சோசலிசம் என்பது பொதுப்படக் கூறினால் சக்திக்கேற்ப உழைப்பு உழைப்புக்கேற்ப ஊதியம் என்ற அடிப்படையில் உற்பத்திச் சாதனங்கள் சமூக உடைமையாக உள்ள ஒரு சமூக அமைப்பைக் குறிக்கும். மாக்சியவாதிகள் அதைக் கம்யூனிச சமுதாயத்தினை எட்டுவதற்கு முந்திய நிலையாகக் கொள்வர். சோசலிசத்தின் கீழ் அரசு என்ற அமைப்பு இருக்கும். எனினும் அந்த அரசு முதலாளிய அரசுகளினின்று வேறுப்பட்டதாக உழைக்கும் மக்களின் அதிகாரத்தை நடைமுறைபடுத்துகிற அரசாக இருக்கும். சோசலிஸத்தின் கீழ் வர்க்கங்கள் இருப்பதால் வர்க்க முரண்பாடுகள் இருக்கின்றன. வர்க்க வேறுபாடுகள் அற்ற ஒரு சமுதாயத்தின் உருவாக்கத்தின் போக்கிலே அரசு சிதைந்து அழிகிறது. எனினும் சோசலிசம் என்பதை வெறுமனே உற்பத்திச் சாதனங்களின் மீதான அரச கட்டுப்பாடு என்று வரையறுக்கிறவர்கள் இருக்கிறார்கள். இவர்களிற் பெரும்பாலானவர்கள் சமூகத்தின் வர்க்கத் தன்மையை ஏற்பதில்லை. அதற்கான காரணம் அவர்கள் சமுதாயத்தின் வர்க்க இயல்பை அறவே அறியாதவர்கள் என்பதில்லை. ஆனால் அவர்கள் வர்க்க முரண்பாடுகளை விட அடிப்படையானவையாக வேறு சமூக அடையாளங்களைக் கருதுகிறார்கள்.
இஸ்லாமிய சோசலிசம், கிறிஸ்துவ சோசலிசம் என்பன இஸ்லாத்துக்கும் கிறிஸ்துவத்திற்கும்சோசலிசத்தன்மை வழங்குகிற முயற்சிகளாகத் தோன்றுகின்றன. எனினும் உண்மையில் நடப்பது ஏதெனில் சோசலிசத்தை மட்டுப்படுத்த மத அடையாளம் பயன்படுகிறது. இவ்வாறான கொள்கைகளை முன்வைக்கிறவர்கள் சமூகச் சீர்திருத்தத்தையும் வறுமையிலிருந்து நிவாரணத்தையும் சில சமயம் வௌ;வேறு அளவுகளில் சமூக நீதியையும் வற்புறுத்துவதற்காகத் தங்களது மதங்களிலிருந்து அந்தக் கொள்கைகட்குச் சாதகமான அம்சங்களை முன்வைக்கின்றனர். எனினும் எந்த மத நூல்களை அவர்கள் தமது ஆதாரங்களாகப் பயன்படுத்துகின்றனரோ அதே மத நூல்களின் பேரால் அதிகார பூர்வமான மத நிறுவனங்கள் முதலாளியத்தையும் வேண்டிய போது நிலவுடைமையையும் எப்போதும் ஏகாதிபத்தியத்தையும் நியாயப் படுத்துவதற்குத் தயங்குவதில்லை. எனினும் முற்போக்கான கிறிஸ்துவ, இஸ்லாமிய அமைப்புக்கள் கம்யூனிஸ்ற்றுக்கள் உட்பட இடதுசாரிகளுடன் பொதுவான சமூக விடுதலை நோக்கங்கட்காக ஒத்துழைத்துள்ளனர். அவர்களது பங்களிப்பு குறிப்பிட்ட வரையறைகளைத் தாண்ட வேண்டுமாயின் அவர்கள் மதவாதத்துடன் மோதாமல் அதைச் சாதிக்க இயலாது.
