Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சிங்கள பௌத்த “குற்றவுணர்வுடன்” வாழ்வதை வரையறுக்கும் தருணங்கள் : குசால் பெரேரா

 

‘’ உள்ளூரில் இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்புவதற்கான நடைமுறைகள் என்னேன்ன?’’ ஒரு நாள் காலையில் இப்படிக் கேட்டது எனது ஒரு நண்பர்.  ‘’ அந்த மக்களுக்கு பொருட்களை சேர்ப்பதற்காக ஒரு குழுவுக்கு எனது மகள் உதவுகிறாள்’’ என்றும் அவர் கூறினார்.
 
‘’ இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களுக்கு அடுத்த கிழமை நாங்கள் போகலாம் என்று இருக்கிறோம்’’ இப்படிக் கூறியது எனது இன்னுமொரு சகா.
 
 ‘’ றொட்டரி கழகக்காரர்களும் மனிக் பார்மில் சில உதவிப் பணிகளை செய்கிறார்கள்.’’
 
‘’ வவுனியாவின் தொண்டரடிப்படையில் உதவும் குழு ஒன்று என்னையும் தங்களுடன் இணையுமாறு கேட்டிருக்கிறது. ஏற்கனவே ஒரு தடவை அங்கு அவர்கள் சென்று வந்திருக்கிறார்கள். போனால் என்ன பரவாயில்லையா’’ இன்னுமொருவர் இப்படி என்னிடம் கேட்டார்.
 
இலங்கை உள்ளூர் ஊடகங்களிலும், அதனைவிட அதிகமாக இணையத் தளங்களிலும், இலங்கையில் இடம்பெயர்ந்த தமிழர்கள் தொடர்பாக நிறையக் கதைகள் வருகின்றன. அகதிகளாகிப் போயிருக்கின்ற இந்த மக்களின் வாழ்க்கையின் உண்மை நிலையை அறிவதற்காக, அங்கு வவுனியாவுக்கு செல்பவர்களின் எண்ணிக்கையும் இப்போதெல்லாம் ஒரு மடை திறந்த வெள்ளம் போல் அதிகரித்திருக்கிறது.
 
ஒரு ஊடகத்தின் நிரந்தரப் பணியாளராக அல்லாத சில செய்தியாளர்கள், ஊடக நிறுவனங்களை கவருவதற்கான ஒரு செய்திக் கதையை பெறுவதற்கான வாய்ப்பாகவும் இந்த இடம்பெயர்ந்த மக்களை பயன்படுத்திக்கொள்கிறார்கள். தென்னிலங்கையில் இருக்கின்ற பல குழுக்கள், கழகங்கள் வவுனியாவுக்கு வாகனத்தை ஓட்டிச் சென்று அங்குள்ள அகதிகளுக்கு உதவிப் பொருட்களை விநியோகித்துவிட்டு, கொஞ்ச நேரம் உதவிப் பணிகளையும் செய்துவிட்டு வர விளைகின்றன.
 
இவர்களெல்லாம் திரும்பி வருகின்றபோது முகாமில் இருக்கின்றவர்கள் பற்றி ஆளாளுக்கு ஒரு கண்ணீர் கதையுடந்தான் திரும்பி வருகிறார்கள். அத்தோடு, அந்த முட்கம்பிகளுக்கு பின்னால் நிற்கின்ற அந்த மக்களுக்கு எவ்வளவோ உதவிகளை தம்மால் செய்ய முடிந்ததாகக் கூறி, அங்கு தாம் போய் வந்த பயணத்தை நியாயப்படுத்தவும் அவர்கள் முயற்சிக்கிறார்கள். ‘’ இந்த அப்பாவி மக்களுக்கு ஏன் இந்த அகதி வாழ்க்கை, எவ்வளவு காலத்துக்கு அவர்கள் இதனை வாழ வேண்டும்’’ என்ற விடயத்தை இந்த சுற்றுலா சென்று வருகின்ற தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் என்றும் விவாதிக்க விரும்புவதில்லை.
 
இந்த தமிழ் அகதிகள் தமது மூதாதையரின் வாழ்விடங்களில் இருந்து வேரறுக்கப்பட்டு, இடம்பெயர்ந்ததற்கு அவர்கள் சம்பந்தப்படாத, பங்கேற்காத அந்தப் போர் மாத்திரம் காரணமல்ல. இன்று தென்னிலைங்கையில் இருந்து அவர்களுக்கு பிச்சை போட வந்திருக்கின்ற இந்த உல்லாசப் பயணிகளும்கூட இந்த மக்கள் அடிக்கடி இடம்பெயர நேர்ந்ததற்கு ஒரு முக்கிய காரணமாகும்.
 
