நவம்பர் 25 தேதி முதல் சில ஆயிரம் பேருடன் துவங்கிய விவசாயிகள் போராட்டம் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ளும் விவசாயிகள் போராட்டமாக மாறியுள்ளதோடு. போராட்ட வடிவங்களும் மாற்றம் பெற்று வருகிறது. டெல்லிக்கான சாலைப் போக்குவரத்து முழுமையாக முடங்கியுள்ள நிலையில், ரிலையன்ஸ் அம்பானியில் நிறுவனங்களை முடக்குவதில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
பஞ்சாய், ஹரியானா மாநிலங்களில் உள்ள ரிலையன்ஸ் மார்ட்டுகள், பெட்ரோல் பங்குகளை பல மாதங்களாக முடக்கி வைத்திருந்த விவசாயிகள், சுங்கச்சாவடி முற்றுகை போராட்டங்களையும் அறிவித்திருந்தனர். முன்று நாள் முற்றுகை போராட்டம் இப்போது காலவரையற்ற போராட்டமாக மாறியுள்ளது. டெல்லியைச் சுற்றி எந்த ஒரு சுங்கச்சாவடிகளும் செயல்படவில்லை. சுங்கச்சாவடிகளுக்கு அன்றாடம் வரி கட்டும் மக்கள் இப்போது மகிழ்ச்சியாக கட்டணங்கள் இன்றி பயணிக்கிறார்கள். இது போன்ற செயல்பாடுகள் விவசாயிகள் போராட்டத்திற்கு பெரும் ஆதரவை பொது மக்கள் மத்தியில் உருவாக்கியிருக்கும் நிலையில், இப்போது ரிலையன்ஸ் அம்பானிக்குச் சொந்தமான ஜியோ நெட்வோர்க்கை முடக்கும் போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வருகிறார்கள்.
இம்மூன்று விவசாயச் சட்டங்களும் அம்பானி, அதானிக்கு ஆதரவானவை அவர்களுக்காகவே இச்சட்டங்கள் கொண்டு வரப்படுகிறது என அறிவித்துள்ள விவசாயிகள் முதன் முதலாக ஜியோ சிம்கார்டுகளை உடைக்கும் போராட்டத்தை அறிவித்தனர். தற்போது பஞ்சாப் , ஹரியானா மாநிலங்களில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான செல்போன் டவர்களை முடக்கும் போராட்டம் திவீரம் பெற்று வருகிறது.
பஞ்சாப்பின் நவான்ஷ்ஹார், பெரோஸ்பூர், மன்ஸா, பர்னாலா, பசில்கா, பாட்டியாலா மற்றும் மோகா மாவட்டங்களில் அமைந்துள்ள ஜியோவின் தொலைத் தொடர்பு கோபுரங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக மின் இணைப்பு துண்டிப்பு தொடர்கிறது. இதனால் பல இடங்களில் ஜியோ மொபைல் போன்கள் நெட்வோர்க் பிரச்சனையால் செயலிழந்தன. இந்த போராட்டம் நாடு தழுவிய அளவில் வலுப்பெற்றால் நாடு முழுக்க ஜியோ தொலைத் தொடர்பு துண்டிக்கப்படலாம் எனத் தெரிகிறது.