மத அடையாளத்தை விட வலுவான ஒரு சக்தியாக முன்னேறிய முதலாளிய நாடுகளில் தேசியவாதம் இருந்து வந்துள்ளது. அங்கெல்லாம் தேசியவாதத்தின் வலிமைக்கு முன் பணிந்து போய்த் தேசியவாதிகளாகவும் சோசலிசவாதிகளாகவும் தோற்றங் காட்டுகிறவர்கள் இருந்து வந்துள்ளார். அதே வேளை சோசலிசம் என்ற பேரில் மக்களைக் கவரவும் தேசிய வாதத்தை ஒரு வெறியாக வளர்த்துப் பெருமுதலாளியத்திற்குப் பணியாற்றியவர்களும் இருந்து வந்துள்ளனர். இவ்வாறான போலியான சோசலிசம் ஃபாஸிஸவாதிகளாற் பயன்படுத்தப் பட்டுள்ளது. அது மட்டுமன்றிச் சமூக ஜனநாயகவாதிகள் என்று தம்மைச் சொல்லிக் கொண்ட பல அரசியல் அமைப்புக்கள் தமது நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் தேசபக்தியின் பேரால் பிற தேசங்களையும் தமது நாட்டினுள் உள்ள தேசிய இனங்களையும், சமூகப்பிரிவுகளையும் ஒடுக்கும் போது அந்த ஒடுக்கு முறைக்கு உடந்தையாக்கி நிற்கவும் நேர்ந்துள்ளது. பிரித்தானிய தொழிற்கட்சி முதலாக ஐரோப்பியச் சமூக ஜனநாயக ‘இடதுசாரிக்” கட்சிகளும் கொலனிய யுகத்தில் இவ்வாறே நடந்து கொண்டன. இதனாலேயே அவற்றைச் ‘சமூக ஃபாஸிசவாதிகள்” என லெனின் குறிப்பிட நேர்ந்தது. சமூக ஜனநாயகவாதிகள் மட்டுமன்றிச் சந்தர்ப்பவாத அரசியலில் இறங்குகிற கம்யூனிஸ்ற்றுக்களும் தங்களை மாக்சியவாதிகள் என்று சொல்லிக் கொள்ளுகிற பிற இடதுசாரிகளும் அந்த விதமாகவே நடந்து கொள்ள நேரும் என்பதைப் பல ஐரோப்பிய நாடுகளிலும் இலங்கையிலும் இந்தியாவிலும் நேபாளத்திலும் கண்டிருக்கிறோம்.
ஒரு தேசியவாதி சோசலிஸத்தை ஏற்பவராக இருக்க முடியுமா இல்லையா என்ற கேள்விக்கு, முடியும் என்றே பதில் அமையும். ஆனால் அவரது தேசியவாதத்தின் தன்மை என்ன என்பதைப் பொறுத்து அவரது சோசலிசத்தின் தன்மை அமையும்.
தேசிய இனம், தேசம் என்பன மனிதரின் சமூக அடையாளங்கள். அவை வரலாற்றால் உருவானவை. அவ்வாறே அவை வரலாற்றுப் போக்கில் மாறக்கூடியவை. அவற்றுக்கு எந்தவிதமான நிரந்தர இயல்பும் இல்லை. அவை எப்போது முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை ஆராய்ந்தால் அவற்றுடன் இணைந்திருக்கிற வர்க்க நலன்களை நாம் அடையாளங் காணலாம்.
ஒரு தேசத்தினதோ தேசிய இனத்தினதோ பேரால் இன்னொரு தேசமோ தேசிய இனமோ ஒடுக்கப்படுகிற போது ஒடுக்குமுறையை நியாயப்படுத்தத் தேசிய உணர்வு தேசப்பற்று, தேசிய நலன் என்கிற விதமான கருத்துக்கள் பயன் படுகின்றன. ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் ஒரு அதிகார வர்க்கத்தின் நலன் சார்ந்த சிந்தனையே ஆதிக்கஞ் செலுத்துவதைக் காணலாம். இது கொலனிய யுகத்திற் காணப்பட்டது. நவ கொலனிய யுகத்திலும் காணப் படுகிறது. கொலனியமும் ஏகாதிபத்தியமும் மட்டுமன்றிப் மூன்றாமுலக நாடுகளின் அதிகார வர்க்கங்களும் இவ்வாறான தேசிய நலன்களை வற்புறுத்துவதைக் காணலாம். இவ்வாறான தேசியவாதத்தின் பின்னாலுள்ள அதிகார வர்க்கங்கள் பிற தேசங்கள் மீதான தமது ஆக்கிரமிப்பையும் அடக்குமுறையையும் சுரண்டலையும் நியாயப்படுத்தத் தமது சமூகத்தின் பெரும்பான்மையைத் திருப்திப்படுத்த வேண்டியுள்ளது. இங்கே கடும் வலதுசாரிப் போக்குடையோர் தேச நலன் என்பதை மட்டுமே வலியுறுத்தித் தமது