இந்த மக்கள் இன்று பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவதற்கு அவர்கள் தமது வாழ்விடங்களில் இருந்து வேரறுக்கப்பட்டு, இடம்பெயரச் செய்யப்பட்டதே காரணமாகும். அந்த இடப்பெயர்வுக்கு காரணம் அரசியல் ரீதியான முரண்பாடு மற்றும் மோதல்கள்.
 
ஆனால், இவர்கள் ஏதோ இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றும், அந்த அனர்த்தத்துக்கு மனிதர்கள் எவரும் பொறுப்பல்ல என்பது போன்றும் காண்பிக்கப்படுகிறார்கள்.
 
சிலர் இந்த அனாதரவற்ற தமிழர்களை, சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒப்பிடலாம். சுனாமி நிவாரண திட்டத்தை வவுனியா முகாம்களுடன் ஒப்பிடுகின்றவர்கள், ‘’கடவுளே இராணுவம் எவ்வளவு நன்றாக தன்னுடைய வேலையை செய்திருக்கிறது’’ என்று கூறுவார்கள்.
 
ஆண்டவன் புண்ணியத்தில், ஆயிரக்கணக்கான மக்களை இடம்பெயரச் செய்த சுனாமிக்கு ‘’ இலங்கையின் வரி செலுத்துபவர்கள்’’ நிதி முதலீடு செய்யவுமில்லை, அதனைத் தோற்றுவிக்கவும் இல்லை.  அதேவேளை, சுனாமிக்கென இலங்கை சமூகம் தனியான கொள்கையை வரையறுக்கவும் இல்லை.
 
இந்த முட்கம்பிகளுக்கு பின்னால் நிற்பவர்கள் எல்லாம், சுனாமி அகதிகள் அல்ல. அப்படியானால் அவர்கள் பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டதற்கு காரணம் என்ன? இலங்கையில் வரி செலுத்துவோரின் பணத்தில் இருந்துதான், இவர்கள் எதிர்கொண்ட அனர்த்தம் அனைத்துக்கான கொடுமைகளும் செய்யப்பட்டன. இப்போது அவர்களுக்கு உணவு கொடுப்பது, பராமரிப்பது எல்லாம் கூட அதே வரிசெலுத்துவோரின் பைகளில் இருந்து வழங்கப்பட்ட அல்லது பிச்சை போடப்பட்ட பணத்தில் இருந்துதான். இதற்கு நாடுகடந்து வாழ்பவர்கள் கூட பணம் கொடுத்தார்கள் என்று கூறமுடியாது.
 
இன்று பிச்சைபோட வந்திருக்கின்ற இந்த தென்னிலங்கை கொடையாளிகள் எல்லாம், வருடா, வருடம், தினம்,தினம் தமது பணம் இந்த அப்பாவி மக்கள் மீது குண்டுமாரியாக பொழிந்தபோது பார்த்துக்கொண்டு இருந்தவர்கள்தான்.
 
அப்போதெல்லாம் வன்னியில் இருந்த இந்த மூன்று லட்சம் பேரும் அவர்களுக்கு அப்பாவி மக்களாக தெரியவில்லை. அவர்களெல்லாம் புலிப் பயங்கரவாதிகளாகத்தான் தெரிந்தார்கள்.
 
தாம் விடுதலைப்புலிகளின் இலக்குகளையே சரியாக இலக்கு வைப்பதாக கூறிக்கொண்டு அரசாங்கம் தமது வரிப்பணத்தில் குண்டுத்தாக்குதல் நடத்தி, இந்த மக்களை இடமிடமாக அலைய வைத்தபோது, இடம்பெயர வைத்தபோது, ஒவ்வொருவராக கொன்றபோது இவர்கள் அதனை கரகோஷம் செய்து வரவேற்றுக்கொண்டுதான் இருந்தார்கள்.
 
தமது வரிப்பணத்தின் மூலம் இறுதியாக பிரிவினைப் புலிகளை அரசாங்கம் வென்றபோது, வெற்றியைக் கொண்டாட, தெருக்களில் ஊர்வலங்களிலும், தமது வாகனங்களிலும் சிங்கக் கொடியை கட்டி அசைத்துக்கொண்டிருந்தவர்களும் இவர்கள்தான்.
 
