இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக தற்போது நடைபெற்றுவரும் ஜனாதிபதித் தேர்தல், தேர்தல் தோற்றத்தைவிட இராணுவ நடவடிக்கையொன்றொன்று இடம்பெறுவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆயுதம் தாங்கிய ஐந்திற்கும் மேற்பட்ட இராணுவ வாகனங்கள் தென்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் அவை தென் பகுதியின் பல இடங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
இதனைத்தவிர கடற்படையினரின் இரண்டு டோராப் படகுகள் காலி மற்றும் தங்காலைப் பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இலங்கையின் தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக இராணுவத்தினர் தேர்தலில் முக்கிய பங்காற்றுவதற்காக பாதுகாப்புச் செயலாளரின் நேரடிக் கண்காணிப்பு மற்றும் உத்தரவின் பேரில் நாடு முழுவதிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலைமை குறித்து இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம் கூடிய கவனம் செலுத்தி வருவதுடன் தமது நாடுகளின் தூதரக அலுவலகங்கள் ஊடாக அடுத்த மணித்தியாலங்களில் என்ன நடைபெறுகிறது என்பது குறித்து உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.