும் துணை தலைவர் மணிவண்ணன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Exit mobile version