Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

செம்மொழி மாநாடு : தமிழறிஞர்களின் தமிழ் அரசியல்- தமிழ் சசி.

மொழி என்பது மக்களின் வாழ்க்கையை எளிமையாக்கும் ஒரு கருவி. ஒருவரிடம் மற்றொருவர் உரையாடிக் கொள்வதில் தொடங்கி கருத்துக்களை படைப்புகளாக வடிவமைத்தல், பேச்சாற்றலைக் கொண்டு மக்களை ஈர்த்தல் என மொழியை வெறும் கருவியாக மட்டுமாக‌க் கூட‌ பார்க்கலாம். அதே நேரத்தில் மொழி ஒரு பண்பாட்டு தளத்தையும் உருவாக்குகிறது. அதனால் தான் ஆசியா முழுவதும் ஒரே மாதிரியாக தெரியும் பல்வேறு பண்பாட்டு அம்சங்கள், ஒவ்வொரு மொழியை பேசுபவர்களின் சூழலுக்கு ஏற்ப சில வேறுபாடுகளுடன் தனித்தனி பண்பாட்டுக் கூறுகளாகவும் வெளிப்படுகிறது. இப்படி மொழியைச் சார்ந்த ஒரு பண்பாடும், தனித்த அடையாளங்களும் எழும் பொழுது அந்த அடையாளத்தை முன்னிறுத்தி, தேசிய இனங்களாக அந்தப் பண்பாட்டினைச் சார்ந்த மக்களை முன்னிறுத்துகிறோம். எனவே மொழி வெறும் கருவியாக மட்டுமே இல்லாமல் அதன் பண்பாட்டு அம்சங்களைக் கொண்டு மக்களுடன் பின்னிப்பிணைந்து இருப்பதால் மொழியையும், அம் மொழி பேசும் மக்களையும் எவ்வளவு எளிதில் பிரித்து விட முடிவதில்லை.

தங்கள் மொழிக்குப் பிரச்சனை நேரும் பொழுது அம் மொழி பேசும் மக்கள் வெகுண்டு எழுந்து தங்கள் மொழியைக் காக்க முனைகின்றனர். தமிழ் மொழி பேசுபவர்களிடம் ஹிந்தி திணிக்கப்படும் பொழுது அம் மொழியைப் பேசும் தமிழர்கள் கிளர்ச்சி செய்கின்றனர். சிங்களம் மட்டும் தேசிய மொழியாக்கப்பட்ட பொழுது இலங்கையில் தமிழர்கள் வெகுண்டு எழுந்தனர். ஒரே ம‌த‌த்தைச் சார்ந்து இருந்தாலும் பேசும் மொழி வேறாக‌ இருந்த‌தால் கிழக்கு பாக்கிஸ்தான், ப‌ங்க‌ளாதேஷாக மாறியது.

மொழியும், மொழிச் சார்ந்த வளர்ச்சியும் எப்பொழுதுமே சாமானிய மக்களை உள்ளடக்கி இருந்தால் சிறப்பானது. ஆனால் அவ்வாறு தமிழ் மொழி என்றைக்கும் இருந்ததில்லை. தமிழ் மொழியின் இலக்கியங்கள் மக்களின் இலக்கியங்களாக இல்லாமல் மேட்டுக்குடியினரின் இலக்கியமாகவே இருந்து வந்திருக்கிறது. தமிழ் இலக்கியங்களில் மண்ணின் மணம் இல்லை. மண்வாசனை இல்லை. தமிழ் மக்களின் இயல்பான வாழ்க்கை ஏன் பெரும்பான்மையான தமிழ் இலக்கியங்களில் முன்வைக்கப்படவில்லை என்ற கேள்வி எனக்கு எப்பொழுதுமே உண்டு.

தற்கால இலக்கியங்களே குறிப்பாக தலித் இலக்கியம் போன்றவையே மக்களை முன்னிறுத்துகின்றன‌.

