கதையின் களம் மீனவக் குடும்பங்கள் வாழும் தனுஷ்கோடி. கதையின் காலம் 2009 ஆரம்பத்தில் கடல்கடந்து கரையிரங்கும் இலங்கைத் தமிழ் அகதிகளோடு தொடங்குகிறது. ஒரு ஊடகப்பெண்ணின் நாட்குறிப்பிலிருந்து கதைகள் தொகுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படுவதாக எனக்குப்படுகிறது.
வாழ்க்கையைப் பணயம் வைத்து கடலுக்குள் களமிறங்கும் மீனவர்களின் வாழ்க்கையை வெளியுலகிற்குக் கொண்டுவரவேண்டும் என்ற ஆர்வம் திரைமுழுதும் இளையோடியிருக்கின்றது. இப்படியான கதைக்களங்கள் அரிது. பாராட்டப்படவும் எம் சமூகத்திடம் எடுத்துச்செல்லவேண்டிய தேவையையும் உணர்த்துகிறது. நடிகர்களைக் கொண்டு அல்லாது, மீனவர் சமூகத்து மனிதர்களையும், அகதிகளையும் வைத்தே கதைக்கு உடல் கொடுத்திருப்பது சிறப்பு. இந்தியத்திரைகளில் பேசப்படும் இலங்கைத்தமிழ் ஏற்படுத்தும் சலிப்பைச் செங்கடல் திரைபடம் தரவில்லை என்பதும் கூடுதல் பாராட்டிற்குரியது.
இப்படியான சிறப்புகளைக் கொண்டிருக்கும் செங்கடலில் ஆரம்பித்து முடியும்வரை ஏதோ ஒன்றை மனம் தேடிக்கொண்டிருந்தது. சரி இது வழமையான திரைப்படம் இல்லை அதனால் அதன் அழகியலோடும், எதார்த்தத்தோடும் பார்க்கும் முயற்சியை மேற்கொண்டேன். இருந்தும் ஏதோ ஒரு வெறுமை 90 நிமிடங்களிலும் ஓடிக்கொண்டிருப்பது போலவே இருந்தது எனக்கு. இது திரைப்படமா, ஆவணப்படமா என்ற கேள்வியும் ஆரம்பத்திலிருந்தே ஒருபக்க மூளையும் குடைந்து கொண்டிருந்தது. என் மூளைக்கு எட்டியவரை இது திரைக்கதையுள்ள ஒரு திரைப்படமல்ல. அப்படியானால் ஆவணப்படமா என்று பார்த்தால் அதுவும் அல்ல என்றே சொல்ல வேண்டும். சரி எப்படி இருந்தால் என்ன பார்வையாளர்களிடம் எதிர்பார்த்த உணர்வை ஏற்படுத்தும் விதம் படமாக்கப்பட்டிருக்கிறதா என்றால் அதுவும் இல்லையோ என்றே தோன்றுகிறது. உண்மை என்பதற்காக 90 நிமிடங்கள் உட்கார்ந்து பார்க்கவேண்டும் என்று பார்வையாளர்களை கட்டிப்போட முடியாதுதானே.
செங்கடலின் பேசுபொருள் என்பது பேசப்படாத பொருள் அல்ல. தொலைக்காட்சிகளிலும், செய்திகளிலும் பார்க்கும் போது ஏற்பட்ட உணர்வை இந்த உண்மை ஆவணங்களை சேகரித்து திரைப்படமாக்க எடுத்த முயற்சி என்று சொல்லக்கூடிய செங்கடல் என்னுள் ஏற்படுத்திவிடாமலேயே முடிந்து போகிறது. பெரும் துயரங்களைக் காட்சிப்படுத்தும் செங்கடல் உண்மையாகத் தூண்டப்பட வேண்டிய உணர்ச்சிகளை தீண்டவில்லை என்பது எனது கருத்து. இலங்கை, இந்திய அரசியல் ஆர்வலர்கள் தெரிந்திருக்கக்கூடிய அரசியல்தான் என்பதால் இது பேசாப்பொருள் அல்ல. இலங்கை, இந்திய அதிகாரவர்க்கத்தினை பயப்பட வைக்கும் அளவு இதில் அமைந்த காட்சிகள் எவை என்பதும் புரியவில்லை. ஆனாலும் துணிச்சலான கருத்துக்களை துணிந்து முன் வைத்தமை மிகவும் வரவேற்கத்தக்கது.
