Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஜார்ஜ் பொன்னையாகைது-வெளிவராத உண்மைகள்!

ஜார்ஜ் பொன்னையா விவகாரத்தை சங்கிகள் விடாமல் அரசியாலாக்கிக் கொண்டு வருகிறார்கள். பெரும்பான்மை சமூக ஆர்வலர்களும், முகநூல் கருத்தாளர்களும் ஆர்.எஸ்.எஸ் சொல்வதை போன்றே ஜார்ஜ் பொன்னையாவிலிருந்தே பிரச்சினை ஆரம்பித்துள்ளதாக நம்புகிறார்கள். இந்த சூழலில் பொன்னையா பேசுவதற்கு முன்பான நிலைமை என்னவென்பதை அறிந்து கொள்வது முக்கியமானதாகிறது.மார்த்தாண்டத்திலிருந்து திருவனந்தபுரம் செல்லும் சாலையில் ஒரு 10 கிலோமீட்டர் தொலைவில் அருமனை இருக்கிறது.

அங்கிருந்து ஆற்றூர் செல்லும் சாலையின் திருப்பத்தில் இருக்கிறது வெள்ளங்கோடு ஊராட்சியின் பனங்கரை கிராமம். அங்கு பிரதான சாலையிலிருந்து ஒரு நூறு மீட்டர் உள்வாங்கி ஒரு பெந்திகோஸ்து சபை இருக்கிறது. ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக பனங்கரை அரசுப் பள்ளி ஆசிரியர் ராஜையா அவர்களின் பகுதிநேர கிறிஸ்தவ ஜெப ஊழியத்தால் அந்த பகுதியை சேர்ந்த ஒரு முதியப் பெண்மணியின் தீராத வியாதி ‘குணமாகிறது.’ கைமாறாக பெற்ற ஒரு ஐந்து செண்டுக்கும் குறைவான இடத்தில் கட்டப்பட்டது தான் அந்த ஜெப ஆலயம். ராஜையா ஆசிரியர் (இப்போது பாதிரியார்) கட்டிய ஜெப வீட்டின் விசுவாசிகள் யாரும் பனங்கரை கிராமத்தை சேர்ந்தவர்கள் இல்லை. வேறு பகுதிகளிலிருந்து வந்தவர்கள். மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே அவர்கள் இருந்தனர். அதனால் பெந்திகோஸ்து சபைகளுக்கே உரிய அமர்க்களம்‌ எதுவுமின்றி ஆராதனைகள் நடந்துள்ளன.ராஜையாவின் முதுமையின் காரணமாக சபை டென்னிசன் என்ற பாதிரியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. டென்னிசன் ஜெப முறைகளில் சில மாற்றங்களை செய்ததாக தெரிகிறது. அது ராஜையாவுக்கு பிடிக்கவில்லை போலும். மேலும் டென்னிசன் சபையை பிரபலப்படுத்தி அதிக எண்ணிக்கையிலான விசுவாசிகளை கவர்ந்துள்ளார்.