ஒரு உதாரணம் கூற வேண்டும் என்றால், கூத்து சாமானிய மக்களின் கலை. ஆனால் கூத்துப் பாடல்கள் என்றைக்கும் இலக்கியமாக தமிழ்ச் சூழலில் இருந்ததில்லை. கூத்துப் பாடல்கள் சாமானிய மக்களின் இலக்கியங்கள். ஆனால் அவை வெறும் கூத்துகளாக கட்டமைக்கப்பட்டு விட்டன. இப்படி சாமானிய மக்களின் வாழ்க்கையையும், வாழ்வியலையும் தமிழறிஞர்களும், தமிழ்ப்புலவர்களும் புறக்கணித்தே வந்துள்ளார்கள்.

இப்படியான இந்த மொழி அரசியல் தொடர்ச்சியாக காலங்காலமாக தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இன்றைக்கும் நடந்து கொண்டிருக்கிறது.

மொழியையும், மொழி பேசும் மக்களையும் வேறுபடுத்துவது என்பது ஒரு நுண்ணிய அரசியலாகும். நான் பேசும் மொழி என்றளவில் தான் தமிழ் மொழி மீது எனக்கு காதலே தவிர வெறும் மொழி என்றளவில் இல்லை. இங்கே முன்னிறுத்தப்படுவது நான் என்ற என்னையும், நாம் என்ற மொழி பேசும் மக்களையும் தான். மொழிக்குச் சிறப்பு என்பது மொழியைச் சார்ந்தது மட்டும் அல்ல. மொழி பேசும் மக்களையும் உள்ளடக்கியே தான் இருக்க முடியும்.

ஆனால் தமிழறிஞர்கள் என்றைக்கும் அவ்வாறு இல்லாமல் போனதன் அரசியலை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். இதற்கு முக்கிய காரணம் மொழியை முன்னிறுத்துகிறோம் என்று கூறி இவர்கள் முன்னிறுத்தியது தங்களின் அரசியலை தான். அதாவது தனி மனிதர்களான தங்களையே இவர்கள் முன்னிறுத்தி இருக்கிறார்கள்.

சரி..இதையெல்லாம் ஏன் எழுதிக் கொண்டிருக்கிறேன் ? ஏனெனில் இன்றைக்கும் இத்தகைய ஒரு நுண்ணிய அரசியலே தமிழ்ச் சூழலில் வெளிப்பட்டு வருகிறது. மொழியையும், மொழி பேசும் மக்களையும் பிரித்து மொழிக்கு நன்மை என்று கூறும் ஒரு நுண்ணிய அரசியலை தமிழறிஞர் கூட்டம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. அந்த நுண்ணரசியல் இடம் பெறும் இடம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவையில் அடுத்த மாதம் (சூன் மாதம்) நடைபெற இருக்கிறது. ஆரம்பத்தில் இந்த மாநாடு அறிவிக்கப்பட்ட பொழுது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழறிஞர்கள் எல்லாம், ஒவ்வொருவராக மாநாட்டில் ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி ஐக்கியமாகி விட்டனர். இவர்கள் எல்லோரும் கூறும் காரணத்தை ஒரு வார்த்தையில் தொகுக்க முடியும் – அது இந்த மாநாட்டால் தமிழுக்குக் கிடைக்கும் நன்மையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே. ஆனால் இது ஒரு மேல் பூச்சான காரணமே தவிர, உண்மையான காரணம் – இந்த மாநாட்டில் இடம் பிடித்து வரலாற்றில் இடம் பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தம், இந்த மாநாட்டினை புறக்கணிப்பதால் தமிழக அரசை பகைத்துக் கொள்ள வேண்டுமோ என்ற அச்சம், இவ்வளவு பெரிய மாநாட்டினை நம்முடைய புறக்கணிப்பு என்ன செய்து விடும் எனவே கலந்து கொள்வோம் என்ற சால்ஜாப்பு போன்றவையே.

