Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஜார்ஜ் பொன்னையா பேசியதில் என்ன தவறு?-ராஜ்

ஜார்ஜ் பொன்னையா பேசியதில் சிறுபான்மை மக்கள் நம்பிக்கை வைத்திருக்கும் திமுக அரசையும், காங்கிரஸ் – திமுக மக்கள் பிரதிநிதிகளையும் தரக்குறைவாக விமர்சித்தவை தான் முக்கியமாகப் பிரச்சினைக்குரியது. சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயல்பட்டார்கள் என்று எந்த நிகழ்வையும் அவரால் குறிப்பிட முடியவில்லை. இந்து அறநிலையத் துறை அமைச்சர் என்ற முறையில் சேகர்பாபு மண்டைக்காடு அம்மன் கோயில் தீ விபத்தில் ஏற்பட்ட சேதத்தை சரி செய்ய சென்றார். மாவட்டத்தின் அமைச்சர் என்ற முறையில் மனோ தங்கராஜ் உடன் சென்றார். ‘அதற்காக இந்துக்கள் ஓட்டுப் போட்டு விடுவார்களா?’ என்ற ஜார்ஜ் பொன்னையாவின் கேள்வி அபத்தமானது.

தீ விபத்தின் பழியை சிறுபான்மை மக்கள் மீது ஆர்.எஸ்.எஸ் போட்டால் ஜார்ஜ் பொன்னையாவுக்கு சம்மதமா? தீ விபத்து நடந்த அடுத்த நாளே அப்போதைய பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் மற்றும் பொன்னார் ஆகியோர் வல்லூறுகளை போன்று மண்டைக்காடு கோவிலை சுற்றிக் கொண்டிருந்தனர். ஒரு வேளை அதிமுக ஆட்சி நடைபெறுகிறது என்றால் கலவரம் செய்யவும் கொஞ்சம் முயற்சி செய்து இருப்பார்கள். திமுக – காங்கிரஸ் மக்கள் பிரதிநிதிகள் குறித்த ஜார்ஜ் பொன்னையாவின் கொச்சையான விமர்சனம் திமுக – காங்கிரசுடனான சிறுபான்மை மக்களின் உறவை இந்துத்துவச் சக்திகள் சித்தரிக்க விரும்பும் வண்ணம் உள்ளது. மேலும் மதச்சார்பற்றக் கட்சிகள் மீது அவநம்பிக்கை விதைத்து சிறுபான்மை மக்களிடம் அரசியலற்ற தன்மையை வளர்த்து மதவாதத்துக்குள் மூழ்கடிக்கும் திருப்பணியையும் அது உப விளைவாக செய்ய முயற்சிக்கிறது.அதே நேரம் ஸ்டேன் சுவாமி நிறுவனக் கொலை மற்றும் தனியாருக்கு சொந்தமான இடத்தில் சர்ச் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது போன்ற பிரச்சினைகளில் மோடி, அமித்சா மற்றும் ஆர்.எஸ்.எசை விமர்சித்து இருப்பவை அடி வாங்கியதன் வலி. அதுவும் அந்த விமர்சனம் ஒரு சாப முறையில் தான் இருக்கிறது. பொதுவாக ஆன்மீகவாதிகளின் கோப எதிர்வினை அப்படித்தானே இருக்கும். எம்.ஆர். காந்தி செருப்புப் போடாமல் நடப்பதை விமர்சிப்பது தான் ஜார்ஜ் பொன்னையாவின் பூமாதேவி விமர்சனம். சமூகவலை தளங்களிலே எம். ஆர். காந்தியின் நடவடிக்கை சிரிப்புக்கிடமானது. அவரது எளிமை ஒரு போலி நடிப்பு. ஒரு பக்கம் ஆடம்பர வசதிகள் செய்யப்பட்ட குளுகுளுகாரை பயன்படுத்திக் கொண்டு, காலில் செருப்புப் போடாத எளிமை போன்ற பாசாங்கு ஏதுமுண்டா? காந்தியின் எளிமையையே சரோஜினி நாயுடு கேலி செய்தார். எம்.ஆர். காந்தியின் எளிமை காந்தியினுடையதை விட காஸ்ட்லியானது. அது பகடிக்குரியது என்பதில் வேறுபட்ட கருத்து இருக்க முடியாது. கிறிஸ்தவ மக்கள் தொகை குறித்து அவர் கூறியது ஒரு மதவாதியின் வெற்றுப் பெருமை என்றளவிலானது. பெற்றோர் சம்மதத்துடன் நடைபெறும் காதல் திருமணங்களில் மதம் கடந்த காதல் திருமணங்கள் கிறிஸ்தவ மத மாற்றத்தில் தான் சென்று முடிகிறது. மக்கள் தொகை கணக்கீடு விவரத்தில் சொல்லி இருப்பதை விடவும் அதிகமாக கிறிஸ்தவர்கள் குமரி மாவட்டத்தில் இருக்கக் கூடும் என்பது தான் பொதுவான கணிப்பு. கிறிஸ்தவர் எண்ணிக்கை

கன்னியாகுமரியில் கூடி இருப்பதால் என்ன தீங்கு ஏற்பட்டு விட்டது? குமரி மாவட்டத்திற்கு ஒரு காஸ்மோபாலிட்டன் தன்மை தான் அதனால் கிடைத்துள்ளது.இந்த பிரச்சினையில் ஜார்ஜ் பொன்னையாவுக்கு கிறிஸ்தவர்களின் ஆதரவு இல்லை என்பதும் முக்கியமானது. பலரும் அவர் பேசியது தேவையற்றது என்று தான் நினைக்கிறார்கள். அப்படி நினைப்பவர்களில் இந்துத்துவத்தை எதிர்க்கத் தயங்குபவர்களும் உண்டு. கிறிஸ்தவர்கள் அனைவருமே இந்துக்களுக்கு எதிராக இருப்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்த இந்துத்துவ சக்திகள் முயல்கிறார்கள். எச். ராஜா, மாரிதாஸ் மாதிரியான நபர்கள் ஜார்ஜ் பொன்னையாவை கண்டிக்கும் சாக்கில் ஜெகத்கஸ்பர் போன்ற ஆக்டிவிஸ்ட் பாதிரியாளர்களையும் விமர்சிக்கிறார்கள். அதனை இந்துக்களில் இருக்கும் ஜனநாயக சக்திகள் கண்டிக்க முன்வர வேண்டும்.

Exit mobile version