ஆரம்பகாலக் கவிஞர்களில் ஒருவராகக் கணிப்பிடப்படும் இவரின் கவிதைகள் “மரணத்துள் வாழ்வோம்” கவிதைத்தொகுதியில் இடம் பெற்றுள்ளது.
பின் இவர் புலம் பெயர் நாடுகளில் பல புனை பெயர்களில் எழுதினார். ஜேர்மனியில் இளம் அருவி சஞ்சிகையின் ஆசிரியராக இருந்து 1984ல் அதனை வெளியீடு செய்தவர். அங்கிருந்த காலத்தில் “தீ” என்னும் கவிதைதொகுப்பு இவரால் வெளிக்கொணரப்பட்டது. இவரின் சில கவிதைகள் மாற்று மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. பிறகு இவர் கனடாவிற்குப் இடம்பெயர்ந்து வாழ்ந்தார். அங்கு தமிழ் எழுத்தாளர் இணையத்தால் வெளியீடு செய்யப்பட்ட “அரும்பு” சிறுகதைத் தொகுதியில் இவரின் “குறி” சிறுகதை பலராலும் விமர்சிக்கப்பட்டது. கவியரங்குகளின் தலைமைக் கவியாகிப் பயன் பாடுமிக்க கவிதையரங்குகளை நடத்தினார். இணையங்கள், பத்திரிகைகள், வானொலிகள், தொலைகாட்சிகள், சஞ்சிகைகள் எனப் பலவற்றில் கவிதைகள் எழுதினார்.
பத்திரிகையில், தமது பதினெட்டாவது வயதில் எழுதத் தொடங்கிய சித்தி அவர்கள், நவீன தமிழ்க் கவிதையுலகில் தனி அடையாளம் கொண்டவர். அஞ்சுவது அஞ்சாமை பேதமை என்னும் இவரின் கவிதைதொகுப்பு ஒன்று சென்னையில் வெளியீடு செய்யப்பட்டது.
ஊர் தீப்பற்றிப் பிடிக்கையில்
ஒதுங்கி நின்று ஓட்டுப் பார்த்த
இவனை அவனும், அவனை இவனும்
மாறி மாறி சிருஷ்டி கர்த்தாக்கள் என்கின்றார்கள்.
செத்துக் கிடந்தவரின் பெயரில்
போட்டி போட்டுத் தங்களுக்குத் தாங்களே
நினைவு கொள்கின்றார்கள்
…
நியாயம் கேட்கின்றார்கள்
…..
அர்ச்சனை செய்கின்றார்கள்
….
அபிசேகம் நடாத்துகின்றார்கள்
…….
பிடில் வாசிக்கின்றார்கள்.
நாட்டியம் ஆடுகின்றார்கள்.
வாயசைத்துக் கீதமிசைக்கின்றார்கள்
ஆளுக்காள் மலர்மாலை போட்டு
மகிழ்ந்துவிட்டு மலரஞ்சலி என்கின்றார்கள்.
இனப்பகை உந்த இன்னும்
இரத்தச் சேறாய் குழைந்து கிடக்கிறது மண்.
எரியும் நெருப்பில் கருக்கிக்கிடந்த
பிணங்கள் எழுந்தா சாட்சிக்கு வரும்???
தத்துவங்களைத் தைரியத்தோடு அவிழ்க்கின்றார்கள்
அவசர அவசரமாக
ஆவணங்களைச் செருகுகின்றார்கள்
.
நரக லோகத்தின் ஏழைப்பட்ட
இதயங்களைத் துடிக்க
வைக்கவென
தேவலோகத்தில் புதிய புதிய பத்திரிகைகள்
, வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையங்கள்
பளபளப்பாக்கிச்
சிருஷ்டிக்கின்றார்கள்.
எரித்தவனோடு கைகோர்த்திருந்து
பிணங்களைப் பாடிய ஒவ்வொருவனுக்கும்
விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது
!!!!!!.
இன்னமும் வரும் சிருஷ்டிகர்த்தாக்களுக்காக
இணையத்தில் வெற்றுடம்போடு
இனவெறியனின் எச்சமாய் விறைத்துக் கிடக்கிறது என் தமிழிச்சிகளின் மானம்
!!!!!!.
தோள்த்துண்டைப் தொலையக்கொடுத்துவிட்டு
பொன்னாடையில் புத்தி பேதலித்து நிற்கிறது
புலம்பெயர் நிலம்.
ஏமாந்தவனின் எச்சத்தில்
ஏறுகிறது அவர்களின் கொடி!!!
இனப்பகை உந்த நாடு சுடுகாடாய்க் கிடக்கிறது
இவர்கள் ………
மூடுபனிக்குள் மூழ்கித் தவிக்கிற பாவி
மனிதனின் மீதி உயிரையும்
எடுக்கத் துடிக்கின்றார்கள்.