பட்டாசு வெடித்துகொண்டாடுவதிலும் இவர்கள் விண்ணர்கள். புலிகள் பிரேமதாஸவை கொன்றபோதும் இவர்கள் நகர தெருக்களில் இதனையே செய்தார்கள். அப்போது அது அவர்களது வரிப்பணமல்ல.
 
தமிழர்களின் பிரிவினை வாதத்துக்கு எதிரான வெற்றியை இவர்கள் செலுத்திய வரியில் செயற்பட்ட ஆட்சியாளர்கள் தேசாபிமானமாக்கியிருக்கிறார்கள். அந்த வெற்றியை கட்டுக்கடங்கா ஆக்கிரோசத்துடனும், குதுகலத்துடனும் வாரக்கணக்கில் இவர்கள் கொண்டாடினார்கள்.
 
இவற்றின் மூலம் துட்டகமுனுவை விடப் பெரிய ‘’ நவீன, அசைக்க முடியாத மன்னன்’’ ஒருவரையும் உருவாக்க இவர்கள்தான் பணம் செலவிட்டார்கள். 
 
அத்துடன் சேர்த்து, மூன்று லட்சம் மக்களை இடம்பெயரச் செய்த பேரவலத்துக்கும், குழந்தைகளை அனாதைகளாக்கிய பேரவலத்துக்கும், பெற்றோர்களை குழந்தைகளை இழக்கச் செய்த பேரவலத்துக்கும், மனைவியை இழந்த கணவனையும் கணவனை இழந்த மனையையும் உருவாக்கிய பேரவலத்துக்கும், காணாமல் போனவர்களையும், கடத்தப்பட்டவர்களையும், அவயவங்களை இழந்தவர்களையும் கொண்ட சமூகத்தை உருவாக்கிய பேரவலத்துக்கும் இவர்கள்தான் தமது வரிப்பணத்தில் இருந்து நிதி கொடுத்தார்கள். இவர்களின் வரிப்பணத்தில்தான் இந்த பேரவலங்கள் அனைத்தும் நடத்தப்பட்டன.
 
மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு என 03 மாவட்டங்களை தரைமட்டமாக்க நிதி தந்த இந்த தென்னிலங்கையர்தான், இடிந்துபோனவற்றை மீண்டும் கட்டுவதற்கான சாத்தியமான திட்டங்களுக்காக இன்று 03% தேசிய கட்டுமான வரியையும் தந்துகொண்டிருக்கிறார்கள்.
 
இந்த மனித பேரவலத்தை நடத்த இவர்கள் தந்த நிதியின் ஒரு பகுதிதான், தெற்கே, போரினால் உறவினர்களை இழந்த குடும்பங்களுக்கு ‘’ வீர- பிரசாத’’ என்ற பெயரில் கொடுக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதிதான், ‘’ தாய் மண்ணுக்கு தியாகம் செய்த பழைய மாணவர்களுக்கான மரியாதை’’ என்ற பெயரில் கொடுக்கப்படுகிறது. அத்துடன், பாதுகாப்பு அமைச்சினால் மாத்திரம் வழங்கப்படக் கூடிய விருதான ‘ரண விரு’’ (போர் மாவீரன்) என்ற விருது வழங்கப்படுவதும் இதன் மூலந்தான்.
 
இந்த முகாம்களில் உள்ள மக்கள் எல்லாம் சாதாரண இலங்கைப் பிரஜைகள்தான். இந்த பிரச்சினைக்கு அரசியல் ரீதியான ஜனநாயகத் தீர்வு ஒன்றை வழங்க தெற்கு தயாராக இருந்திருந்தால், இவர்களெல்லாம் இந்த அக்கிரமமான பேரவலத்தை சந்திக்க நேர்ந்திருக்காது.
 
இந்த ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை நிர்மூலம் செய்யப்படக் கூடாது என்று தெற்கு, குறிப்பாக இந்த சிங்கள பௌத்தம் நினைத்திருந்தால், இந்த முட்கம்பிகளுக்கு பின்னால் நிற்பவர்களுக்கு அது நடந்திருக்காது.
 
இலங்கையின் சுதந்திரத்துக்குப் பின்னர் பல ஆண்டுகாலமாக இழுத்தடிக்கப்பட்ட அரசியல் தீர்வு முயற்சிகளை, ஜனநாயக ரீதியில் தீர்த்து வைக்க வேண்டும் என்று இந்த தென்னிலங்கை கொடையாளிச் சீமான்களும், சீமாட்டிகளும் முயற்சித்திருந்தால், இந்த அப்பாவிகளுக்கு இந்த பேரவலம் நேர்ந்திருக்காது.
 
