Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஜீ.எல்.பீரிஸ் வருகைக்கு எதிராக பிரித்தானிய தமிழ்ப் பேசும் மக்களின் ஆர்ப்பாட்டம்

இன்று (19.10.2010) லண்டனில் அருண்டல் ஹவுஸ் இன் முன்பாக இலங்கை வெளிவிகார அமைச்சர் ஜீ.எல்.பீரிசின் வருகைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. The International Institute For Strategic Studies இன் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 1500 புலம்பெயர் தமிழர்கள் கலந்துகொண்டனர். சிக்கல்களுக்குப் பின்னாலான முன்னேற்றம் என்ற தலைப்பில் கருத்தரங்கில் உரையாற்றிய ஜீ.எல்.பீரிஸ் இன் வருகைக்கு எதிராக முழக்கங்களை முன்வைத்த பிரித்தானியா வாழ் தமிழ்ப் பேசும் மக்கள் இலங்கை அரசிற்கு எதிரான பதாகைகளைத் தாங்கியவண்ணம் காணப்பட்டனர். பிரித்தானிய தமிழ் போரமும், புதிய திசைகள் அமைப்பும் இலங்கை அரசிற்கும் போர்க்குற்றவாளிகளின் சர்வதேசப் பிரசன்னத்திற்கும் எதிரான இப் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்திருந்தன.

அமைபுக்கள் சார்பு நிலையின்றி தன்னிச்சையாக மக்கள் கலந்துகொண்டதை அறியக்கூடியதாக இருந்தது. புதிய திசைகளைச் சார்ந்த சத்தியன் பீ.பீ.சி சிங்கள சேவைக்கு ஆர்ப்பாட்டத்தின் மத்தியில் சிங்கள மொழியில் செய்வ்வியொன்றை வழங்கினார். மனித உரிமைகளின் பலிக்களமாக இலங்கை அமைந்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றார். புலிகளின் போர்க்குற்றம் குறித்து பீபீசி கேள்வியெழுப்பிய போது, புலிகளாக இருந்தாலும் சுந்தந்திர விசாரணை தேவை என வலியுறுத்திய சத்தியன், இன்றும் தொடரும் இனச் சுத்திகரிப்பை நிறுத்த நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றார்.

ஆர்ப்பாட்டத்தின் நடுவே புலி இலட்சனை பொறிக்கப்பட்ட கொடியொன்றை ஆர்ப்பாட்டக் காரர் ஒருவர் உயர்த்திக்காட்ட முற்பட்ட வேளையில் புதியதிசைகள் அமைப்பைச் சார்ந்தோர் ஆட்சேபனை தெரிவித்தனர். பின்னதாக பிரித்தானிய தமிழ் போரத்தைச் சேர்ந்தோர் புலி இலட்சனைக் கொடியை பாவிக்கவேண்டாம் என ஆட்சேபனை தெரிவித்த பின்னர் அது அங்கிருந்து நீக்கப்பட்டது.

தமிழிலும் ஆங்கிலத்திலும் துண்டுப்பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டன. புதிய திசைகள் அமைப்பினர் வெளியிட்ட துண்டுப்பிரசுரம் கீழே தரப்படுகிறது.

 யார் பயங்கரவாதிகள்?

