Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சீஐஏ வழங்கிய பொறிஸ் பாஸ்டர்னாக்குக்கான நோபல் பரிசு: தமிழரசன்

சுவீடன் நோபல் பரிசுக்குழுவின் 50 வருடங்களுக்கு முன்னான ஆவணங்கள் 2009 ஜனவரியில் திறக்கப்பட்டதை அடுத்து 1958 இல் சோவியத் யூனியனின் எழுத்தாளர் பொறிஸ் பாஸ்டர்னாக்( Boris besternak ) இன் ″டொக்ரர்சிவாகோ(Doctor Shivaco )” நாவலுக்கு நோபல் பரிசு தரப்பட்டதன் பின்புலங்கள் வெளிவரத்தொடங்கியுள்ளன. பொறிஸ பாஸ்டர்னாக் புரட்சிக்கு முந்திய ரஸ்சியாவின் மோஸ்கோ பல்கலைக் கழகத்தில் தத்துவத்துறையில் பயின்றவர்.; பின் 1912 இல் ஜேர்மனியில் மார்பேக்;(Marburg ) பல்கலைக்கழகத்திலும் கற்ற காலத்தில் இவர் எழுதிய கவிதைகள் 1913, 1914 களில் வெளிவந்தது. ″மேகத்தின்இரட்டைக்குழந்தைகள்″Zwilling in Wolken ; மற்றும் 1917 இல் ″தடைகளைக் கடந்து″( Ueber die Barrieren ), போன்ற கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டவர். மொழிபெயர்ப்பு நூல்களில் ஈடுபாடு கொண்டு கோதே சேக்ஸ்பியர் முதல் ரயினர் மரியா ரில்க்க கென்றிஸ் பொன் கிளைஸ் போன்றவற்றை ரஸ்ய மொழியில் கொண்டு வந்தவர். இவர் இரண்டாம் உலக யுத்தத்தில் யுத்தமுனைச் செய்தியாளராகவும்; கடமை ஆற்றியவர். இதன் பின்பே அவரின் முதலும் கடைசியுமான ″டொக்டர்சிவாகோ″ நாவல்1956 இல் எழுதி முடிக்கப்பட்டது. இது சோவியத்யூனியன் புரட்சி மற்றும் உள்நாட்டுப்போர் பற்றிய நாவலாகும். இக்காலகட்டம் ஸ்டாலின் இறந்து குருசேவ் ஆட்சிக்கு வந்த சமயமாகும். ஸ்டாலினிச அமைப்பு தனது அதிகாரத்தை சற்று தளர்த்திக்கொண்ட சமயமாகும்.

 

இது ஏதோ குருசேவின் நற்குணத்தால் நடந்தேறவில்லை. மாறாக சர்வதேசரீதியாகப் பல காலனித்துவ நாடுகளின் விடுதலை, கியூபா வியட்னாமிய இளம்சோசலிசவிடுதலை இயக்கங்கள் ஏற்படுத்திய உலகார்ந்த தாக்கம், இவைகளினால் சோவியத் யூனியன் மேலான உள்ளகரீதியான மாற்றங்களாகவும் இருந்தது. இக்காலத்தில் பல ஸ்டாலின்காலத்திய தடைசெய்யப்பட்ட கலைப்படைப்புகள் வெளிவந்தன. ″கொமிசாரின்″ போன்ற சிறந்த தடைசெய்யப்பட்ட திரைப்படங்களும் இச்சமயத்திலேயே வெளிவந்தன. இந்தக் காலமே போறிஸ் பாஸ்டர்னாக்கின் ″டொக்ரர்சிவாகோ″ எழுதப்பட்டது. ஆக இவரும் காலமறியாமல் எழுதவில்லை. இந்த நாவல் சோவியத் புரட்சிக்காலத்திய மற்றும் உள்நாட்டுப்போர்க் காலத்தின் தனிமனித மன நெருக்கடிகள் முரண்பாடுகள் சார்ந்ததாகும். சோவியத்யூனியன் முதல் உலக யுத்த காலத்தய சமூகப் பொருளியல் நெருக்கடிச் சுமைகளுடன் புரட்சியூடாக புதிய நிலமைகளுக்கு மாற உள்ளும் புறம்பும் போராடிக் கொண்டிருந்த சமயத்தை போறிஸ்பாஸ்டர்னாக் வெறுமனே தனிமனித அவலமாக துன்பநிலையாகக் குறுக்கி விட்டார். மாபெரும் மனித எழுச்சியின் கோபமும் வேகமும் கூடவே எதிரி மீதான இரக்கமற்ற தன்மையும் கொண்டிருந்த அதன் இயல்பை அவர் தனிமனிதர்கள் வாழப் போரிடும் இலக்கிய வாழ்வனுபவமாக்கி விட்டார். கிறீஸ்தவத்தின் மனித நற்குணங்களில் அவர் அதிக ஆழங்கொண்டவர் என்பதால் தனது பழைய சமூதாயத்தின் கருத்தியல் களால் சகலதையும் அளவீடு செய்தார். அவர் லெனினை ஏற்றதாய்க் கூறிய போதும் அது லெனின் ஆழுமை மேலான தனிப்பட்ட ஈர்ப்பாகவே இருந்தது. ஒரு படைப்பாளி என்றவகையில் இவைகளை எழுத பொறிஸ்பாட்டர்னாக் உரிமை பெற்றிருந்தபோதும் இதை ஸ்டாலினிசத்தின் அரசியல் இலக்கியக் கொடுங்கோன்மைகட்கு எதிரான மன்னிப்பாய் கொள்ள முடியாது.