அகதிகளின் அவலம், மீனவர்களின் வாழ்வுநிலை, ஊடகத்துறை சார்ந்தவர்களுடைய சுதந்திர மறுப்பு, ஒரு மனநிலைபாதிப்புக்குள்ளானவன் என்று பல பாத்திரங்கள் வந்து போய்கொண்டிருக்கின்றவே ஒழிய எந்த ஒரு பாத்திரத்தினூடும் கதை பயணிக்கவில்லை. தொலைக்காட்சி செய்தித் தொகுப்புகள் போல ஒன்றோடு ஒன்று மாறி மாறி காட்சிப்படுத்தப்படுத்துவதும், பேசுபொருளுக்குத் தேவையற்ற காட்சிகளை (கருத்துகளை) வலிந்து திணித்திருக்கும் காட்சியமைப்புகளானதும் செங்கடலுக்குள் என்னைச் முழுமையாகச் செல்லவிடாமல் குழப்பிக்கொண்டிருந்தது. இப்படியான காட்சிகள் கதையின் கருப்பொருளைத் தாண்டி பார்வையாளனை வழிமாற்றிக் கொண்டு செல்லத் தொடங்கும் அபாயம் திரைக்கதைமுழுதும் கோர்க்கப்பட்டிருக்கிறது.
செங்கடலில் வரும் பைத்தியக்காரன் பாத்திரம் அழகாக செதுக்கப்பட்டிருக்கின்றது. அவனோடு பயணிக்கும் பாட்டுப்பெட்டியும் ஒரு கதாபாத்திரமாகியிருந்ததும் அதன் அழிவைத் தொடர்ந்து ஒரு பாட்டுப்பெட்டி மீண்டும் கிடைப்பதும் நம்பிக்கை ஊட்டுபவையாக இருக்கின்றது. முதலாவது காட்சியில் «பிரபாகரன் செத்திட்டான்» என பல முறை கூறிக்கொண்டுவரும் ஒரு தீர்க்கதரிசி மனநலகுறைபாடுள்ள பாத்திரம், பின்பு வரும் காட்சி ஒன்றில் இறுதி யுத்தத்தில் கொஞ்சப் புலிகளுடன் தலைவர் வேறு ஒரு தீவிற்கு தப்பிச் சென்றுவிட்டார் என்று சொல்கிறது. இவைகள் மனநலக்குறைபாடுள்ளவரால் சொல்லப்படுவது இயக்குனரின் ஒருவித தப்பிப்பா? மக்களின் இப்படியான பேச்சுக்கள் பைத்தியக்காரத்தனமானவை என்று சொல்வதாக எடுத்துக்கொண்டாலும், பிரபாகரன் உயிருடன் இல்லை என்றும் அதே பைத்தியக்காரன் சொல்வது குழப்புகிறது. மக்களின் குழப்ப நிலைக்கு இது குறியீடாக கொள்ளலாம். இறுதியாகக் காண்பிக்கப்படும் பிரபாகரனின் இறந்த உடல் போன்ற காட்சிகள் அனைத்தும் பிரபாகரன் இறந்துவிட்டார் என்று சொல்வதில் அழுத்தம் கொடுக்கும் அரசியல். எப்படி «தலைவர் இருக்கிறார்» என்று ஒரு குழு அரசியல் நடத்துகின்றதோ அதன் எதிர்த்தரப்பு அரசியல் இங்கே சொல்லப்படுகிறது என்பதே உண்மை. மீனவர் சமூகத்தின், மற்றும் இலங்கை அகதிகளின் உண்மையை மட்டுமல்ல, இலங்கை, இந்தியா மீது அரசியல் விமர்சனம் வைக்கும் செங்கடல், தனக்கென்ற ஒரு அரசியலையும் பேசுகிறது.
