தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் நேற்று சுமார் ஆறு மணி நேரம் வரை திடீர் கன மழை பெயதது. இந்த திடீர் மழைக்கு வழிமண்டல மேலடுக்கு சுழற்சியும், மேக வெடிப்பும் காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த கனமழை நேற்று சென்னை மக்களின் வாழ்வை அடியோடு புரட்டிப் போட்டு விட்டது. பல இடங்களில் வெள்ளம் தேங்கியது. பல மணி நேரம் போக்குவரத்து சென்னை முழுக்க ஸ்தம்பித்து விட்டது.
சென்னையில் மட்டும் 200 மில்லி மீட்டர் மழை நேற்று ஒரே நாளில் பெய்துள்ள நிலையில் நேற்று தஞ்சை, திருச்சி பகுதிகளில் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு சென்றிருந்தார். அவர் இன்றுதான் சென்னை திரும்புவதாக இருந்தது. ஆனால் சென்னை மழை வெள்ள சேதங்கள் தொடர்பாக அதிகாரிகள் அவருக்கு தெரிவித்த உடனேயே அங்கு தங்கும் திட்டத்தை கைவிட்டு உடனடியாக சென்னை திரும்பினார். சென்னை திரும்பியவர் தன் வீட்டிற்குக் கூட செல்லாமல் உடனடியாக வெள்ள சேதங்களை பார்வையிட்டார். அதிகாலை வரை வெள்ள சேதப்பணிகளை பார்வையிட்டு அரசு அதிகாரிகளை முடுக்கி விட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்,
“எப்போதும் வானிலை மையத்திலிருந்து முன்னெச்சரிக்கை விடுக்கப்படும். ஆனால், இம்முறை அவர்களே எதிர்பாராமல் மழை கொட்டித் தீர்த்துள்ளது. வெள்ள நீரை மோட்டர்கள் மூலம் வெளியேற்றி இன்றுக்குள் சரிசெய்யப்படும்.விரைவில் மழை நீர் முழுவதுமாக அகற்றப்படும் .
கடந்த 10 ஆண்டுகளாக குட்டிச்சுவராக்கி வைத்துள்ளார்கள். விமர்சனம் செய்வதற்கு தயாரா இல்லை. அடுத்த பருவமழைக்குள் அனைத்து சீரமைக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கு. நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் என கூறினார்.