ஈழத் தமிழ் பேசும் மக்கள் இன்று அவலங்களும் சிக்கல்களும் நிறைந்த துயர்படிந்த காலகட்டத்துள் வாழ்கின்றனர். மரணத்துள் மூழ்கிக்கொண்டிருக்கும் நமது தாய் மண் இந்து மா சமுத்திரத்தின் தெற்கு மூலையிலே கேட்பாரற்று அனாதரவாகக் காட்சிதருகிறது. தமிழ் பேசுகிறவர்கள் என்பதற்காகவே சிதைத்துச் சின்னாபின்னமாக்கப்படும் ஒரு மக்கள் கூட்டத்தின் மறுபகுதி நாங்கள். உலக சமாதானத்தின் மீட்பர்கள் என்று மார்தட்டிக்கொண்ட ஐக்கிய நாடுகள் சபை அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருக்க எமது உறவுகள் கொன்று போடப்பட்டனர். உலகத் தெருக்களில் ஜனநாயகத்தை மீட்பதாகக் கூறிக்கொண்டு போர்களைக் கட்டவிழ்க்கும் அமரிக்காவும் ஐரோப்பாவும் கைகட்டி வாய் மூடி மௌனித்திருக்க எமது தேசம் சூறையாடப்படுகிறது. இணைந்து கொண்ட சீனாவும் இந்தியாவும் அப்பாவி மக்களைச் சாரிசாரியாக சாட்சியின்றிக் கொல்வதற்கு ராஜபக்ச குடும்பத்திற்கு அத்தனை ஆதரவையும் வழங்கியிருக்கின்றன. எம்மைச் சுற்றியுள்ள அனைத்து அதிகாரங்களும் அனாதரவாக விடப்பட்ட அப்பாவிகள் மீது போர்ப்பிரகடனம் செய்துள்ளன. இவர்களுக்கெல்லாம் மத்தியில் கற்றுக்கொண்டு எமது உறவுகளுக்கு ஆதரவுக்கரம் நீட்ட புலம்பெயர் சூழலிலுள்ள எமக்கு மட்டும் தான் குறைந்த பட்ச வலுவாவது இருக்கின்றது.சிறீ லங்கா பேரினவாத அரசு சாட்சியின்றி ஐம்பாதாயிரம் மக்களைக் கொன்று குவித்துவிட்டு எஞ்சியவர்களை பட்டினி போட்டே கொன்று கொண்டிருக்கிறது. பாலியல் வல்லுறவுக்கு தமிழ்ப் பெண்கள் உட்படுத்தப்படுகிறார்கள். கொடிய பேரினவாதச் சிறைகளுள் அடைக்கப்பட்ட 15 ஆயிரம் மனிதர்களின் நிலை யாருக்கும் தெரியாது. திட்டமிட்டசிங்களக் குடியேற்றங்கள் தமிழர் பாரம்பரிய நிலங்களை சூறையாடிச் சிதைத்துக்கொண்டிருக்கிறது.
மனிதப் பிணங்களின் மேல் தனது சாம்ராஜ்யத்தை நிறுவ முனையும் இலங்கைப் பாசிச அரசுஇ எதுவுமே நடக்காதது போல உலக மக்களை ஏமாற்றுகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் மகிந்த ராஜபக்ச போர்க்குற்றத்தைபற்றிப் பேசவேண்டாம் என்று நெஞ்சை நிமிர்த்திச் சூழுரைக்கிறார். இலங்கையில் ஒரு இனத்தையே அழித்துக்கொண்டிருக்கும் சிங்கள பெளத்த அரச பயங்கர வாதத்தின் ஓர் அங்கமான ஜீ.எல்.பீரிஸ் பயங்கரவாதத்தை முறியடிப்பது என்கின்ற தலைப்பிலும்இ எப்படி தாம் மக்களைக் கொன்றோம்இ எப்படி அவர்களை இன்னும் அழிக்கிறோம் என்றும் இங்கிலாந்தில் பேச வந்திருக்கிறார். மனிதகுலத்தை வெட்கித் தலைகுனியச் செய்யும் கிரிமினல்கள் உலக அரங்கில் இன்னும் மனிதர்களாக உலாவருகிறார்கள். 60 ஆண்டுகளாகச் சிறுகச் சிறுகச் சிதைக்கப்பட்ட ஒரு தேசத்து மக்கள் கூட்டம்இ இன்று சந்திக்கும் மனிதப் பேரவலத்திற்கு நாம் என்ன பதில் கூறப் போகிறோம்.? எமது மக்கள் வலுவிழந்துவிட்டார்கள். நம்பிகையை உரைக்க நாம் மட்டும்தான் எஞ்சியுள்ளோம். எமக்கு நம்பிக்கை இன்னும் எங்கோ ஒரு மூலையில் காத்திருக்கிறது.
மத்திய இந்தியாவிலே இந்திய அரசின் அடக்கு முறைக்கு எதிராக வெற்றிகரமான போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் மக்கள்இ கஷ்மீரில் இந்திய அரசிற்கு எதிராகவும் பாக்கிஸ்தான் ஊடுருவலுக்கு எதிராகவும் போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கும் மக்கள் எமக்கு நம்பிக்கை தருகிறார்கள். நேபாளத்தில் அனைத்து வல்லரசுகளும் மக்கள் மீது நடத்திய யுத்ததிற்கு எதிராகப் போராடிப் பத்தே வருடங்களில் ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்ட மக்கள் எமக்கு நம்பிக்கையை உரைக்கின்றார்கள். நாங்கள் முற்றாகத் தோற்றுப் போனவர்கள் அல்ல. வெற்றிக்கான முதல் கற்றல் இதுதான். பாலஸ்தீனம் ஆக்கிரமிப்புச் செய்யப்படும் போதெல்லாம்இ ஐரோப்பிய மக்கள் அந்த அரசுகளுக்குக் கொடுக்கின்ற அழுத்தம் இஸ்ரேலை தோல்வியை நோக்கிச் நகர்த்திக்கொண்டிருக்கிறது. யாரெல்லாம் போராடுகிறார்களோ அவர்களிடம் தான் பலமிருக்கிறது. எம்மை கொன்று போடும் இலங்கை அரச பாசிசத்தை அழிக்க அவர்களோடு கைகோர்த்துக்கொள்வோம். இரு மாதங்களுக்கு முன்னர் லண்டனில் இலங்கை அரசின் இன அழிப்பிற்கெதிராக நடைபெற்ற போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ் நாட்டில் இயங்கும் ஓர் மக்கள் அமைப்பு தமிழ் நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் போராட்டம் நடத்தியது. எமது மக்களின் பட்டினிச் சாவிற்கு எதிராக உலக மக்களின் கவனத்தைத் திருப்பவும்இ அரசுகளுக்கு அழுத்தங்களை வழங்கவும்இ இனச்சுத்திகரிப்பையும்இ இனப்படுகொலையையும் உலக அரங்கிற்குக் கொண்டு செல்லவும் கைகோர்த்துக்கொள்வோம்.குருதிபடிந்த எமது தெருக்களில் வெற்றிக்காக மக்கள் எழுந்து வருவார்கள். உலகம் எம்மையும் தம்மோடு இணைத்துக்கொள்ளும். நாமும் அதனோடு இணைந்துகொள்வோம்.

Exit mobile version