அவரது சொந்த வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்களால், ஒரு தகப்பனாக, முழுமையாக இரண்டு பெண்குழந்தைகளைப் பொறுப்பேற்க வேண்டியிருந்த அவரது துயர்களையும் பாடுகளையும் கூட ஒரு நண்பனாக நான் அறிந்திருக்கிறேன். எல்லைமீறி ஒரு போதும் நாங்கள் எமது பரஸ்பரமான சொந்த வாழ்வில் நுழைந்ததில்லை. எனது நண்பனும் தோழனுமான ரா.பாலகிருஷ்ணன் சொல்ல சுப்ரபாரதிமணியனின் துணைவியாரும் கவியுமான சுகந்தியின் மரணத்தைக் கேள்வியுற்று, பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது வாரத்திலொருநாள் எனது உயிர் நண்பன் விசுவநாதனுடனும் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுடனும் திருப்பூரில் நண்பரும் நாவலாசிரியருமான சுப்ரபாரதிமணியனைச் சந்திக்கச் சென்றோம். ஈரோட்டில் சுகந்தி இறந்த விவரங்களையும், நாளொன்றுக்கு பதினைந்து மாத்திரைகள் வரையிலும் சாப்பிடவேண்டி இருந்த நிலையில், நிரந்தரமான தூக்கநிலையிலேயே சுகந்தி இறந்ததான நிலையை அவர் சொன்னார்.
அவரது பெண்குழந்தைகள் இருவரும் வந்தவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவரது பெண்குழந்தைகளின் மீது அவர் வைத்திருந்த அபரிமிதமான அன்பு எனக்கு ஞாபகம் வந்தது. அவர் வாழ்வு குறித்து அதிகம் பேச எனக்கு விருப்பமில்லை. அவர் அடிக்கடி மாற்றலாகிற வேலைநிலைமையைக் கொண்டிருந்தார். குழந்தைகளைப் பராமறிக்க வேண்டியதோடு சுகந்தியைப் பராமறிக்க வேண்டிய பொறுப்பும் அவருக்கு இருந்தது. மாற்று ஏற்பாடுகளும் அவர் வாழ்க்கையில் பொய்த்துப் போயிற்று. அவர் மனம் கொள்ளாத சந்தோஷத்தில் என்றேனும் ஓர்நாளாவது இருந்திருப்பாரா என்பது என் வரையில் சந்தேகம்தான்.
ஓருவரின் உளவியல் என்பது இருபது வயதுக்குப் பிற்பாடுதான் உருவாகிறது என்பது இல்லை. அதைப் போலவே திருமணத்தின் பின்பாக அது முழமையடைந்து விடுகிறது என்பதும் இல்லை. பொதுவாகவே ஆண்பெண் உறவென்பது அதிகாரமும் முரணும் அன்பும் காமமும் கொண்டதாகத்தான் இருக்கிறது. படைப்பெழுச்சி கொண்ட பெண்கள் அனைவரும் பலதளங்களில் பதட்டமும் மனத்தளர்வும் கொள்வதென்பதும் இயல்பாகவே இருக்கிறது. இதற்கு அப்பாலும் அன்றாடம் நிறவெய்த வேண்டிய காரியங்களும் பொறுப்பும் இருக்கிறது.
இந்தச் சூழலில் மேற்போக்காகத் தெரிந்த சில செய்திகள், சில சந்திப்புகளில் சொல்லப்பட்ட சில சொற்களை மேற்போக்காக முன்வைப்பது என்பது, பல்வேறு முறைகளில் மரணத்தின் தொடர்விளைவுகளைத் தாங்கி நிற்கிற, உயிர்வாழ்கிற மனிதரை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கி விடக்கூடியது. சிறுகதையாசியரும் அறியப்பட்ட பெண்ணிலைவாதியுமான எழுத்தாளர் அம்பை சுகந்தியின் மரணத்தை முன்வைத்துச் செய்திருப்பது புதையுண்ட சுகந்தி : அம்பை : காலச்சுவடு : மார்ச் 2009) இப்படியான காரியம்தான்.
சுகந்தி பற்றிய இந்தக் கட்டுரை, அம்பையின் கூடார்த்த மொழியிலான மனப்பகுப்பாய்வுக் கட்டுரையா அல்லது சுப்ரபாரதிமணியன் மீதான வன்மமான நேரடித் தாக்குதலா என்று முழுமையாக அறியமுடியாத வகையில் எழுதப்பட்டிருக்கிறது. சிறுகதைகளுக்குள் தமது எதிரிகளைக் கொண்டு வஞ்சந்தீர்க்கிற காரியத்தைப் பெத்தாம் பெரிய எழுத்தாளரான தர்மு அரூப் ஜீவராமுவிலிருந்து, பின்நவீனத்துவப் புனிதசிகாமணி சாருநிவேதிதா வரை செய்து வருவதைத்தான் அம்பையும் இந்த அஞ்சலிக் கட்டுரையில் செய்திருக்கிறார்.என்ன கொடுமை பாருங்கள், சுகந்தியின் படைப்புக்கள் பற்றி அம்பையின் கட்டுரையில் ஒரு வரி கூட இல்லை. வேடிக்கை என்னவென்றால், தர்மு ஜீவராமுவின் இத்தகைய கொச்சைப்படுத்தல்களுக்கு கட்டுரையை எழுதிய அம்பையும் கட்டுரையைப் பிரசுரித்த காலச்சுசுவடு கண்ணனின் குடும்ப அங்கத்தவர்களும் ஆளாகியிருக்கிறார்கள் என்பதுதான்.
நிஜத்தில் படைப்பாளி எனும் அளவில் அம்பைக்கு அக்கறை இருந்திருந்தால், தனது படைப்பூக்கத்தின் அடிப்படையில் சுகந்தியின் உளவியல் உருவாக்கம் பற்றித் தான் கருதியிருப்பனவற்றின் அடிப்படையில் ஒரு படைப்பு எழுத அம்பை முயன்றிருப்பார். அல்லது ஒரு பெண்நிலைவாதத் தீவிரக் கோட்பாட்டாளராக, சுகந்தியின் மரணத்தின் பின்னிருந்த காரணங்களை ஒரு களஆய்வின் பின் பல்வேறு நேர்காணல்களின் பின், ஒரு புறநிலை ஆவணமாக முன்வைத்திருப்பார். மாறாக திடுக்கிடும் நிஜங்கள், திகில் சம்பவங்கள் போன்றனவற்றை எல்லாம் முன்வைத்து, சுப்ரபாரதிமணியன் என்கிற வெகு சாதாராண மனிதரைத் தமது பெண்நிலைவாதக் கோருதல்களுக்கான பலிகடாவாக அம்பை ஆக்கியிருக்க மாட்டார்.