 

″டொக்ரர்சிவாகோ ″ நாவல் முதலில் ரஸ்ய இலக்கிய மாத சஞ்சிகையான நொவீமிர்(Nowymir )இல் உத்தியோக பூர்வமாக வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. குருசேவ் கால சோவியத்யூனியன் பல வித இலக்கியநம்பிக்கை படைத்த எழுத்துக்களைக் கூட விமர்சனத்துடன் அனுமதித்துக் கொண்டிருந்த சமயம் அது. ரொட்க்ஸ்கியின் எழுத்துக்களைத் தவிர ஏறத்தாள மற்ற எல்லாவற்றையும் அனுமதித்தார்கள். எனவே வெளிநாடுகளில் பிரச்சாரம் செய்யப்பட்டது போல் ″டொக்ரர்சிவாகோ″ நாவலை வெளியிட சோவியத்யூனியனில் தடையேதும் இருக்கவில்லை. ஆனால் இத்தாலிப் பத்திரிகையாளரும் பொறிஸ்பாஸ்டர்னாக்கின் நண்பரும் மோஸ்கோ வானொலிச் செய்தியாளருமான Sergio.D.Angelo மூலம் நாவலின் பிரதியை இவர் இத்தாலிக்குக் கடத்துவித்தார். பாஸ்டர்னாக் தன் நாவலைப் பலமொழிகளில் கொண்டுவர விரும்பினார். அந்த வழியில் அவர் ஆசை காட்டப்பட்டிருந்தார். இத்தாலியில் இந்த நாவலை நூல்வெளியீட்டாளரும் இத்தாலியக் கொம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினருமான Seltrinelli Giangia Cumo வை வந்தடைந்தபோது இவர் அதை வெளியிடத் தயாரானார். இதே சமயம் நாவற்பிரதிகளை பொறிஸ் பாட்டானாக் அமெரிக்க எழுத்தாளர் Sisaiah Berlin பிரான்சிய எழுத்தாளர் Helene Pelleitier போன்றவர்களுக்கும் அனுப்பினார். இவைகளை அவதானித்த அமெரிக்க உளவுத்துறை சீஐஏ சோவியத் யூனியனுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இலக்கிய அரசியல் ஆயுதமாக்கவும் திட்டங்களை வகுத்தது. இதற்கு நோபல் பரிசு வழங்குவதன் மூலம் மேற்குலகு முழுவதும் இலக்கியவாதிகள் முதலாளித்துவப் சிந்தனையாளர்கள் அரசியல்வாதிகள் ஆகியோரையும் இதில் ஈடுபடத் தூண்டியது. இதற்கு ஏற்றவாறு “பொறிஸ்பாஸ்டர்னாக”; சோசலிசத் தத்துவப் போக்கில் வெறுப்புள்ளவராகவும் கிறிஸ்துவ அறநெறிகளின்பாற்பட்ட மனித