Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சீ.வி.விக்னேஸ்வரனின் வரலாற்றில் பதியப்பட வேண்டிய உரை

cvvவட மகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சபையின் 24 அமர்விப் போது, நேற்று 10.02.2015 பிரேரணை ஒன்றைச் சமர்ப்பித்து ஆற்றிய உரை வரலாற்றில் பதியப்படவேண்டியது. உரை ஆழமாகச் சிந்திக்கவேண்டிய மிக முக்கியமான கருத்துக்களைக் கொண்டுள்ளது. அன்னிய நாடுகளுக்காகவோ அன்றி இலங்கைக்கு வெளியால் வாழ்கின்றவர்களுக்காகவோ அன்றி இலங்கையில் வாழும் சிங்கள மக்களுக்காகவே இப் பிரேரணை நிறைவேற்றப்படுவதாக விக்னேஸ்வரன் குறிப்பிடுகிறார்.

அவரது உரையின் பிரதான பகுதியாகப் பதியப்பட்டுள்ள இக் கருத்தைக் கூறும்போது,

“எமது இன்றைய பிரேரணையை, முக்கியமாக எமது சிங்கள சகோதர சகோதரிகளுக்கு நாம் உண்மையை எடுத்துக் கூறும் ஒரு கருவியாகவே நான் பார்க்கின்றேன். எனவே இந்தப் பிரேரணையைச் சிங்கள, தமிழ் மொழிகளுக்கு மொழிபெயர்த்தல் அவசியம். எமது இலங்கைவாழ் மக்களைப் பிரித்து வைத்து அரசியல் இலாபம் பெற முயன்ற எமது அரசியல்வாதிகளின் முகத்திரையைக் கிழிக்கும் ஒரு சாதனமாகவே இந்தப்பிரேரணையை நான் பார்க்கின்றேன்” என்கிறார்.
பெருந்தொகையான ஏழை விவசாயிகளையும், தொழிலாளர்களையும் கொண்டுள்ள சிங்கள உழைக்கும் மக்களுக்கு அதிகாரவர்க்கத்தால் தீனிபோட்டு வளர்க்கப்படும் ஊடகங்கள் இனவாதத்தையே ஊட்டி வளர்த்தன. தமிழ்ப் பேசும் மக்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வன்முறை மீது பற்றுக்கொண்டே சுய நிர்ணைய உரிமை கேட்கிறார்கள் என்றும் சிங்கள அதிகாரவர்க்க ஊடகங்கள் பிரச்சாரம் மேற்கொண்டன. வாக்குப் பொறுக்கும் அரசியல் கட்சிகள் இப் பேரினவாதத்தைப் பயன்படுத்தி ஆட்சியைக் கையகப்படுத்துவது இலகுவான வழி என்பதால் அதனைத் தூண்டி வளர்க்கின்றன.

இடதுசாரிகள் எனத் தம்மைக் கூறிக்கொள்ளும் போலிகளான ஜே.வி.பி, இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி, முன்னிலை சோசலிசக் கட்சி போன்றனவும் தமிழ்ப் பேசும் மக்களின் நியாயமான கோரிக்கையைச் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டுசெல்வதில்லை. வாக்குப் பொறுக்கும் அவர்களது திருட்டு நோக்கமே அதற்குக் காரணம். சுய நிர்ணைய உரிமைக்கு எதிரான கருத்தை நியாயப்படுத்துவதற்காக அவர்கள் சில தமிழ்க் கூலிகளையும் பிடித்துவைத்துள்ளனர்.

இவர்கள் அனைவரையும் கடந்து சிங்கள மக்களுக்கும் அவர்கள் மத்தியிலுள்ள மனிதாபிமான,, ஜனநாயக சக்திகளுக்கும் தமிழ்ப் பேசும் மக்களின் அவலங்களை எடுத்துச் செல்வதன் ஊடாகவே பேரினவாதிகளைப் பலவீனப்படுத்த முடியும் என்ற விக்னேஸ்வரனின் கருத்தை உறுதிப்படுத்த அவர் சொல்கிறார்.

“இலங்கைவாழ் மக்களைப் பிரித்து வைத்து அரசியல் இலாபம் பெற முயன்ற எமது அரசியல்வாதிகளின் முகத்திரையைக் கிழிக்கும் ஒரு சாதனமாகவே இந்தப்பிரேரணையை நான் பார்க்கின்றேன். எமக்கு நேர்ந்த அவலங்கள், அல்லல்கள், அடிபிடிகள், அனர்த்தங்கள் பற்றி வெளிநாட்டு மக்கள் உணர்ந்துள்ள அளவுக்கு எமது உள்நாட்டு பெரும்பான்மையினத்தினர் அறிந்து கொள்ள நாம் இடமளிக்கவில்லை. ஆகவே எமது நாட்டு மக்கள் யாவரும் எமக்கு இதுவரை நேர்ந்த கதியை கரிசனையோடு கருத்துக்கெடுக்கவேண்டும் என்ற விதத்திலேயே இந்த பிரேரணை கொண்டு வரப்படுகின்றது..”