இவ்வாறு ஏதேனும் ஒரு காரணத்தைக் காட்டி தமிழின் அனைத்துத் துறைகளும், அமைப்புகளும் இன்று இந்த மாநாட்டில் இடம் பிடித்து விட்டன. தமிழ் வலைப்பதிவுகள், தமிழ்க் கணினி, தமிழ் இணையம், தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி பல்வேறு நாடுகளில் இருக்கும் பல தமிழ் அமைப்புகளும், தமிழ்ச் சங்கங்களும் இந்த மாநாட்டில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு அமைப்பும் ஏதோ ஒரு காரணத்தைக் கூறி தங்களை இணைத்துக் கொள்கின்றன. ஒரு உதாரணத்திற்கு தமிழ் விக்கிப்பீடியா இந்த மாநாடு மூலம் வீக்கிப்பீடியாவிற்கு ஆயிரக்கணக்கிலான கட்டுரைகள் கிடைக்கும் என்ற காரணத்தை முன்வைத்து செம்மொழி மாநாட்டில் தன்னை இணைத்துக் கொள்கிறது. பல தமிழ் ஆர்வலர்களை உள்ளடக்கிய தமிழ் விக்கிப்பீடியா குழுவே இவ்வாறு என்றால் அரசியல்வாதிகளை உள்ளடக்கிய தமிழ்க் கணினி அமைப்பான உத்தமம் (INFITT), தமிழ்ச்சங்கங்கள் போன்றவைகளைப் பற்றி நாம் யோசிக்க வேண்டியதில்லை.

அரசு அறிவித்த அடுத்த நிமிடமே இந்த அமைப்புகள் செம்மொழி மாநாட்டுடன் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டன. தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ்மணம் பங்கேற்கலாமா, வேண்டாமா என்ற விவாதம் நடந்த பொழுது, எந்தக் காரணம் கொண்டும் இத்தகைய மாநாட்டில் பங்கேற்க கூடாது என்பதே என்னுடைய நிலைப்பாடாக இருந்தது. இதனால் தமிழ்மணத்திற்குச் சில இழப்புகள் நேரலாம். ஆனால் தமிழுக்கு நன்மை என்று கூறி செம்மொழி மாநாடு நடத்தப்படுவதன் அரசியலை என்னால் புறந்தள்ள முடியவில்லை. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. You can put lipstick on a Pig. But it is still a pig. தமிழுக்கு நன்மை என்ற உதட்டுச் சாயத்தை அணிந்து வரும் செம்மொழி மாநாட்டின் துரோக அரசியலை நம்மால் புறந்தள்ள முடியாது.

மொழியையும், மொழி பேசும் மக்களையும் பிரித்து செய்யும் அரசியல் வஞ்சகமானது. இன்று மொழியை கொண்டாடும் சூழல் ஈழத் தமிழர்களுக்கு இல்லை. இன்னும் சுமார் ஒரு லட்சம் மக்கள் தடுப்பு முகம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தடுப்பு முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் ஒரு அசாதாரணமான சூழ்நிலையையே எதிர் கொண்டுள்ளது. கடந்த காலங்களின் ரணங்களை கடந்து அவர்கள் மீண்டு வரவே சில ஆண்டுகள் ஆகலாம். இதற்கெல்லாம் காரணம் என்ன ? அவர்கள் பேசும் மொழி. தமிழ் மொழி தான் இன்றைக்குப் பல்லாயிரம் மக்கள் பலியிடப்படுவதன் காரணமாக அமைந்து விட்டது. தமிழர்களாக அவர்கள் இருந்ததால் தான் முல்லைவாய்க்கால் கடற்கரைகளில் ஆர்ட்டலரிகளுக்கு பலியாகினர். அப்படியான சூழலில் மொழியைக் கொண்டாடி, மாநாடு எடுத்து சிறப்பிப்பது ஈழ மக்களின் துயரங்களை புறந்தள்ளும் செயலே ஆகும்.

அது மட்டுமில்லாமல் இன்றைக்கு செம்மொழி நடத்தப்படுவது தமிழ் மொழிக்காக அல்ல. இந்த மாநாடே கருணாநிதியின் தமிழினத்தலைவர் பட்டத்தை மீள்கட்டமைக்கவே கொண்டு வரப்பட்டது. கருணாநிதியின் திமுக ஈழத்தமிழர் பிரச்சனையின் பொழுது தன் பதவியை காப்பாற்றிக் கொள்ள முனைந்ததே தவிர தார்மீக அடிப்படையில் தமிழர் நன்மையை கருத்தில் கொள்ள வில்லை. ஈழத்தில் நடந்தப் போரை கருணாநிதியால் தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என்பது அல்ல நம்முடைய நிலைப்பாடு. ஆனால் அந்தப் போர் நடைபெற்ற சூழலில் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியையே தமிழர்கள் எதிர்நோக்கி இருந்தனர். காரணம் கருணாநிதி தமிழினத்தலைவராக பார்க்கப்பட்டார். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் சிங்கள அரசுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்த நிலையில் தமிழர்கள் தனித்து விடப்பட்டனர்.