ஒடுக்குமுறையை உள்நாட்டிலும் பிரயோகிப்பர். தம்மை சோசலிச வாதிகளாகக் கூறிக் கொள்ளும் சமூக ஜனநாயகவாதிகள் உள்நாட்டில் சில சமூகச் சீர்திருத்த நடவடிக்கைகளில் அக்கறை காட்டுவர். எனினும் சமுதாய அமைப்பை மாற்றுவது பற்றியோ தொழிலாளிவர்க்க அதிகாரம் பற்றியோ அவர்கள் உடன்பட மாட்டார்கள். உண்மையான சோசலிசவாதிகள் மட்டுமே தேசிய, தேசிய இன ஒடுக்குமுறையை எதிர்ப்பர். தேசங்களின் சுயநிர்ணய உரிமை என்ற கருத்து சோசலிஸச் சிந்தனையின் அடிப்படியிலிருந்தே எழுந்தது. லெனின் தான் அதனை முதலில் முன்வைத்தார் என்பதும் இன்று வரை வேறு நோக்கமின்றி நேர்மையாகச் சுயநிர்ணயக் கோட்பாட்டை ஆதரிப்பவர்களாக மாக்ஸிச லெனினிச வாதிகளே இருந்து வருகின்றனர் என்பதும் மறுக்க இயலாத உண்மைகள். மேலாதிக்கத்திற்கும் ஒடுக்கு முறைக்கும் சுரண்டலுக்கும் எதிராக விடுதலைக்காகப் போராடும் தேசியம், அந்த நோக்கங்கட்குட்பட்டு முற்போக்கானது. அத்தகைய விடுதலைப் போராட்டங்கட்கு இடதுசாரிகள் ஆதரவு வழங்குவது மட்டுமன்றி வழி நடத்தித் தலைமை தாங்கவும் இடமுண்டு. எனினும் விடுதலைக்காகப் போராடுகிற தேசிய இயக்கங்கள் எல்லாமே முற்போக்கான உலக நோக்கை உடையனவல்ல. அவற்றினுள் பலவாறான வர்க்க நிலைப்பாடுகளும் அரசியற் சிந்தனைகளும் இயங்குகின்றன.
பழைமைவாதம், அடிப்படையான சமூக அமைப்பைப் பேணும் நோக்கு என்பனவற்றையும் பிற தேசிய இனங்களையும் தேசங்களையும் இழிவாகவும் பகைமையுடனும் நோக்குகிற தன்மையையும் நாம் பல தேசிய விடுதலை இயக்கங்களினுட் காணுகிறோம். அதே இயக்கங்களுள் இவற்றுக்கு மாறான மனித சமத்துவமும் சமூக நீதியும் வேண்டிநிற்கும் போக்குக்களையுங் காணுகிறோம். இவ் விதமான எதிரெதிரான போக்குக்கள் குறுகிய காலத்திற்கு மட்டுமே ஒன்றாக இயங்க இயலும். இந்திய காங்கிரஸ், சீனாவின் கொமின்டாங் போன்றவற்றுள் இயங்கிய இடதுசாரிகள் அங்கு ஆதிக்கஞ் செலுத்திய நிலவுடைமை முதலாளியச் சிந்தனைகட்கு எதிராக உள்ளிருந்து போராட இயலாது போனதும் அக் கட்சிகளிலிருந்து வெளியேறினர்.
காங்கிரசும் கோமின்டாங்கும் இறுதியில் சுரண்டும் வர்க்கங்களின் அமைப்புக்களாகவே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றின. எனினும் கொலனியத்திற்கும் அந்நிய மேலாக்கத்திற்கும் ஆக்கிரமிப்புக்கும் எதிரான போராட்டமே முதன்மையான முரண்பாடாக உள்ள போது இடதுசாரிகள் அவற்றுடன் ஒத்துழைக்க வேண்டிய நிலையில் உள்ளனர். அதேவேளை அவற்றின் பிற்போக்கான நடவடிக்கைகளை நட்பு முறையிலும் கண்டித்தும் அழுத்தங்களைக் கொடுக்க நேரிடுகிறது.
முதலாளிய நலன்களை வலியுறுத்துகிற தேசியம் தேசிய விடுதலை இலக்கு எட்டப்பட்ட பிறகு தனது சுரண்டும் வர்க்கத் தன்மையை வெளிப்படுத்துகிறது. நாட்டினுள் தேசிய இன ஒடுக்கலிலும் தொழிலாளி வர்க்கதினதும் பிற உழைக்கும் மக்களினதும் போராட்டங்களை நசுக்குவதிலும் கவனங் காட்டுகிறது. தருணங் கிடைக்கும் போது தன்னை ஒரு பிராந்திய வல்லரசாக்க முயல்கிறது. அதுவும் போதாமல் தனக்கு வசதியானபோது பிற மூன்றாமுலக நாடுகட்கு எதிரான ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கும் போருக்கும் ஆதரவு தரவும் அது தயங்குவதில்லை.