ஆக, பேரினவாத அரசுகளால் திட்டமிட்டு நச்சூட்டப்படும் சிங்கள மக்களோடு பேசுவதும், பேரினவாதிகளுக்கு எதிராக அவர்களின் ஒரு பகுதியை மாற்றுவதும் இன்று அவசியமானது, பேரினவாதத்தை ஆட்சியைக் கையகப்படுத்தும் ஒரு ஆயுதமாகச் சிங்கள அரசியல்வாதிகள் எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என அவர் உதாரணங்களோடு குறிப்பிடுகிறார்.

சிங்கள் பௌத்த இனவாத அரக்கரகளைப் பயன்படுத்தி வாக்குப் பொறுக்கும் நோக்கத்துடனேயே ரனில் விக்கிரமசிங்க வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்ற விரும்பவில்லை என்பதை அவர் தனது சொந்த அனுபவங்களிலிருந்து கூறுகிறார்.

அவரது உரையின் பின்வரும் பகுதி அதனைத் தெளிவாக விளக்குகிறது:

“கௌரவ இரணில் விக்கிரமசிங்காவைச் சந்தித்தபோது அவர் என்னைப் பார்த்துக் கூறிய வார்த்தைகள் “நாங்கள் மகாநாயக தேரர்களிடம் வடமாகாண இராணுவ முகாங்கள் எதனையும் அப்புறப்படுத்தப் போவதில்லை என்ற உறுதிமொழியை அளிக்கவுள்ளோம்” என்பது. அதனைக் கூறிவிட்டு அவரின் மாமனார் ஜே. ஆர். ஜயவர்த்தனா போன்று, பொதுவாகச் சிரிக்காத அவர், சற்றுச் சிரித்தார். அதிலிருந்து நான் புரிந்து கொண்டது என்னவென்றால் “மகா நாயக்க தேரர்களுக்கு இவ்வாறு கூறி அவர்களின் மனங்களைக் குளிர்விக்கப் போகின்றேன். அடுத்த தேர்தலில் நாங்கள் வெல்ல வேண்டும் அல்லவா?” என்பது போலத்தான் அவரின் கூற்றை அர்த்தப்படுத்திக் கொண்டேன். அந்தச் சூழ்நிலை காரசாரமான கருத்துப் பரிமாறல்களுக்கு உகந்த சூழ்நிலையல்ல. மௌனம் காத்தேன்.”

சிங்கள அப்பாவி மக்கள் யாரால் பயன்படுத்தப்படுகின்றனர் என விக்னேஸ்வரன் கூறிய போது,

“எமது எதிர்பார்ப்புக்களை எங்கள் சிங்கள சகோதர சகோதரிகள் சந்தேகக் கண்கொண்டே நோக்கி வந்துள்ளார்கள். அது மட்டுமல்ல. சந்தேகக் கண்கொண்டே எமது சகோதர இனம் எம்மைப் பார்க்க வேண்டும், அதன் பொருட்டுத் தாம் அரசியல் குளிர்காய்தலில் ஈடுபட வேண்டும் என்ற சிங்களமக்களின் அரசியல்வாதிகளின் குறுகியகால சிந்தனைக்கு நாம் இதுகாறும் பலியாகி வந்துள்ளோம்.” என்றார்.

உரையின் மற்றுமொரு முக்கிய புள்ளி பாரம்பரிய பிரதேசங்களைக் குறிப்பது. பெரும்பாலான தமிழ் இனவாதிகள் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தையும் கோரிக்கையையும் இனவாதக் கோரிக்கையாகவே முன்வைத்து சிங்களப் பேரினவாதிகளுக்குப் பலம் சேர்த்தனர். விக்னேஸ்வரனின் உரையில் தமிழர்களின் பாரம்பரியப் பிரதேசங்கள் அவர்களுக்கு உரித்தானது எனக் கூறும் அதேவேளை சிங்கள மக்களின் பாரம்பரியப் பிரதேசங்களையும் ஏற்றுக்கொள்கிறார்.