ஆனால், அதெல்லாம் சமூகப் பொறுப்புணர்வு சார்ந்த விடயங்கள். அவற்றைப் பற்றி கவலைப்பட அவர்கள் தயாராக இருக்கவில்லை. அவர்களெல்லாம், ‘’ நாங்கள் சிங்களவர்கள்’’ மற்றும் ‘’ இது கௌதம புத்தரின் மண்’’ என்ற முத்திரையுடன் வடக்கே சென்று சுற்றிவிட்டுவருவதில்தான் மகிச்சியடைகிறார்கள்.
 
சுதந்திரம் கிடைத்து 6 தசாப்தங்கள் முடிந்தவிட்ட பிறகு இப்போதுதான், இலங்கையின் மத்திய தரவர்க்கத்தின், ஒன்றுக்கொன்று முரணான மனப்பாங்குகளுக்கு இடையே நாம் நல்லிணக்கம் காணவேண்டியுள்ளது.
 
தெருக்களியாட்டங்கள் குறைந்து வருகின்றன. இந்த போர் பித்துநிலை இப்போது முடிந்துவிட்டது. ஆனால், தமது போருக்கு ஆதரவு வழங்கிய தென்பகுதியில் கூட ஜனநாயக வாழ்க்கைக்கான ஒரு இடுக்கிப் பிடியை அரசாங்கம் இன்னமும் தளர்த்தவில்லை. போத்தல ஜயந்த மற்றும் கிருஷ்ணி இஃபாம் ஆகியோர் கடத்தப்பட்டமை போன்ற புதிய கதைகளெல்லாம் இப்போது வருகின்றன. இராணுவம் மேலும் பலப்படுத்தப்பட்டு அதில் மேலும் ஒரு லட்சம் பேர் சேர்க்கப்படுவார்கள் என்பது இப்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் விநியோகத்துக்காக எடுத்துச் செல்லப்பட்ட அனைத்து பத்திரிகைகளும் பறித்து எரிக்கப்பட்டமை, ஒரு செய்திப்பத்திரிகையின் முழு ஊழியர்களுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளமை எல்லாம், அங்கு ஒரு அமைதி வருவதற்கான சமிக்ஞையாக தெரியவில்லை.
 
இடம்பெயர்ந்தவர்களுக்கான நிவாரணம் மற்றும் மறுவாழ்வு ஆகியன குறித்தெல்லாம் பேசப்படுகிறது. அவர்கள் முன்னர் கூறிய எண்ணிக்கையுடன் முரண்படுகின்ற அளவுக்கு இரண்டு லட்சத்து எழுபதினாயிரம் முதல் மூன்று லட்சம் வரையிலான மக்கள் முகாம்களில் அடைபட்டுள்ளார்கள். இனி என்ன நடக்கும்?
 
கிராமங்களில் உள்ள நடுத்தர வர்க்க சிங்கள பௌத்த மக்களிடையே ஒரு சில்லறைத்தனமான மனப்பாங்கு இருக்கிறது. நகரப் பகுதிகளில் இருக்கின்ற மக்கள் மத்தியில் கூட இந்த மனப்பாங்கு காணப்படுகிறது. அதாவது, கிராமத்தில் கடை வைத்திருக்கிற ஒரு முதலாளி, பொருட்களுக்கு அறா விலை வைத்து கிராமம் முழுவதையுமே வருடம் முழுக்க கொள்ளையடிப்பார். ஆனால், வெசாக் பண்டிகையின் போது மாத்திரம், கூடை, கூடையாக எல்லாருக்கும் தானம்(தன்–செல) கொடுத்து கிராமத்திலேயே குணசீலம் மிக்க நல்ல முதலாளி ( சத் குணவத் முதலாளி மகாத்தயா) என்ற பெயரைப் பெற அவர் முயலுவார்.
 
துரதிர்ஸட வசமாக இந்த தென்னிலங்கை கொடையாளிகளின் பிச்சை போடுதல் எல்லாம், தற்போது கையில் இருக்கும் இந்தப் பிரச்சினையை தீர்க்கப்போவதில்லை. எப்படி இந்த இடம்பெயர்ந்தவர்கள் மீள்குடியமர்த்தப்படப் போகிறார்கள், எவ்வளவு விரைவாக அது நடக்கும், எங்கு, எந்த நிலைமையில் அது நடக்கும் என்பதெல்லாம், தென்பகுதி மக்கள் கூட பல்லாண்டு காலமாக மீள முடியாமல் கட்டுண்டு கிடக்கின்ற இனப்பிரச்சினைக்கான தீர்வுடன் நேரடியாக தொடர்புபட்டுக் கிடக்கின்றன.
 
