நேற்று தந்தி தொலைக்காட்சியில் அண்ணன் சீமானின் பேட்டி ஓடிக்கொண்டிருந்ததைத் தற்செயலாகப் பார்த்ததும், தொடர்ச்சியாக அவருடைய பேட்டியைக் கண்டேன். வழக்கம்போல ஆக்ரோஷமாக, மிடுக்காகப் பேசினார். கூடுமானவரை தூய தமிழில் பேசும் அவரது பேச்சு ரொம்பவே பிடிக்கும் என்பதால் அவரது பேட்டியைத் தொடர்ந்து கேட்டேன். நன்கு வேகத்தோடு தனது கோட்பாடுகள் குறித்து பேசிவந்த அண்ணன், தன்னோடு சமரசம் பேச மீடியேட்டரை மோடி அனுப்பியது குறித்து பேசியதைக்கேட்டு ஆச்சர்யமானது. மோடியோடு சந்திப்பு நிகழ்த்தினால் அண்ணனுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாகக் கூறியிருக்கிறார்கள். குறைந்தபட்சம் மோடிக்கு எதிராக அதிகமாகக் களமாடாமல் சற்று அடக்கிவாசித்தால் பொருளாதாரரீதியில் உதவுவதாகவும் பேரம் பேசியிருக்கிறார். ஆனால் அதற்கெல்லாம் அண்ணன் உடன்படவில்லை என்றபோது பெரிய மகிழ்ச்சி! அண்ணனை பணத்தால் விலைபேச முடியாது என்ற உற்சாகம் என்னுள்ளே!
பேட்டியின் தொடர்ச்சியாக, சசிகலாவுடனான சந்திப்பு குறித்து நெறியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு, அந்த அம்மையார்மீது தனக்கு பரிவு உண்டு என்றும், அம்மையாரின் கணவர் நடராஜன் தமிழ் மொழிப்பற்றாளர், தமிழர் ஆதரவு இயக்கம் சார்ந்தவர் என்பதால் அவங்க மீது நன்மதிப்பு உண்டு என்றார். அப்போதுதான் அண்ணனின் பேச்சுமீது சிறு வருத்தம் வந்தது. என்னதான் நடராஜன் தமிழ்ப்பற்றாளர் என்றாலும், சசிகலா-ஜெயலலிதா கூட்டணியால் தங்கள் சொத்தை இழந்த கங்கை அமரன், சொத்தை இழந்த துக்கத்தில் உயிரையேவிட்ட பாலு ஜூவல்லர்ஸ் அதிபர் உள்ளிட்ட பல தமிழர்களும் நினைவுக்கு வந்தனர். இப்படிப்பட்ட சசிகலாவுக்கு ஆதரவாக அண்ணன் பேசுறதுக்கு அப்டியென்ன காரணம் இருக்கும்னு மனசு அடித்துக்கொண்டது. நெறியாளர் துளைத்துத் துளைத்துக் கேட்டதால், முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு உண்டான செலவுக்கு சீமானின் பங்காக 5 லட்சம் ரூபாயை நடராஜன் தான் உரிமையோடும், அன்போடும் கொடுத்தார் என்றும், அந்த அன்புக்கு நன்றிக்கடன்பட்டதையும் அண்ணன் கூறினார்! அதைக் கேட்டதும் இன்னும் ஷாக்கானது! ஒருவர் தனக்கு பண உதவி செய்தார் என்பதற்காக, தமிழர்களுக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றங்களைச் செய்த ஒரு தமிழின விரோதப் பெண்மணியை அண்ணன் ஆதரிச்சுட்டாரே என்று மனசு கஷ்டமானது.
அடுத்து, சி.ஏ.ஏ. சட்டத்துக்கு எதிரான போராட்டத்திற்கு அண்ணன் சீமான் பெரிதாக ஆதரவு தெரிவிக்கவில்லையே என்று நெறியாளர் கேட்டார். இல்லையில்லை, நாங்கள் ஆதரவு தந்தோம் என்றார். நெறியாளர் விடாப்பிடியாக, இல்லையில்லை, மற்ற கட்சிகள் தான் போராட்டத்தை ஆதரித்தார்கள். நீங்கள் ஆதரிக்கவில்லையே ஏன் என்று சந்தேகத்தோடு கேட்டார். அதற்கு அண்ணனோ, சி.ஏ.ஏ சட்டம் வந்ததுக்கு காரணமே காங்கிரஸ் தான் என்று ஒரே போடாகப் போட்டார்!
நெறியாளரைப்போலவே எனக்கும் அதிர்ச்சியானது! பாஜக தானே அதை அமல்படுத்தியது என்று அண்ணனை நெறியாளர் கேட்டார். அண்ணனோ, அந்த சட்டத்தை வடிவமைத்தது காங்கிரஸ் தான்… அந்த விஷத்தை உருவாக்கியது காங்கிரஸ் தான்… ஊட்டிவிட்டது மட்டுமே பாஜக… எனவே காங்கிரஸ் தான் இதற்கு பொறுப்பு என்று அடித்துப் பேசினார். என்னடா இது… அந்த போராட்டத்தை ஒட்டி நடந்த கலவரத்தில் 45 பேர் வரை கொல்லப்பட்டதுக்கு பாஜகவினரின் தூண்டுதல் தானே காரணம்… ஓராண்டுக்கு மேலாகியும் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யாமலிருப்பதும் இந்த பாஜக அரசு தானே… அண்ணன் ஏன் இப்படி பேசுகிறார் என்று குழப்பமானது…
அப்போது தான் மோடி… மீடியேட்டர்… டீலிங்… போன்று அண்ணனே கூறிய தகவல்களும் நினைவுக்கு வந்தது… அதேபோல வழக்கமாக ஒவ்வொரு மாநிலத் தேர்தலிலும் எதிர்த்தரப்பின் வாக்குகளைச் சிதறடிக்க பல்வேறு சிறிய கட்சிகளை மறைமுகமாக அவர் இயக்கும் உத்திகளும் நினைவுக்கு வந்து தொலைத்தது… அண்ணன் 5 லட்சத்துக்கே அவ்வளவு விசுவாசமாக இருந்தால்…. மோடி… கோடி.. என்று நினைக்கும்போதே தலைசுற்றியது.. சட்டெனச் சேனலை மாற்றி ஆதித்யாவில் காமெடி பார்க்கத் தொடங்கினேன். அங்கே கவுண்டமணி “அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா!” என்று கூறிக்கொண்டிருந்தார்!