“தமிழ் மக்கள் இந்நாட்டின் பூர்வீகக் குடிகளில் ஒரு சாரார் என்ற உண்மையையும் காலாதி காலமாக அவர்கள் வாழ்ந்து வந்த பிரதேசங்களில் அவர்களே பெரும்பான்மையினர் என்ற உண்மையையும் அதன் பொருட்டு அவர்களுக்கு மற்றைய பூர்வீகக் குடிகளுக்கு இருக்கும் அதே அளவு உரித்துக்கள், மொழி, பாரம்பரியங்கள், வாழ்க்கைமுறை, வாழ்விடங்கள் மீதான அதே அளவு கரிசனைகள், கடப்பாடுகள் இருக்கின்றன என்பதையும் எடுத்துக் காட்டி உரிய அந்தஸ்தைப் பெற அவர்கள் பிரயத்தனங்கள் எடுத்து வந்துள்ளார்கள். ஆனால் எமது எதிர்பார்ப்புக்களை எங்கள் சிங்கள சகோதர சகோதரிகள் சந்தேகக் கண்கொண்டே நோக்கி வந்துள்ளார்கள்”.

தவிர, சிங்கள பௌத்த பேரினவாதிகள் தமது பிரிதாளும் அரசியல் தந்திரோபாயத்திற்காக தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்தெடுத்து சிங்கள மக்களிடம் வெற்றிபெற்றதாகக் காட்ட முனைந்தனர் என்பதை வரலாற்று ஆதாரங்களுடன் முன் வைக்கிறார்.
“வெள்ளையன் விட்டுச் சென்ற போது அவன் தந்த யாப்பில் 29வது ஷரத்தைத் தந்து சென்றான். அதனை அப்புறப்படுத்தினார்கள். 1972ம் ஆண்டின் அரசியல் யாப்பினால் தமிழ் மக்களை நிர்க்கதிக்குள்ளாக்கினார்கள் சிங்கள அரசியல் வாதிகள். இதனை சிங்கள மக்களுக்கு எடுத்துரைக்கும் ஆவணமாகவே இந்தப் பிரேரணையைக் கொண்டு வந்துள்ளேன். இன்றைய சூழ்நிலையில் இராணுவ முகாம்கள் அப்புறப்படுத்தப் படாவிடில், ஜெனீவாத் தீர்மானம் உரிய காலத்தில் உண்மையை உரைக்காவிடில் எமது தமிழ் மக்களின் பாடு எவ்வாறு அமையப் போகின்றது என்பதைக் கட்டியம் கூறும் கருத்து மிகுந்த ஆவணமாகவே இந்தப் பிரேரணையை இந்த மதிப்பு சால் சபை முன்னே பிரேரிக்கின்றேன். இதை இன்று இங்கு உங்கள் முன்னிலையில் பிரேரித்து அது ஏற்கப்படாது விட்டால் நாங்கள் இராணுவ கெடுபிடிகளுக்கு எமது வாழ்நாளெல்லாம் முகம் கொடுக்க நேரிடும். நடந்தது பிழையென்ற மனப்பக்குவத்தை எமது சகோதர சிங்கள அரசியல் வாதிகளின் மனதில் விதைக்கவே இதைக் கொண்டுவந்துள்ளேன்.”

இலங்கை சென்ற அமெரிக்கப் பிரதி நிதி நிஷா பிஸ்வாலுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தை குறித்து விக்னேஸ்வரன் கூறியிருப்பது முக்கியமான தகவல். தனது அடியாள் அரசைக் காப்பாற்றி போர்க்குற்ற விசாரணையைக் கிடப்பில் போடுவதே அமெரிக்காவின் நோக்கம் என்பதை விக்னேஸ்வரன் கூறுகிறார்.