தனித்து விடப்பட்ட தமிழர்கள் தங்களுக்குள்ளாவது ஒற்றுமையாக குரல் கொடுத்து இருந்தால் 25000க்கும் மேற்பட்ட தமிழர்களின் இனப்படுகொலையை ஓரளவுக்காவது தடுத்திருக்க முடியும். ஆனால் தமிழர்களுக்குள் பிளவு ஏற்படுத்தியதில் முக்கியப் பங்கு வகித்தவர் திருக்குவளை முத்துவேல் கருணாநிதியே ஆவார். தன்னுடைய திமுக அரசாங்கம் தமிழகத்தில் காங்கிரசை நம்பி இருப்பதால் தன்னுடைய பதவியை காப்பாற்றிக் கொள்ள பல்வேறு நாடகங்களை நடத்தி தமிழின அரசியலை நீர்த்துப் போகச் செய்தார். தமிழக மக்கள் அவரது நாடகங்களை உணர்ந்த பொழுது சகோதரச் சண்டை என்று புதிய ஆயுதத்தை எடுத்தார். தமிழின அரசியல் பேசியவர்களை சிறையில் தள்ளவும் அவர் தயங்கவில்லை. எல்லாம் முடிந்து குறைந்தபட்சம் தடுப்பு முகாம்களில் இருக்கும் மக்களை விடுவிக்க கூட எவ்வித‌ முயற்சியிலும் அவர் இறங்கவில்லை. தடுப்பு முகாம்களுக்கு சென்று ராஜபக்சேவுக்கு ஆதரவு கொடுக்கும் நிலையையே திமுக நாடாளுமன்றக் குழு எடுத்தது.

இவ்வாறு தன்னுடைய பதவியை காப்பாற்றிக் கொள்ள தமிழின விரோத அரசியல் செய்த கருணாநிதியின் செல்வாக்கு உலகத்தமிழர்கள் மத்தியில் சரிந்தது. தமிழினத்தின் தலைவராகப் பார்க்கப்பட்ட கருணாநிதி, உலகத்தமிழர்களாலும் ஈழ ஆதரவாளர்களாலும் வெறுக்கப்பட்டார். இழந்த தன்னுடைய நிலையை உலகத்தமிழர்களிடம் பெற வேண்டிய நிலையில் கருணாநிதி இருந்தார். கருணாநிதியின் செல்வாக்கினை புதுப்பிக்க உதயமானது தான் செம்மொழி மாநாடு. அதுவும் இந்தச் செம்மொழி மாநாடு உருவாக்கப்பட்டச் சூழலையும் நாம் கவனிக்க வேண்டும்.

உலகத்தமிழ் மாநாடுகளை நடத்தும் பொறுப்பு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கே உள்ளது. முதலில் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தை அணுகிய கருணாநிதிக்கு பரவலான எதிர்ப்பே எழுந்தது. ஜப்பானிய கல்வியாளரும், தமிழ் மொழியில் மேதையுமான பேராசிரியர் நோபோரு கராஷிமா மாநாடு நடத்த போதிய அவகாசம் இல்லை என்று கூறி மாநாட்டை உடனே நடத்த மறுத்தார். அவர் மாநாட்டினை நிராகரிக்க வில்லை. ஆனால் கூடுதலான அவகாசத்தையே கேட்டார். ஆனால் கருணாநிதிக்கு உடனடியாக மாநாடு நடத்தியாக வேண்டிய நிர்ப்பந்தம். சில மாதங்களில் செம்மொழி மாநாட்டினை நடத்தியே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் தமிழுக்கு நேர்ந்தது அசாதாரணமானது தான்.