நேயம் பேசுபவராகவும் இருந்தார். முதலாளித்துவத்தில் சாதாரணமாக நிலவிய ஜனனாயக சகோதரத்துவக் கோட்பாடுகள் அவரிடம் இருந்தது. படைப்பாளியின் அதீத சுய அடையாளம் தேடும் குணநலமானது மேற்கத்தய முதலாளித்துவத்தின் சமுதாயத்திற்குப் பதில் தன்னைத் தனிப்பட நாட்டிக்கொள்ளும் பண்புடையதாக இருந்தது. 23 நொவெம்பர் 1957 இல் இத்தாலிய மொழியில் ″டொக்ரர்சிவாகோ″ 12000 பிரதிகள் வெளிவந்தவுடன் சகலதும் உடன் விற்பனையானது. இதைத்தொடர்ந்து ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன் மொழிகளிலும் வெளிவந்தது. இது எங்கும் கொம்யூமினிச எதிர்ப்பு நாவலாகப் பிரபல்யம் அடைந்தது. சாதாரண வாசகர்களை விட இடதுசாரி எதிர்ப்பாளர்களிடம் இது பெரியளவில் போய்ச் சேர்ந்தன. பொறிஸ் பாட்டர்னாக் கொம்யூனிச சர்வாதிகாரத்தை அசைத்த இலக்கியக் கலகக் காரனாக ஆக்கப் பட்டார். அமெரிக்கப் பத்திரிகைகள் இவரை கிறீசின் சோக்கிறட்டீஸ்சுடனும் யேசுகிறிஸ்துவோடும் ஒப்பிட்டு எழுதின. காந்தியையும் தலாய்லாமாவையும் இப்படித்தான் அரசியற் புனிதர்களாக மேற்கத்திய உலகம் ஆக்கி உலமக்களை நம்பப்பண்ணியது. இந்த அரசியல் ஊடகப் பிரச்சாரங்களின் பின்பு அமெரிக்க உளவுத்துறையின் கணிசமான செயற்பாடுகள் இருந்தது. இதற்கு முன்பே 1956இல் இத்தாலியின் மைலண்டிலிருந்து மால்டாவுக்குப் பறந்த விமானத்தில் டொக்ரர் சிவாகோவின் நாவலின் ரஸ்ய மொழியிலான பிரதி எடுத்துச் செல்லப்பட்ட போது அந்த விமானத்தை மால்டாவில் இரண்டுமணி நேரம் தாமதிக்கச் செய்து அந்த இடைநேரத்தில் பிரிட்டிஸ் உளவுத்துறையான ; ” “M16” உதவியுடன் சீஐஏ நாவலைப் பிரதி செய்து கொண்டது. நோபல்பரிசுக்கான நூல் படைப்பாளியின் மூலமொழியில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்பதால் சீஐஏ ஆல் ″டொக்ரர்சிவாகோ″ ரஸ்ய மொழியில் டென் காக்கிலுள்ள Wissenschaft verlag Mouton அச்சிடப்பட்டு வெளியிடப் பட்டது.

