புல்லார் மீது தேடப்பட்ட நிலையில் அவர் ஜேர்மனிக்குத் தப்பிச்சென்று அரசியல் தஞ்சம் கோரினார். ஜேர்மனிய அரசு அரசியல் தஞ்சத்தை நிராகரித்தது மட்டுமன்றி அவரை இந்திய அரசிடம் ஒப்படைத்தது. இந்த வழக்கில் புல்லருக்கு விசாரணை நீதிமன்றம் கடந்த 2001ம் ஆண்டு தூக்கு தண்டனை விதித்தது. இதை 2002ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இரண்டு முறை அவர் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனிடையே, 2003 ஜனவரி 14ல் புல்லர் சார்பில் குடியரசு தலைவரிடம் கருணை மனு அளிக்கப்பட்டது. 8 ஆண்டுகள் நிலுவையில் இருந்த இந்த மனுவை 2011ல் அப்போதைய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தள்ளுபடி செய்தார். இதை தொடர்ந்து புல்லரை தூக்கில் போடுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கின.
கருணை மனு பரிசீலனையில் ஏற்பட்ட கால தாமதம் மற்றும் 20 ஆண்டுகள் சிறையில் இருந்ததால் தண்டனையை குறைக்க வேண்டும் என்ற வாதங்களின் அடிப்படையில் தண்டனையை குறைக்க இயலாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதன் அடிப்படையிலேயே மரணதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என புல்லார் மேன் முறையீடு செய்திருந்தார்.
இந்தத் தீர்ப்பு ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் உட்பட 17 மரண தண்டனை கைதிகளின் மனுவையும் தள்ளுபடி செய்வதற்கு சட்டத்தின் கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிறது.
1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் தடா நீதிமன்றம் 26 பேருக்கு மரண தண்டனை விதித்தது. உச்ச நீதிமன்றத்தில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நான்கு பேருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.
கருணை மனுவின் மீது முடிவெடுப்பதில் நீண்ட தாமதம் ஏற்பட்டதாலும், ஏற்கனவே 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் கழித்து விட்டதாலும் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும்’ என்ற வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தண்டனையை நிறைவேற்ற இடைக்காலத் தடை விதித்தது.
இதே மாதிரியான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருவதால் மூவர் தூக்கு தொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. புல்லார் வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் மூவர் தூக்கு வழக்கிலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூவரின் தூக்குத்தண்டனைக்கு முன்னறிவிப்புப் போன்று நடைபெற்றிருக்கும் புல்லாரின் கொலையை அடித்து வை,கோபாலசாமி கருத்துத்தெரிவிக்கையில் அதனை ஜெயலலிதா பார்த்துக்கொள்வார் என்றது.
ரஜீவ் காந்தி கொலையானதும் அப்பாவி ஈழத்தமிழர்களையும் கூட வேட்டையாடிய ஜெயலலிதாவை நோக்கி வை.கோவின் கோரிக்கை வேடிக்கையானது. வை.கோ மட்டுமல்ல ஈழ மக்களின் அவலங்களின் மீது அரசியல் நடத்தும் தமிழகத்து இனவாதிகள் மூவரும் தவறு செய்தவர்கள் அவர்களை மன்னித்து விடுதலை செய்யுங்கள் என்ற வகையில் கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள்.
வட கிழக்கை ஆக்கிரமித்த ரஜீவ் காந்தியின் அமைதிப்படை தமிழ்ப் பிரதேசங்களைத் துவம்சம் செய்தது. பாலியல் வல்லுறவு, கொலை, கொள்ளை என்பவற்றுடன் மட்டுமல்ல, பலவந்த இராணுவச் சேவையை அறிமுகப்படுத்தியது. இந்திய இராணுவத்துடன் இணைந்து தமிழ்ப் பிரதேசங்களைச் சூறையாடிய ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பு, அன்று சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையில் சிறுவர்களைப் பலவந்தமாக இந்திய இராணுவத்தின் துணை இராணுவப்படையில் இணைத்துக்கொண்டது. சுரேஷ் தலைமை தாங்கிய துணை இராணுவக் குழுவில் 500 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் இணைத்துக்கொள்ளபட்டனர். அவர்களில் பலர் அனாதரவாக உயிரிழந்துபோயினர்.
ரஜீவ் காந்தியும் இந்திய அரசும் சாரி சாரியாக கொலைகளைக் கட்டவிழ்த்துவிட்ட போது இந்திய அரசு தமிழ்ப் பேசு மக்களின் முக்கிய எதிரியாக மாறியிருந்தது. இதன் குறியீடாக ரஜீவ் காந்தி திகழ்ந்தார். இந்தப் பின்னணியிலேயே ரஜீவ் காந்தியின் கொலை நிகழ்ந்தது. இது முறைமை தவறிய அரசியல் பழிவாங்கலாகவே கருதப்பட்டது. இதற்கான நியாயங்கள் தமிழ்ப் பேசும் மக்களிடம் காணப்பட்டன.
இந்த நிலையில் ரஜீவ் காந்தியின் கொலை நிகழ்ந்தன் அரசியல் பின்னணியில் அதனோடு தொடர்புடைய அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற அரசியல் கோரிக்கை முன்வைக்கப்படுவதற்குப் பதிலாக, இதுவரை ஈழ மக்களின் அலவலத்தில் வயிறு வளர்த்துக்கொண்ட வியாபாரிகள் ஜெயலலிதாவையும் இந்திய் அரசையும் மண்யிட்டு இரந்துகொண்டிருக்கிறார்கள்.
இவர்களின் அரசியலைப் புரிந்துகொள்ளும் தமிழக மாணவர்களும் ஏனைய அமைப்புக்களும் மூவரின் விடுதலை குறித்த போராட்டங்களை முன்னெடுப்பார்கள் என்பது இன்று ஒவ்வொருவரினதும் எதிர்பார்ப்பு.