மட்டுமல்லாமல் அந்த சபையை தனது பெயருக்கு மாற்றவும் செய்துள்ளார். இது இரண்டு விளைவுகளை ஏற்படுத்தியது. அதிக விசுவாசிகள் எண்ணிக்கை அந்த பகுதி இந்துத்துவக் கும்பலை எரிச்சல்படுத்தியுள்ளது. அதே போல் ஜெப ஆலையத்தை டென்னிசன் பெயர் மாற்றம் செய்தது ராஜையாவின் பிள்ளைகளை (ராஜையா இப்போது உயிருடன் இல்லை) பொறாமைப்பட செய்துள்ளது. அவர்கள் ஜெப ஆலயத்துக்கு உரிமை கோர முடிவு செய்தனர். டென்னிசன் எதிர்ப்பு என்பது சங்கிகளும், ராஜையாவின் பிள்ளைகளும் ஒன்றுபடும் புள்ளியாக மாறியது. இங்கு கவனிக்கக் கூடிய அவலம் ஒரு பாதிரியாரின் பிள்ளைகள் சங்கிகளுடன் கூட்டுச் சேர்ந்தது தான். நிலம் யாருக்கு சொந்தம் என்பது இறுதி செய்யப்படும் வரை ஜெப ஆலயம் ஆர்.டி.ஓவால் பூட்டி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜெப ஆலயத்துக்கு செல்லும் பாதையை பனங்கரை சர்ப்பக்காவின் (இந்துக் கோவில்) நிர்வாகி ஒருவர் தடுத்துள்ளார். பின்னர் அது போலீஸ் உதவியுடன் இடிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத் தரப்பு ஒரு சரியான முடிவை துரிதமாக எடுக்கத் தவறிய சூழலில் தான் பாதிரியார் டென்னிசன் அருமனையில் பகுதிரீதியாக கட்டப்பஞ்சாயத்து செய்பவரும், வருடம் தோறும் கிறிஸ்மஸ் விழாவை அரசியல் தலைவர்களை அழைத்து விமரிசையாகக் கொண்டாடுபவருமான ஸ்டீபனை நாடியுள்ளார். ஸ்டீபன் சர்ச்சின் பூட்டைத் திறக்கும் போராட்டத்தை அறிவித்தார். அதே நாளில் சர்ச் திறப்பதை எதிர்த்து சங்கிகளும் போராட்டத்தை அறிவித்தனர். அந்த போராட்டத்தில் ஜார்ஜ் பொன்னையா பேசியது தான் பிரச்சினை ஆகியுள்ளது. நாம் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். இந்த ஜெப ஆலயம் மட்டுமல்ல; பல தேவாலயங்களிலும் சங்கிகள் பிரச்சினை ஏற்படுத்தி வருகிறார்கள். அருமனையில் அமைந்துள்ள புனித யூஸ்டேக்கியஸ் கத்தோலிக்க தேவாலயம் 19–ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அதன் திருவிழாவில் காகிதப்பூ கட்டியதற்கு போலீஸ் மூலம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். பின்னர் ஸ்டீபன் மூலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு புகாரளிக்கப்பட்டு அனுமதிப் பெறப்பட்டுள்ளது. புனித யூஸ்டேக்கியஸ் தேவாலயம் ஏழைப் பெண்களுக்கு தையல் பயிற்சி, குழந்தைகளுக்கு இசைப் பயிற்சி என்று பல சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் ஒன்று. இந்த தேவாலயத்தின் பணிகளுக்குப் போட்டியாக சேவாபாரதியை களமிறக்கி உள்ளது ஆர்.எஸ்.எஸ். சேவா பாரதியின் அலுவலகம் ஒன்று அருமனையில் உள்ளது.