மீனவச்சமூகத்தை ஆவணப்படுத்த வரும் ஊடகப்பெண் பாத்திரத்தின் கனம் பலவீனமாக உள்ளதை குறிப்பிட்டே ஆக வேண்டும். தான் தனியே நின்று ஒரு சமூகத்தினை ஆவணப்படுத்த முயற்சிக்கும் ஒரு பெண்ணின் துணிவை பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர். முற்போக்கு குணம் கொண்ட துணிச்சலான ஒரு பெண் ஏன் தான் ஆவணப்படுத்திய அத்தனை பதிவுகளையும் ஒரு எதிர்ப்பும் காட்டாமல் அதிகாரிகளிடம் ஓப்படைக்கிறார் என்பது புரியவில்லை. தனித்து ஒரு சமூகத்தின் பதிவை ஆவணப்படுத்தும் ஒரு துணிவுப்பெண் ஏன் அதில் சிலவற்றையேணும் அதிகாரிகளிடமிருந்து காப்பாற்ற சிறிதும் முயற்சிக்கவில்லை?
கதை நெடுகிலும் மணிமேகலைப் பாத்திரத்துடன் பயணிக்கிறது ஒரு ஆமை. சித்தார்த் என்னும் இந்த ஆமை, மணிமேகலைப் பாத்திரத்துடன் பொருந்துவதேதோ உண்மைதான். ஏன் அதற்குச் சித்தார்த் என்ற பெயர் வைத்தார் என்பதை விட்டு நாம் ஆமையின் குணத்தை பார்தோமானால். ஆமை எதிர்ப்புத்தன்மையற்றது. யார் சீண்டினாலும் தன்னை உள்இழுத்துக்கொள்ளும் தன்மையுடையது அப்போது அதை யாரும் புரட்டிப்போட்டால் செயலற்ற நிலைக்குப் போய்விடும். அதைப்போலவே மணிமேகலைப்பாத்திரம் சித்தரித்த விதமும், ஏதுமில்லாமல் கண்ணீருடன் ஊரைவிட்டுப் போவதும் தன்னுடன் தானே முரண்பட்டு நிற்கின்றது. புகைத்தல், உடல் சார்ந்த பால் பிரிவினையை மறுத்தல் போன்ற எண்ணங்களைக் கொண்ட ஒரு பெண்ணிடம் போர்க்குணம் அற்றுப் போனது ஏமாற்றம். எதையும் துணிந்து எறியத் தயாராயிருக்கும் முற்போக்குப் பாத்திரமான மணிமேகலைப் பாத்திரம் கடைசியில், பெண்கள் துறக்கத் தகுந்த கண்ணீரைக் கட்டிக்கொண்டு போவது இவ்வளவுதானா என்று சொல்ல வைக்கின்றது. (புகைத்தல்தான் முற்போக்குத் தன்மை என்று நான் குறிப்பிட வரவில்லை)
டெல்லியில் எழுத்தாளர்கள் நடத்தும் போராட்டம் எந்த வகையில் பிற (அரசியல்) போரட்டங்களைவிட உயர்ந்து நிற்கின்றது, மணிமேகலை என்ற பாத்திரம் அதில் கலந்து கொண்டதாலா? அல்லது இந்தப் போராட்டம் மூலம் அரசியல், சமூக மாற்றங்கள் ஏதும் நடந்திருக்கின்றதா? மனிதச் சங்கிலி, அரசியல்வாதிகளின் போராட்டங்கள், கண்டனப் பொதுக்கூட்டங்கள், ஜெயலலிதா, சீமான், நெடுமாறன், கருணாநிதி வரை எடுக்கப்பட்ட போராட்டங்களைவிட, எழுத்தாளர்களுடைய போராட்டத்திற்குக் மட்டும் அழுத்தம் கொடுத்தது போன்ற விளம்பரங்களைத் தவிர்த்திருந்தால் மீனவர்களின் வலி மேலும் காத்திரமாக வந்திருக்கலாம். செங்கடல் திரைப்படமா, ஆவணப்படமா என்ற குழப்பங்களைக் கொண்டுவருவது இப்படியான காட்சிகள் எனலாம். சாதாரணப் பார்வையாளர்களுக்கு திமுக வின் போராட்டமோ, ஆதிமுக வின் போராட்டமோ, அல்லது எழுத்தாளர்களின் போராட்டமோ எதுவும் மாற்றத்தை கொண்டுவராத நிலையில் எல்லாமே ஒன்றுதான். அனைத்திலும் அவர்களுக்கேயான அரசியல் இருக்கத்தான் செய்கிறது.