இதற்கான காரணம் என்ன? தேசியத்தின் சுரண்டும் வர்க்கப் பரிமாணத்தின் அடிப்படையிலிருந்து மேற் கூறிய விதமான போக்குகள் உருவாகின்றன. இதற்கு மாறாகவும் தேசியம் இயங்கலாம். அந்தத் தேசியம் தேசியவாதத்தை முதன்மைப் படுத்துவதில்லை. அது தேசிய இனவிடுதலையை முதன்மைப் படுத்துகிறது. சகல தேசங்களதும் தேசிய இனங்களதும் சமத்துவத்தையும் சுதந்திரத்திற்கான உரிமையையும் அது வலியுறுத்துகிறது. அந்த உலக நோக்கின் இன்னொரு பரிமாணமாக அது பலவேறு சமூக ஒடுக்கு முறைகளையும் இல்லாது ஒழிப்பதிற் கவனங் காட்டுகிறது. அதன் வர்க்கப் பார்வை உழைக்கும் மக்களினதாகவே இருக்கும்.
தேசியம் என்பது பிற தாக்கங்கட்கு உட்படாது செயற்படக் கூடிய ஒரு கோட்பாடல்ல. அது எப்போதுமே வர்க்க நலன்களுக்கும் குறிப்பிட்ட ஒரு சமூக வர்க்கத்தினது அல்லது சில வர்க்கங்களது ஆதிக்கத்துக்கும் உட்பட்டே இயங்குகிறது.
விடுதலைப் போராட்டங்கள் அனைத்திலும் பெருந் தியாகங்களைச் செய்வோரும் வீரதீரத்துடன் போரிடுவோரும் பெரும்பாலும் உழைக்கும் மக்களும் சமூகத்தில் தாழ்நிலையில் வைக்கப்பட்டு உள்ளவர்களுமே ஆவர். ஆனாலும் தேசியவாத அமைப்புக்களில் அதிகாரம் அவர்களது கைகளில் இல்லை. எவ்வாறு சமூக உற்பத்தியில் அவர்களது உழைப்புச் சூறையாடப்பட்டு ஒரு சிறுபான்மை தன்னை வளப்படுத்திக் கொள்கிறதோ அவ்வாறு அல்லது அதைவிட மோசமாக அவர்களது தியாகங்களும் அர்ப்பணிப்பும் பங்களிப்புக்களும் வசதிபடைத்த வர்க்கத்தினருக்குப் பயன்படுகின்றன. குறிப்பாக விடுதலைப் போராட்டங்கள் வெற்றி பெற்ற அல்லது மேவி நிற்கிற சூழ் நிலைகளில் இந்தத் தன்மை வலுப்பெறலாம். இவ்வாறு நிகழும் போது ஒரு ஒடுக்கு முறையாளனிடமிருந்து பெற்ற வெற்றியை ஏகாதிபத்தியத்திடம் இழந்துவிடுகிற நிலை உருவாகலாம். இதற்குத் தென்னாபிரிக்காவும் ஒரு உதாரணமாகி வந்துள்ளது.
தேசியம் என்பது முழுமையான தேசிய அல்லது தேசிய இன விடுதலையாக அமைய வேண்டுமானால், உள் விவகாரங்களில் சமூகநீதி, மனித சமத்துவம் (அதாவது சோசலிஸ நோக்கங்கள்) என்பனவற்றுடன் தன்னை அடையாளப் படுத்த வேண்டும். வெளி விவகாரங்களில் அது ஏகாதிபத்திய எதிர்ப்பில் முனைப்பாக இருக்க வேண்டும். இத்தகைய தேசியம் சர்வதேசிய உணர்வுடன் உடன்பாடானதும் தேசிய விடுதலையை மானுடவிடுதலையுடன் சேர்த்து முன்னெடுப்பதுமாக அமையும். அப்போது தேசியமும் சோசலிசமும் கியூபாவிற் போன்று உடன்படுகின்றன.
தேசியத்தின் தன்மையும் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தன்மையும் முதலாவதாக எந்த வர்க்கப் பார்வையும் வர்க்க நலன்களும் ஆதிக்கஞ் செலுத்துகின்றன என்பதிலேயே தங்கியுள்ளன.