“மேன்மைதகு நிஷா பிஸ்வால் அம்மையாருடன் அண்மையில் நான் பேசிய போது அமெரிக்காவுக்கு சகாயமான அரசாங்கம் என்ற முறையில் இலங்கை அரசாங்கத்திற்கு அனுசரணையான விதத்தில் நடந்து கொள்ள விரும்புகின்றது அமெரிக்கா என்பதைப் புரிந்து கொண்டேன். ஜெனிவா அறிக்கை காலம் தாழ்த்தி வெளியிடப் பட்டால் சிங்கள மக்களிடையே கொந்தளிப்பைத் தவிர்த்து இதே அரசாங்கம் மீண்டும் பதவிக்கு வரச் செய்யலாம் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு. அப்பொழுது திரு.சம்பந்தன் அவர்களும், திரு.சுமந்திரன் அவர்களும், திரு.சுரே~; பிரேமச்சந்திரன் அவர்களும் திரு.செல்வம் அடைக்கலநாதன் உள்ளடங்கலாக ஜெனிவாத் தீர்மானம் உரிய காலத்தில் வெளிவருவதே உகந்தது என்ற கருத்தை முன்வைத்தார்கள். “எது உரியகாலம்?” என்று என்னிடம் கேட்டார் நிஷா அம்மையார். முன்னர் தீர்மானிக்கப்பட்ட மார்ச் மாதத் தினமே உரிய காலம் என்றேன். அதை அவர் ஏற்கவில்லை. அப்போது நான் கூறினேன் தாமதம் சிங்கள வாக்குகளைப் பெற உதவும் என்று நினைக்கின்றீர்கள். ஆனால் தாமதம் தமிழ் வாக்குகளைப் புறக்கணிக்குந் தன்மையது என்பதை மறக்க வேண்டாம் என்றேன். அந்தக் கருத்துப் பரிமாற்றம் பற்றி மேலும் கூற நான் விரும்பவில்லை.”

இலங்கை சர்வதேச நாடுகளிம் ஆடுகளமாக மாறியுள்ளது என்பதையும் விக்னேஸ்வரன் தொட்டுச்செல்லத் தவறவில்லை.

இவ்வாறான வரலாறு சார்ந்த நிதானமான ஆய்வுவறிக்கையின் பின்னரே வன்னியில் நடைபெற்றது இனப்படுகொலையே என்பதை விக்னேஸ்வரன் முன்வைக்கிறார். அதற்கான நியாயபூர்வமான காரணங்கள அவரே கூறுகிறார்.

“இது யாரையும் பழிவாங்கும் நோக்கத்துடன்எடுக்கப்படும் முயற்சியல்ல. மாறாக யாவருக்கும் நீதியானது பொது, யாவருக்கும் நீதி மறுக்கப்படக் கூடாது என்பதற்கான முன்னெடுப்பே இது. பல்லாயிரக்கணக்கான உயிர்களைத்தான் எங்களால் படுகொலைகளில் இருந்து காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. குறைந்த பட்சம் அவர்களுக்கான நீதியைத் தானும் நிலைநாட்ட வேண்டும் என்ற நியாயமான வேட்கையின் வெளிப்பாடே இந்தப் பிரேரணை. இரண்டாம் உலகப் போரில் இன அழிப்பைச் செய்தவர்கள் தற்போதும் தேடிக்கண்டுபிடிக்கப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படுவது எந்தக் காலகட்டத்திலும் நீதி மறுக்கப்படக்கூடாது என்ற உலக மக்களின் சிந்தனைச் சிறப்பின் எதிரொலியே என்பதை நாம் மறந்து விடலாகாது.”

விக்னேஸ்வரன் கூறிய பின்பே வன்னியில் நடைபெற்றது இனப்படுகொலை என்று தெரியத் தேவையில்லை. தமிழ்ப் பேசும் மக்கள் அதனை அரசியல்வாதிகளுக்கு முன்னரே அறிந்து வைத்துள்ளனர்.

இனப்படுகொலைய நிராகரித்த அமெரிக்க முதலாளிகள் போர்க்குற்றம் என்ற கருத்தைத் தமது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளவே முன்வைத்தனர்.

இந்துதுவக் கருத்துக்களையும், தீவிர வலதுசாரிச் சிந்தனையையும், அதிகாரவர்க்க மனோபாவத்தையும் கொண்ட விக்னேஸ்வரனின் அறிக்கையின் உள்ளடக்கம் இன்றைய தேவை என்பதால் அது விக்னேஸ்வரன் என்ற தனி நபரை உயர்த்துவதாகாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வரலாறு முழுவதும் கறைபடிந்தது. இழந்துவரும் செல்வாக்கை மீளப் பெற்றுக்கொள்ள விக்னேஸ்வரன் இப் பிரேரணையை நிறைவேற்றியிருக்கலாம். எது எவ்வாறாயினும் மேற்குறித்த பிரேரணை சிங்கள மக்களைச் சென்றடைய வேண்டும்.

சுய நிர்ணைய உரிமையை நிராகரிக்கும் விக்னேஸ்வரன், இனப்படுகொலை என்று ஏற்றுக்கொண்டதும் பேரினவாத ஒடுக்குமுறையின் அடிப்படைக் காரணங்களை முன்வைப்பதும், சுய நிர்ணைய உரிமைக்காகப் போராடும் மக்களுக்குப் பயனுள்ள வகையில் பயன்படும்.

இனியொரு… ஆசியர் குழு.

Exit mobile version