சில மாதங்களில் ஒரு மாநாட்டினை நடத்த வேண்டும் என்றால், ஒரு புதிய தமிழ் அமைப்பினை உருவாக்க வேண்டும். அதைத் தான் கருணாநிதி செய்தார். உலக செம்மொழி நிறுவனத்தை புதியதாக உருவாக்கி அந்த நிறுவனம் மூலமாக மாநாடு நடத்த முனைகிறார் கருணாநிதி. எப்பாடு பட்டாவது இழந்த தன்னுடைய பெயரை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும் என்பதே அவரது நிலை.

செம்மொழி மாநாட்டை நடத்தும் சூழ்நிலையிலும் கருணாநிதியின் தமிழின எதிர்ப்பு அரசியல் முடிவுக்கு வரவில்லை. செங்கற்பட்டில் இருந்த ஈழத் தமிழ் இளைஞர்கள் மீது போலீஸ் அராஜகம் ஏவப்பட்டது. சென்னைக்கு வந்த 80 வயது மூதாட்டியான பார்வதியம்மாள் திருப்பி அனுப்பபட்டார். பார்வதியம்மாள் திருப்பி அனுப்பப் பட்டதற்கு இந்திய அரசு மட்டுமே காரணம் என்ற வாதத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஜெயலலிதா அனுப்பிய அறிக்கையை தனக்குச் சாதகமாக கருணாநிதி இந்த விடயத்தில் பயன்படுத்திக் கொண்டார் என்பதே உண்மையாக இருக்க முடியும். செம்மொழி மாநாடு நடைபெறும் சூழலில் தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் தாயார் வைகோவின் பராமரிப்பில் இருப்பதை கருணாநிதியால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ? விமான நிலையம் வரைக்கும் வந்த பார்வதியம்மாள் கருணாநிதிக்கு தெரியாமல் திருப்பி அனுப்பபட்டிருப்பார் என்பதை திமுக உடன்பிறப்புகள் வேண்டுமானால் நம்பலாம். அதிகாலையிலேயே விமான நிலையத்தில் குவிக்கப்பட்ட போலீசார் கூட கருணாநிதிக்கு தெரியாமலேயே குவிந்து விட்டார்கள் போலும். தமிழக காவல்துறை கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இல்லாமல் மன்மோகன் சிங் கட்டுப்பாட்டிலா உள்ளது ?

இப்பொழுது தமிழக அரசின் பாதுகாப்பில், தமிழக அரசின் செலவில், தமிழக அரசு சொல்லும் மருத்துவமனையில் பார்வதியம்மாள் சிகிச்சை பெற ஒப்புக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் பார்வதியம்மாள் தமிழகத்தில் சிகிச்சை பெற இருக்கிறார். அதாவது கருணாநிதியின் கருணையால் பார்வதியம்மாள் சிகிச்சை பெற இருக்கிறார். தடுப்பு முகாம்களில் உள்ள தமிழர்களுக்கும், தடுப்பு முகாம்களில் இருந்து வெளியே வந்தும் அனாதைகளாக சுற்றித் திரியும் வயதான தமிழர்களுக்கும் இன்னமும் நாதி இல்லாத சூழ்நிலையில் ஒரு பார்வதியம்மாளுக்காவது இப்படி ஏதேனும் ஒரு வழியில் சிகிச்சை கிடைப்பது நமக்கு மகிழ்ச்சியே.

இப்படி தொடர்ச்சியான தமிழினத்திற்கு எதிரான அரசியல் முன்னிறுத்தப்படும் சூழலிலும் தமிழறிஞர்கள் தமிழுக்கு நன்மை என்ற வாதத்தை முன்வைப்பது எவ்வளவு அபத்தமானது என்பதை நாம் விளக்க தேவையில்லை. தமிழறிஞர்கள் என்பவர்கள் தங்களின் சுயநலத்தை அடிப்படையாக கொண்டே இம் மாநாட்டினை ஆதரிக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
அதே நேரத்தில் நான் யாரையும் செம்மொழி மாநாட்டை புறக்கணியுங்கள் என சொல்லப் போவதில்லை. எண்ணற்றப் புறக்கணிப்பு முழக்கங்களையும், எண்ணற்ற மனுக்களையும், தொலைபேசி அழைப்புகளையும், மின்னஞ்சல்களையும் அனுப்பி அலுத்தும் போய் விட்டது. நான் இங்கு முன்வைப்பது இவர்களின் அரசியலையே ஆகும். தமிழர்களின் அரசியல் அலங்கோலமே இன்றைய தமிழர்களின் வாழ்வியல் அலங்கோலத்திற்கும் முக்கியக் காரணம். எனவே இங்கே நான் பேசிக் கொண்டிருப்பது, செம்மொழி மாநாட்டின் அரசியலையும், தமிழறிஞர்களின் நுண்ணரசியலையுமே ஆகும்.

