Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சிரியா மீதான ஆக்கிரமிப்பும் சரிந்து விழும் அமரிக்க சாம்ராச்சியமும்

சிரியாவில் பல கட்சி ஆட்சி நிறுவப்பட்டு ஜனநாயகம் என்ற பெயரில் நடத்தப்படும் சர்வாதிகாரத்திற்கு ஐம்பது வயதுக்கு மேலாகிறது. சிரிய அதிபர் பஷீர் ஆசாத் ஆட்சி காலம் முழுவதும் அப்பட்டமான சர்வாதிகார ஆட்சியும் பாசிசமும் கோலோச்சுகிறது. சிரிய அரசின் கோரத்திற்கு எதிராகப் போராடுவதாகக் கூறும் எதிர்க்கட்சிகளோ அல்கயிதா, ஜிகாதிகள் போன்ற மனிதாபிமானமற்ற மக்கள் விரோதிகள். இந்த எதிர்க்கட்சியுடன் சிரியாவிற்கு வெளியிலிருந்தும் பயங்கரவாதிகளைக் குவித்து அமரிக்கா ஆரம்பித்த தாக்குதல் கடந்த இரண்டுவருடங்களுக்கு மேலாக நடைபெறுகிறது. ‘இஸ்லாமியப் பயங்கரவாதத்திற்கு’ எதிராக போராடுவதாகக் கூறியே லட்சக்கணக்கான மக்களைக் கொன்றொழித்து இரத்தம் பருகிய அமரிக்கா தலைமையிலான மேற்குலகம் இஸ்லாமியப் பயங்கரவாதத்தை சிரியாவில் வளர்த்தது.

அமரிக்க ஆதரவு பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடிய மக்கள் ஆயிரக்கணக்கில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் பலியாகினர். சிரிய மக்கள் மீது அமரிக்க ஆதரவுப் பயங்கரவாதிகள் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தினர். உலகின் யுத்த விதிமுறைகள் அனைத்திற்கும் எதிராக இஸ்லாமியப் பயங்கரவாதிகள் யுத்தம் நடத்தினர்.

எல்லை கடந்த மருத்துவர்கள் (Doctors Without Borders) என்ற அமைப்பு அமரிக்க ஆதரவு இஸ்லாமிய அடிப்படைவாதிகளையும் அவர்களது குடும்பங்களையும் ,மக்களையும் விசாரணை செய்தது அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்குச் சமர்ப்பித்தனர். இன்று மக்களின் நம்பிக்கையை இழந்துவரும் வியாபார ஊடகங்கள் அதனைக் கண்டுகொள்ளவில்லை. அறிக்கையின் அடிப்படையில் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராகப் போராடுவதாகக் கூறும் இஸ்லாமியப் பயங்கரவாதிகள் தாம் ஆயுதங்களைப் பயன்படுத்திகிறோம் என்று தெரியாமலேயே அதனைப் பயன்படுத்தினர். அவர்களிடையேயான தவறான நிர்வாகமே இதற்கான காரணம் என்று அறிக்கை மேலும் கூறுகிறது.

இரசாயன ஆயுதங்களை வழங்கிய அமரிக்க அடிமை நாடான சவுதி அரேபியா அந்த ஆயுதங்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதைக் கூட கற்றுத்தரவில்லை எனக் குறைப்பட்டுக்கொள்கிறார் ஆசாத் ஆட்சிக்கு எதிராக ஆயுதம் தாங்கிய பெண் ஒருவர்.

‘எமக்கு அவை இரசாயன ஆயுதங்கள் என்பது தெரியாது நாங்கள் அதனைக் கற்பனை செய்துகூடப் பார்க்கவில்லை.என்று கூறும் அந்தப் பெண், சவுதி இளவரசர் பந்தார் அவ்வாறான ஆயுதங்களைப் பயன்படுத்தத் தெரிந்தவர்களுக்கே வழங்கியிருக்க வேண்டும் என்று வேறு குறைப்பட்டுக்கொள்கிறார்.

இந்த யுத்தத்தில் அமரிக்க அரசபயங்கரவாதத்திற்கு எதிராக சிரிய மக்களின் போராட்டம் ஆசாத்தை ஆதரிக்கும் நிலைவரை சென்றது. அரேபிய நாடுகள் முழுவதும் அமரிக்க ஐரோப்பிய அரச பயங்கரவாதம், தமது பொம்மை அரசை நியமிப்பதற்காக நடத்திய போலிப் புரட்சி சிரியாவில் படு தோல்வியடைந்தது.

அமரிக்க ஆதரவுப் பயங்கரவாதிகளின் நிலைகளை மக்களின் ஆதரவோடு கையகப்படுத்திய சிரிய இராணுவம் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளது.

இப்போது அமரிக்கா தனது நட்பு நாடுகளுடன் இணைந்து சிரியா மீது நேரடி யுத்தம் ஒன்றைக் கட்டவிழ்த்துவிடத் தயாராகி வருகிறது.

அமரிக்காவிற்கு இரத்தப்பசியெடுக்கும் போதெல்லாம் பிரன்சிற்கும் பிரித்தானியாவிற்கும் பசியெடுக்கும். இந்தத்தடவை 1782 ஆம் ஆண்டின் பின்னர் பிரித்தானிய பாராளுமன்றம் அந்த நாட்டின் பிரதமரின் ஆக்கிரமிப்பு யுத்தத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளமை வரலாற்றின் பிரதான கட்டம் ஒன்றில் நாம் வாழ்கிறோம் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. பிரித்தானிய மக்களின் அபிபிராயம் பல்தேசிய நிறுவனங்கள் நலனுக்குக்காக யுத்தம் புரியும் யுத்தப் பிரபுக்களுக்கு எதிராகத் திரும்பியுள்ளதைக் கணித்துக்கொண்ட எதிர்க்கட்சியும் ஆளும் சிறுபான்மை அரச உறுப்பினர்களும் ஆக்கிரமிப்பிற்கு எதிராக வாக்களித்து பிரித்தானியப் பிரதமரின் முகத்தில் ஓங்கி அறைந்துள்ளனர்.

பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை அதன் புதைகுழிகளின் விழிம்பிற்கு அந்த நாட்டு மக்களே அழைத்துவந்துள்ளனர் என்பதற்கு இதைத்தவிர வேறு சான்றுகள் தெவையில்லை. உள் நாட்டில் மீளமுடியாத பொருளாதார நெருக்கடிக்குள் அமிழ்ந்துள்ள பிரித்தானியாவும் ஏகாதிபத்தியப் பயங்கரவாதிகளும் தமது அழிவுக்காலத்தை ஆரம்பித்துவிட்டனர்.

பிரித்தானியப் பாராளுமன்றத்தின் எதிர்கட்சியான தொழிற்கட்சி ஏதோ மனிதாபிமானம் பொங்கி வழிந்து ஆக்கிரமிப்பிற்கு எதிராக வாக்களித்தது என்றெல்லாம் கிடையாது. தொழிற்கட்சியின் முக்கிய உறுப்பினரான டயான் அபோத் கூறுவது போல மக்களின் அபிப்பிராயம் ஆக்கிரமிப்பிற்கு எதிராக உள்ளது என்பதே தாம் அதற்கு எதிராக வாக்களித்ததிற்கு காரணம் என்கிறார். ஆக, போருக்கு எதிரான பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பொறுக்கிக்கொள்வதற்காக தொழிற்கட்சியும் ஆளும் சிறுபான்மைக் கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் ஆக்கிரமிப்பிற்கு எதிராக வாகளித்துள்ளனர்.

தகவல் தொழில் நுட்பம் போன்ற புதிய கண்டுபிடிப்புக்க:ளை ஒரு புறத்தில் மக்களை அழிப்பதற்கு ஏகபோக நாடுகள் பயன்படுத்திக்கொண்டாலும் மறுபுறத்தில் அதே தொழி நுட்பம் மக்களை அரசியல் மயப்படுத்தவும் பயன்பட்டிருக்கிறது. விக்கிலீக்ஸ் இன் தகவல்களை இன்று நிராகரிக்கும் யாரையும் காண்பது அரிது. சினோடென் வழங்கிய உண்மைகளை ஏகாதிபத்திய அரசுகள் கூட நிராகரிக்கவில்லை. தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு மத்தியிலும் பயங்கரவாதிகளின் கொலைவெறிக்கு மத்தியிலும் விக்கிலீக்சும் சினோடெனும் இன்னும் உயிர்வாழ்கிறார்கள்.

ஏகபோக நாடுகளில் வாழ்கின்ற மக்கள் முன்னைப் போலன்றி உண்மையை உணர ஆரம்பித்துள்ளனர். ஜூலியன் அசாஞ்ஜ், எட்வார்ட் ஸ்னோடென், ரொன் போல் உடப்ட உலகெங்கும் பரந்திருக்கும் ஜனநாயக முற்போக்கு சக்திகளின் பங்களிப்பும், நடைமுறை வாழ்வும் மக்களின் அபிப்பிராயத்தை மாற்றுவதற்குப் பங்களித்துள்ளன.

பிரன்சின் சோசலிசக் கட்சியின் ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தின் சம்மதமின்றி போருக்கு உத்தரவிடுவதற்கு சட்டரீதியான அங்கீகரமுண்டு. சிரியாவிடம் வகைவகையான இரசாயன ஆயுதங்கள் கையிருப்பில் உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது என்று கூறும் பிரஞ்சு ஜனாதிபதி உடனடியாகத் தாக்குதல் நடத்தியே தீரவேண்டும் என்கிறார். ஒபாமா தாக்குதல் நடத்துவதாக தாம் தீர்மானித்துவிட்டதாகக் கூறுகிறார்.

இன்றைய ஐரோப்பாவையும் அமரிக்காவையும் பல் தேசிய வியாபாரங்களின் நலன்களுக்காகத் தக்கவைத்துக் கொள்வதற்கு அரசுகளிற்கு சர்வாதிகாரிகள் தேவைப்படுகின்றனர். அமரிக்க அதிபர் ஒபாமாவும் பிரஞ்சு அதிபர் பிரான்சுவா ஒல்லோந்தும் அதன் வாழும் உதாரணங்கள்.

தமக்குப் போர்ப்பசியெடுத்துள்ளதாக அமரிக்க மற்றும் பிரஞ்சு சர்வாதிகாரிகள் அறிவித்த முதல் நாளிலிருந்து சாரி சாரியாக மக்கள் போராடுகிறார்கள். இவற்றை அந்த நாடுகளின் சர்வாதிகாரிகள் கண்டுகொள்ளப் போவதில்லை. ஆனால் மக்களின் உனர்வுகளில் ஏற்பட்ட புதிய மாற்றம் வரலாற்றில் மறுக்கமுடியாத திருப்பு முனை.

மேலும் :

Cameron’s crisis: coalition defeated over Syria

THE PROOF THAT Obama has LIED about Asaad’s CHEMICAL WEAPONS to ATTACK SYRIANS

Syrian Rebels admit to being behind Chemical Weapons Attack

Exit mobile version