செங்கடலில் என் மனதைத் தொடவும் வலிக்கவும் செய்த காட்சி சில நொடிகளாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை குறிப்பிட விரும்புகின்றேன். படகிற்காக காத்திருக்கும் ஈழத்தமிழ் அகதிகள் கடற்கரையில் குந்தியிருக்கின்றார்கள். அப்போது ஒரு விமானம் அவர்களது தலைக்கு மேலாகப் பறக்கிறது. அங்கே குந்தியிருந்த சிறுவன் தனது விரல்களால் அந்த விமானத்தை நோக்கிச் சுடுகிறான். அடுத்த தலைமுறையினரிடமும் வன்முறை துளிர்விடுவதை காட்டும் இக்காட்சியானது இன்னமும் மனதோடு வலிக்கின்றது.
மக்களின் வேதனையை நகைச்சுவையோடு கூறினாலும் வலி அதிகமாகவே வரும் நகைசுவைக்காட்சிகள் செங்கடலில் தரமானவை. ”சிங்களம் படிச்சு முடிச்சு இனி ஹிந்தியும் படிக்க வேணுமோ?” என்பதும், பிணத்தை புதைக்க வரும் பாதரியாரிடம் குறைந்த கட்டணத்தொகையைக் கொடுக்கும் போது ”பரவாயில்லை அவர் அடிக்கடி வாரார்தானே இப்ப” என்பதும், இலங்கை அரசிடம் ரசாயன குண்டு இருக்கா என்றதற்கு ”நீங்க குடுத்தா அங்க இருக்கும்” , ”போர்முடிஞ்சதும் நாங்க போயிடுவோம்” என்று சொல்லும் அகதியிடம் ”நாங்க முடிச்சு வைச்சிடுவோம்” என்று காவல்த்துறை பேசும் வரிகள் காத்திரமானவை. இப்படியான வீரியமான சோபாசக்தியின் வரிகள் திரையில் உரமுட்டுகின்றன.
இந்தியத் திரையில் வரும் வில்லன்களைப்போல மொத்தமாய் இந்திய அரசஊழியர்களை ஒட்டுமொத்தமாக ஒரே சட்டியில் போட்டு வில்லத்தனமாகவே பார்வையாளனுக்குக் காட்டுவது எந்தவகையில் சரியானது என்று சொல்வதற்கில்லை.
இந்தப்படத்தை இயக்குவதற்கு இருந்த நிதிபோதாமை தொழில்நுட்ப ரீதியாகவும் படத்தை முழுமை பெறமுடியாமல் செய்திருக்கின்றது என்ற காரணங்களுக்காக படைப்பின் தரத்தை நாம் உயர்த்திப்பேச முடியாது. திரைப்பட இயக்குனர்கள் பாதிப் பேரின் பிரச்சனை நிதி என்ற நிலமைதான் எங்கும் நிலவுகிறது. உளி வாங்கப் பணமில்லை என்பதற்காக ஏதோ இருந்ததை வைத்து செதுக்கியுள்ளேன் என்று சரிவரச் செதுக்காத சிற்பத்தை தரமானது என்று சொல்லிவிட முடியாது.
படம் நெடுக வரும் குறியீடுகள் தேர்ந்த பார்வையாளனை நோக்கியே தொகுக்கப்பட்டிருக்கிறது. குறியீடுகளும், கவித்துவமும் மாற்று சினிமா வேறு மக்கள் சினிமா வேறா என்ற கேள்வியை எனக்குள் புதிதாக எழுப்பியிருக்கின்றது. வணிக நோக்கமில்லாத இம்முயற்சியில் திரையின் கருப்பொருள் பார்வையாளனக்குக் கொடுக்க வேண்டிய ரசத்தைத் தரமுடியாத நிலையில் நெடுங்காட்சிகளாய் முடிந்துபோகிறது. நசுக்கப்படும் இரு சமூகத்தின் துன்பதை எடுத்துவரும் கதை என்பதற்காகவே மக்களிடம் போய்ச்சேர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
ஈழமக்கள் மற்றும் மீனவர்ச்சமூகத்தின் மரண வேதனையை, தமிழர் என்பதற்காகவே கொல்லப்படும் இந்திய மீனவர்களின் அவலத்தை, ஈழஅகதிகளின் இயலாமையை மக்களிடம் கொண்டு செல்லும் திரைக்காவியமான செங்கடல், மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டிய படகின் உந்துஅலைகளை விட்டுவிட்டு பயணிக்கிறது.