இந்த சீமான்களும், சீமாட்டிகளும் மனிக் பார்மில் பார்க்கின்ற அரைகுறை நிரந்தர தங்குமிடங்களெல்லாம், இந்த இடம்பெயர்ந்தவர்கள் விரைவில் மீள்குடியேற்றப் படமாட்டார்கள் என்ற அர்த்தத்தையே தரலாம்.
 
அப்படி அவர்கள் மீளக் குடியமர்த்த கொண்டு செல்லப்பட்டாலும், அவர்கள் உயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் கொண்டு வைக்கப்படுவார்களா, அல்லது அவர்கள் தமது பரம்பரை நிலங்களை சிங்கள குடியேற்றங்களுடன் பகிர்ந்துகொள்ள நேரிடுமா என்பதெல்லாம் தெரியவில்லை.
 
இந்த அடிப்படை விவகாரங்கள் குறித்து நல்ல மனம் படைத்த கொடையாளிகளுக்கு கூட பதில் தெரியாது. அவற்றுக்கு பதில் தெரியாமலேயே இருக்க அதிகாரத்தின் உயர் மட்டங்கள் அனுமதிக்கப் போவதுமில்லை. அவர்கள்தான் இந்த இடம்பெயர்ந்தவர்களின் விதியை நிர்ணயிப்பார்கள்.
 
அதாவது, இந்தப் பெரிய இதயம் படைத்தவர்கள், தாம் இந்த தொண்டுப் பணிகளையும், பயணங்களையும் ஏற்பாடு செய்யும்போது ஒரு விசயத்தை உணர்ந்து செயற்பட வேண்டும். அதாவது, இந்த முட்கம்பிகளுக்கு அப்பால் நின்றுகொண்டு ஏக்கத்துடன் பார்க்கின்ற அந்த மனிதர்களுக்கும், தெருவில் இறங்கி நடப்பதற்கும், நினைத்த இடங்களுக்கு பயணிப்பதற்கும் உரிமை உண்டு என்பதை அவர்கள் உணரவேண்டும்.
 
இந்த நிவாரண உதவிப் பணிகளை செய்ய விளைகின்ற பெரிய இதயங்கள் அரசாங்கத்திடமும் சில விசயங்களை கேட்க வேண்டிய கடப்பாடுடையவர்களாவர். இடம்பெயர்ந்தவர்களுக்கான அரசாங்கத்தின் மீள்குடியேற்ற திட்டம் பற்றி அவர்கள் கேள்வி எழுப்பியாக வேண்டும். ‘’மீட்சிக்கும் அமைதிக்குமான அரசாங்கத்தின் வரைபடம்’’ குறித்து அவர்கள் கேள்வி எழுப்ப வேண்டும்.
 
சமூகப் பொறுப்புணர்வு இல்லாமல், வெறுமனே கொடைகளும், தேற்றுவதும் உதவாது.
 
இல்லை. அவர்கள் இதைப்பற்றியெல்லாம் பேசமாட்டார்கள். பொருட்களை சேர்த்துக்கொண்டு, மனிக் பார்முக்கு ஓடி, அங்கு அவர்களை நேரில் பார்த்து, அவற்றை கொடுத்துவிட்டு வருவதில்தான் இவர்கள் மகிழ்ச்சியடைவார்கள். இது இவர்கள் தேடி வைத்திருக்கின்ற சிங்கள பௌத்த குற்றவுணர்வை குறைக்க மாத்திரந்தான் உதவும். அவ்வளவுதான். அப்படியானால் சமூகப் பொறுப்புணர்வு? அது வராது. கிடைக்காது. பகுத்துணர்வதற்கான வல்லமையற்ற சில்லறைத்தனமான மனங்களில் அது நடக்காது. பார்த்ததற்கும், கேட்டதற்கும் இடையிலான வித்தியாசங்களை பிரித்தறியும் வல்லமை குறைந்து போகும். அவர்களால், இவையெல்லாம் முடியுமாக இருந்தால், அந்த முட்கம்பிகளுக்கு அப்பால் இருக்கின்ற கனத்த இதயங்களின் வேதனையின் மானுட தர்க்கம் இவர்களுக்கு புரியும்.

Defining moments of living with a Sinhala Buddhist ‘guilt’ : Kusal Perera

நன்றி : http://www.transcurrents.com/    மொழியாக்கம் :  இனியொரு

Exit mobile version