 

சோவியத் உளவுத்துறையான ″கேஜிபி″ ஆரம்பமுதலே ″டொக்ரர் சிவாகோ″ நூற்பிரதி இத்தாலிக்குக் கடத்தப்பட்டு அமெரிக்க உளவுத்துறையின் கைக்கு எட்டிவிட்டதை அறிந்திருந்தது. இதன் தொடர்ச்சியாக சோவியத்யூனியன் இத்தாலியக் கொம்யுனிஸ்ட் கட்சியின் மூலம் இந்த நூலை Seltrinelli Gian Coma மேல் நிர்ப்பந்தங்களைச் செலுத்தியது. ஆனால் பெரும் செல்வந்தரான இவர் மிகப் பிடிவாதமாக இந்நூலை வெளியிட்டதுடன் கொம்யூனிசக் கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகினார். இத்தாலிய மொழியில் வெளி வந்ததை அடுத்து சோவியத் இலக்கிய சஞ்சிகையான ″நொவியமிர்″ இந்நூலை வெளியிடும் திட்டத்தை உடன் நிறுத்தியது. உண்மையில் சோவியத் யூனியனில் இந்த நூலை வெளியிட முடியாத அளவு சூழலை உருவாக்குவதில் “சீஐஏ” வெற்றி பெற்றது. “பொறிஸ் பாடர்னாக்” நூலுக்கு நோபல்பரிசு தரப்பட வேண்டுமென்று மேற்குலக ஊடகங்களும் எழுத்தாளர்களும் கேட்கத்தொடங்கினார்கள். 1957 இல் நோபல்பரிசு பெற்ற எழுத்தாளரான அல்பேட் காமு 1958 இல் நாவலுக்கு நோபல் பரிசு தரப்படவேண்டுமென்று பிரச்சாரத்தைக் கிளப்பினாhர். இவர் உலக ஜனனாயகத்தை அமெரிக்காவின் முகத்தில் தரிசித்தவர். அமெரிக்க சுதந்திர வாழ்வியல்முறைகளை மெச்சிக் கொண்டாடியவர். கடவுளின் இருப் பை மறுத்து வாழ்வின் இருப்பை ஒத்துக் கொண்டவர். உயிர்வாழ்தலில் அர்த்தமுள்ளதா என்ற கருத்துமுதல்வாத ஆராய்ச்சியினை இலக்கியத்தில் நடத்திக் கொண்டிருந்தவர். தத்துவச் செழுமை கொண்ட பிரான்சில் இவர் கவனம் பெறாமல் அமெரிக்காவில் மரியாதை பெற்றமைக்கான காரணங்கள் இருந்தன. இவர் தீவிரமான கொம்யூனிச எதிரி. பிரான்ஸ் அல்ஜீரியாவை ஆக்கிரமித்ததை எதிர்க்காத அளவு பிரான்ஸ்சிய தேசிய வாதத்தால் தாக்குண்டவர். சந்தேகத்திற்கிடமான பின்புலங்களை அமெரிக்காவில் உடையவர். எழுத்தாளர் ரஸ்சல்; போல் இவரும் உளவுத்துறைச் சகவாசம் கொண்டிருக்கக் கூடும். நோபல் பரிசு பேற்ற கம்மிங்வே போன்றவர்கள் “பொறிஸ் பாஸ்டர்னாக்குக்குச்” சார்பாக வாதாடத் தயாராக இருக்கவில்லை. மேற்கு அபிப்பிராயம் ″டொக்ரர் சிவாகோ″ நாவலுக்குத் திரட்டுப்பட்டு அதற்கு நோபல்பரிசு தரப்பட வேண்டுமென்று சகல திசைகளிலிரும் குரல் வந்த நிலையில் 23 ஒக்டோபர் 1958இல் பொறிஸ்பாஸ்டனாக்குக்கான நோபல் இலக்கியப்பரிசு அறிவிக்கப் பட்டது. இவரே ரஸ்ய இலக்கியத்தின் நவீன படைப்பாளி என்று கூறப்பட்டது. இவர் கொம்யூனிச சர்வாதிகார நடத்தைக்கு எதிரான மறுப்பாக விளக்கப்பட்டார். இவரைவிடச் சிறந்த இலக்கியவாதிகள் சோவியத் யூனியனில் இருந்தபோதும் ஸ்டாலினிசத்தின் கட்டாய இலக்கியப் பயிர்செய்கைக்குத் தப்பிய படைப்பாளிகள் இருந்தபோதும் அவர்கள் கணக்கிடப்படவில்லை. டொக்ரர் சிவாகோக்கு நோபல் பரிசு தரப்பட்டதானது சோவியத் யூனியனுக்கு எதிரான பிரமாண்டமான அரசியற் தாக்குதலாக இருந்தது.

 

