நேற்று சென்னையில் பெய்த மழை சென்னைவாசிகள் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை உருவாக்கி விட்டது. சென்னை நகரின் முக்கியமான சாலிகளில் வெள்ளத்தை வெளியேற்றும் பணிகள் திவீரமடைந்துள்ளன. பல இடங்களில் குடியிறுப்புகளுக்குள் புகுந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இப்போது மீண்டும் மழை பெய்யத்துவங்கியுள்ள நிலையில் நேற்று பெய்த மழையை வானிலை ஆய்வு மையம் கணிக்கத் தவறிவிட்டதாக பரவலாக விமர்சனங்கள் எழுந்தன. அரசு வானிலை ஆய்வு மையம் மட்டுமல்லாமல் தமிழ்நாடு வெதர்மேன் உட்பட தனியார் வானிலை ஆய்வாளர்களும் கணிக்கத் தவறி விட்டதாக பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த பெருமழைக்கு காரணம் என்ன என்பது பற்றி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செல்வ புவியரசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“செயற்கை கோள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் மழை பெய்வது குறித்து கணித்து அறிவிக்கப்படும். நேற்றைய தினம், காற்றின் மேலடுக்கு சுழற்சி, திடீரென இடம் மாறியது. இதனால், சென்னையில் நேற்று கன மழை பெய்தது. இதைக் கணிப்பது சற்று கடினமானது. இந்த நடைமுறைப் பிரச்னையால், நேற்றைய கன மழையைக் கணிக்க முடியவில்லை.
காற்றின் வேகத்தை துல்லியமாக கணிக்க இயலாது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி, சில நேரங்களில் வேகமாக கடந்து விடும். அப்படி நகர்ந்ததால், சென்னையில் நேற்று கன மழை பெய்தது. இது மேக வெடிப்பு அல்ல. இந்தகன மழைக்கு மேக வெடிப்பும் காரணமில்லை. மழைப் பொழிவை துல்லியமாக கணிக்க, நவீன உபகரணங்கள் கூடுதலாக தேவைப்படுகின்றன.” என்றார்.
இந்த மழைக்கு பருவநிலை மாற்றம், உலக வெப்பமயமாதலின் தாக்கம் காரணமா? என்கிற கேள்விக்கு, “தற்போதுள்ள நிலையை மட்டும் வைத்து கணக்கிட முடியாது. சென்னையை விட மாவட்டங்களில் பல முறை கன மழை பெய்துள்ளது. அப்போது இது போன்ற கேள்விகள் எழவில்லை. சென்னையில் பாதிப்பு என்றதும் கேள்வி கேட்கிறார்கள்.” என்றார்.