தவிரவும் இன்று தமிழர்கள் என்று சொல்லப்படுபவர்கள் யார்? ஈழத்தில் இராணுவத் தடுப்பு முகாம்களில் இருப்பவர்களா? தடுப்பு முகாம்களில் இருந்து வெளியே வந்தும் தங்களின் மொத்த குடும்பத்தையும் போரில் இழந்து யாரும் இல்லாத அனாதைகளாக நடைபிணமாக திரிபவர்களா? தங்களுடைய தந்தையையும், தாயையும் இழந்து யாருமற்ற அனாதைகளாக இருக்கும் குழந்தைகளா? போராளிகளாக இருந்து சிறைப் பிடிக்கப்பட்டு தங்களின் இந்த வாழ் நாளில் சிறைக்கூடத்தில் இருந்து வெளியே வர முடியாமல் இருக்கும் இளைஞர்களா? யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும், கொழும்பிலும் இந்தப் பிரச்சனைகளை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த‌ தமிழ் பேசும் மக்களா? வெளிநாடுகளில் கூக்குரலிட்டு விட்டு இன்று அமைதியாக இருக்கின்ற வெளிநாட்டு தமிழர்களா ? ஈழம் ஒரு பொருட்டல்ல, பணமே பிரதானம் என நிருபித்த தமிழக மக்களா? எதையும் செய்ய இயலாமல் உலகமயமாக்கத்தின் சுகத்தையும் இழக்க முடியால் இயலாமையுடன் திரிந்து கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களா? யார் தமிழர்கள்? எந்தத் தமிழர்களை நோக்கி நான் தமிழர்களே செம்மொழி மாநாட்டை புறக்கணியுங்கள் எனக் கூற முடியும் ? அதனால் நான் யரையும் செம்மொழி மாநாட்டைப் புறக்கணியுங்கள் என சொல்லப் போவதில்லை.

**************

செம்மொழி மாநாடு மிகப் பெரிய விழாவாக, பல நூறு கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது என்பதை நடந்து வரும் ஏற்பாடுகள் நமக்கு தெளிவு படுத்துகின்றன. கோவையில் புதிய சாலைகளும், அழகான பூங்காக்களும் இந்த மாநாட்டினையொட்டி அமைக்கப்படுகின்றன‌. அரசின் இலவச பேருந்துகள் பல லட்சக்கணக்கான மக்களை கோவைக்கு கொண்டு வந்து குவிக்கும். அது தவிர உலகெங்கிலும் இருந்து கோவை வரும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு இலவச விமானப் பயணம், தங்குமிடம் என அனைத்து வசதிகளும் வழங்கப்படும் என அறிவித்து உள்ளார்கள். பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அமெரிக்காவில் இருந்தும், கனடாவில் இருந்தும், ஐரோப்பாவில் இருந்தும் இலவச பயணமாக கோவை செல்கிறார்கள். இவ்வாறு பல நூறு கோடி ரூபாய் செலவில் இந்த விழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இப்படி குவிக்கப்படும் தமிழர்களை கொண்டு தான் மட்டுமே தமிழினத் தலைவர் என கோவையில் கருணாநிதி சூளுரைக்க இருக்கிறார்.

அதற்காக கோவை செல்லவிருக்கும் தமிழறிஞர்கள், தமிழன்பர்கள், உடன்பிறப்புகள், கதர் வேட்டிகள் அனைவருக்கும் என்னுடைய bon voyage wishes.

Dudes, Have a nice, memorable and historic trip to Coimbatore. May your name gets mentioned in the history.
bye for now…
நன்றி- http://tamilsasi.com/

Exit mobile version