நோபல்பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் நோபல் பரிசுக் குழுவுக்கு பொறிஸ் பாஸ்டர்னாக் தனது நன்றியைத்தெரிவித்துத் தந்தி அடித்தார். அதில் அவர் தனது எல்லையற்ற நன்றிகளுடன் தான் பெருமையும் அதிர்ச்சியும் அடைந்ததாகவும் குறிப்பிட்டார். அவர் நேரே சுவீடன் சென்று அரசரின் கையால் நோபல் பரிசைப் பெற விரும்பினார். முதலாளித்துவத்துடனோ சோசலித்துடனோ சம்பந்தமற்ற அரசியலுக்குப் புறம்பான நபராக காண்பிக்க இடையாறது அவர் முயன்றார். தன்னை மனித அறவியலின்பாற்பட்ட இலக்கியப் படைபாளியாகக் காண்பித்தார். ஆனால் இவரது நூல் வெளியீடுகளில் நோபல்பரிசு முயற்சிகளில் அமெரிக்க உளவுத்துறை சம்பந்தப்பட்டுள்ளதை அவர் உணர்ந்தே இருந்தார். அவர் மகனான Jiwgeni Pasdernak அண்மையில் “லண்டன் ரைம்ஸ்” பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் இதை அவர் வெளிப்படையாகவே கூறினார். ″டொக்ரர் சிவாகோ″ நூல் நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்க “சீஐஏ” யுடன்; அன்றய ஐ.நா செயலாளர்Dag Hammerskjoeld ஈடுபட்டார். இந்த ஐ.நா செயலாளர் 1961 இல் கொங்கோவில் ஜனனாயகரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட “பற்றிக்ஸ் லுமும்பாவின்” அரசைக் கவிழ்ப்பது மற்றும் அவரின் கொலைகளின் பின்பான ஏகாதிபத்திய அரசியல் நபராகவும் இருந்தவர். உண்மையில் 1958 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல்பரிசு இத்தாலிய இலக்கியவாதி alberto Morebia கே வழங்கப்படவிருந்தது. நோபல்பரிசுக்குழுவின் பெரும்பான்மையோரின் தீர்மானமாக முதலில் அதுவே இருந்தது. “சீ ஐ ஏ” யின் நோபல் பரிசுக் குழு மேலான செல்வாக்கினால் இந்த முடிவு பின்பு மாற்றப் பட்டது என்று இத்தாலியப் பத்திரிகையான “La Stampa” 9.01. 2009 இல் எழுதியுள்ளதாக ஜேர்மனிய இடதுசாரிப் பத்திரிகையான “யுங்கவேல்ட்”( Jungewelt) குறிப்பிடுகிறது. நெதர்லாந்தின் உளவுத்துறையான “BDV” யும் “சீஐஏ” உடன் கூட்டாகசோவியத் எதிர்ப்பில் பங்கேற்றுள்ளது. நோபல் பரிசு வழங்கப்பட்டதை அடுத்து சோவியத் யூனியன் ஊடகங்கள் பொறிஸ் பாஸ்டர்னாக் மேல் தீவிர விமர்சனங்களை வெளியிட்டன. அவரை சோசலிச விரோதி, அதீதமான தனிமனித வாதி எனத்தாக்குதலை நடாத்தின.

 

போறிஸ் பாட்டர்னாக் உடனே பணிந்தார். அவர் பரிசு பெற வெளி நாடு போவதாயின் அங்கு அவர் முதலாளித்துவ சொர்க்கத்திலேயே தங்கிக் கொள்ள்லாமென்று அரச அதிகாரிகள் அவரை எச்சரித்தனர். எனவே அவர் பரிசை நிராகரிப்பதாக அறிவித்தார். எனினும் அவர் தனது மரணத்திற்கு முன்பாக 1960இல் தான்நேரில் சென்று அப்பரிசை வாங்காது விட்டது தவறு என்று வருந்தியதாகத ;தெரிகிறது. ″டொக்டர் சிவாகோ ″ நாவலுக்குப் பரிசு வழங்கப்பட்டமைக்கு பொறிஸ் பாஸ்டர்னாக் சீஐஏ க்கும் குளிர்கால யுத்தத்திற்கும் கொம்யூனிச விரோதத்திற்குமே நன்றி கூறவேண்டும். அதனாற்தான்; அவருக்கு நோபல்பரிசு தரப்பட்டது. அவர் மேற்குலகெங்கும் படிக்கப் பட்டார். உலகப் படைப்பாளியாக ஏற்கப்பட்டார். அவரின் எழுத்தில் சோசலிசஎதிர்ப்புப் படைப்பம்சம் இல்லாவிட்டால் அது ஏற்கப்பட்டிராது. கொலிவூட் திரைப்படமாகவும் அது ஆகியிராது. “சீஐஏ” தான் “பொறிஸ் பாஸ்டனாக்கை” உலக இலக்கியவாதி ஆக்கியது. அதற்காக உண்மையான இலக்கியப் படைப்பாளிகள் பலியிடப் பட்டனர். பொறிஸ் பாட்டர்னாக் ஸ்டாலினிச அதிகாரத்தை மாக்ஸ்சியம் என்று தவறாகக் கருதினார். அதன் காரணமாக சோசலிசப் புரட்சியின் மீது சநதேகமும் பயமும் கொண்டார். சோசலிசமானது படிப்படியான சமுதாய வளர்ச்சிக்கு உரியது. பரிணாமங்களைக் கொண்டது என்று விளங்குமளவு பக்குவம் அவரிடம் இருக்கவில்லை.
தமிழரசன்

21.03.2009.

Exit mobile version