சிறுபான்மை மக்களின் அன்றாட சமய நடவடிக்கைகளுக்கு கடும் இடைஞ்சல் ஏற்பட்டுள்ளது. காவல்துறைக்கு புகாரளிக்கும் இளைஞர்களின் பெயர், முகவரி எல்லாவற்றையும் போலீஸ் வாங்கி வைத்துக் கொள்ளும். இதனை மத்தியதர வர்க்க மக்கள் விரும்பமாட்டார்கள் தானே. சங்கிகள் – போலீஸ் கூட்டு இந்த பகுதியில் ஆழமானது என்று கூறுகின்றனர் மக்கள். மணல் கடத்தல் மற்றும் பாறைகளை உடைத்து கற்களாக மாற்றும் குவாரிக் கொள்ளை இடையூறின்றி நடக்க இந்த புனிதக்கூட்டு துணை புரிகிறது. சங்கிகள் தொல்லைகள் கொடுப்பது போல எந்த இந்து மதக் கொண்டாட்டத்தையும் கிறிஸ்தவர்கள் எதிர்ப்பதில்லை. விநாயகர் ஊர்வலங்களுக்கு சில இடங்களில் இசுலாமிய மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் அளவுக்குக் கூட கிறிஸ்தவர்கள் எதிர்ப்பதில்லை. வெள்ளங்கோடு ஊராட்சி இந்துக்கள் அதிகம் வாழும் ஊர். இங்கு தொடர்ச்சியாக பாஜகவே வெற்றி பெற்று வந்துள்ளது. பனங்கரை ஊராட்சி வார்டில் பாஜகவை சேர்ந்த விஜயன் வெற்றி பெற்றுள்ளார். விஜயனை இயக்குபவர் நாயர் சாதியை சேர்ந்த அனி என்ற நபர். அதே சாதியை சேர்ந்த கேசவ விநாயகம் 2015 – இல் ஆர்.எஸ்.எஸிலிருந்து பாஜகவுக்கு அனுப்பப்பட்ட முக்கியப் புள்ளி. தமிழக பாஜகவின் மூளையாக விளம்பரப்படுத்தப்பட்ட அந்த நபர் அருமனையை சேர்ந்தவர். சிறுபான்மை கிறிஸ்தவ மக்கள் அடைகின்ற அழுத்தத்தின் ஆற்றல் மூலம் எங்கிருந்து வருகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. நண்பர் சுஜித்துடன் பனங்கரை பெந்திகோஸ்து கிறிஸ்தவ சபையை அடைந்த போது அந்தியொளி எங்கள் கால்களில் பரவியிருந்தது. ஒரு கொசுவர்த்திச் சுருளை பற்ற வைத்துக் கொண்டிருந்தார் காவலர் ஒருவர். நாங்கள் நெருங்கியதும் யார்? என்ன? என்று விசாரித்தார். எந்த தகவலாக இருந்தாலும் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். அருகாமையில் வசிக்கும் இந்துக்கள் ராஜையா பாஸ்டர் மீது பெருமதிப்பை வைத்து இருந்தனர். ஆண்களின் கைகளில் ஆரஞ்சு பூ பின்னப்பட்ட நூல்கள் சுற்றப்பட்டு இருந்தன.

குமரி மாவட்டத்தில் கிறிஸ்தவமும், இந்து மதமும் அருகருகே இயங்கும் மதங்கள். முரண்பாடுகள் தற்காலிகமானவையாகவே பெரும்பாலும் வெடித்து ஆறியுள்ளன. ஆர்.எஸ்.எஸின் எரிபொருள் உதவியின்றி அது நீடித்ததில்லை. எங்களிடம் பேசிய வழக்கறிஞர் ஒருவர் அந்த சர்ச்சுக்கு முறையான அங்கீகாரம் இல்லாததால் அது மறுபடியும் திறக்கப்படுவதற்கு சாத்தியங்கள் குறைவு என்றார். பல இந்துக் கோவில்களும் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதை ஒத்துக் கொண்டார். இறுதியாக பேசிய ஒரு தையல் கலைஞர் அரசாங்கத்தின் முடிவை வரவேற்றார். சர்ச் பூட்டப்படவில்லை என்றால் மக்கள் கொந்தளித்து இருப்பார்கள் என்றார். எந்த மக்கள் என்ற கேள்விக்கு புன்னகைத்தார். ஆர்.எஸ்.எஸ் அருமனையில் கால் பதித்த 80 களில் கம்யூனிஸ்ட்களை கொன்று அவர்களின் இரத்தம் குடித்துத் தான் வளர்ந்துள்ளது. அந்த தையல் கலைஞரின் கடைசி வார்த்தைகள் கனம் பொருந்தியவை. பல மவுன அர்த்தங்களை கடத்துபவை. இனி மேல் சிறுபான்மை மக்களை அச்சுறுத்த ஆர்.எஸ்.எஸ் கலவரம் செய்ய வேண்டியதில்லை. ஆர்.எஸ்.எஸ் விரும்பும் ஒரு வாழ்க்கைப் பாணிக்கு மக்கள் தாங்களாகவே ஒடுங்கி வாழப் பழகி விட்டார்கள். இது தான் ஜார்ஜ் பொன்னையா கைது நடவடிக்கையை வரவேற்கும் மக்களின் உளப்பாங்காக இருக்கிறது.

Exit mobile version