இன்று அவர்களில் ஒருவர் மரணமடைந்ததாகச் செய்திகள் வெளியாகின. சுமார் 200 தொழிலாளர்கள் காயமடைந்த இந்தப் போராட்டம் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து மகிந்த அரசிற்கு எதிராக எழுந்த மிகப்பெரும் குரலாக கருதப்படுகிறது.
இலங்கை அரசு சர்வதேச நாணய நிதியம், உலக் வங்கி போன்ற ஏகாதிபத்திய நிறுவனங்களைத் திருப்திப்படுத்தும் நோக்கில் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் புதிய திட்டங்களை வகுத்து வருகிறது. இவற்றுள் ஒன்றான தனியார் ஓய்வூதியத் திட்டம் இலங்கைத் தொழிலாளர்களின் எதிர்காலத்தை முற்றாகச் சுரண்டும் சட்டமூலாமாகும். இதற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இலங்கை அரசின் பாசிச முகத்தை இன்னொரு முறை உலகிற்குக் வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கையிலுள்ள பெரும்பாலான தொழிற்சங்கங்கள் இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தன. போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கோடு சுதந்திர வர்த்தக வலையப் பகுதியை இலங்கை அரசு முற்றாக மூடியிருந்தது. அங்கு தொழிலாளர்கள் செல்லக்கூடாது என போலீசார் தடை உத்தரவு பிறப்பித்திருந்தனர். அத்தடைகளை மீறி மக்கள் தமது உரிமைக்காகப் போராடிய வேளையிலேயே பொலீசாரின் துப்பாகிப் பிரயோகம் இடம்பெற்றது.
மக்கள் மீதான வன்முறைக்கு எதிராக இலங்கை காவல்துறை மா அதிபர் பதவி விலகியுள்ளார். இன்னும் சில தினங்களில் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து கொண்டு ஓய்வூதியத்தில் செல்லவிருந்த காவல்துறை மா அதிபர் பாலசூர்யவின் விலகல் வெறும் கண்துடைப்பு என்று அறிவித்த தொழிற்சங்கங்கள் இன்று ஆர்ப்பாடம் ஒன்றை நிகழ்த்தியுள்ளன. 26 தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் “மகிந்த சிந்தனை இதுதானா”, “உலகவங்கி, சர்வதேச நாணய நிதியத்தின் ஓய்வூதியக் குழுவை தோல்வியடையச் செய்வோம்”. “தனியார் சட்டமூலத்திற்கு எதிராக 65 இலட்சம் பேர் போராட்டம்’, ” ஓய்வூதியக் குழு எங்களுக்கு வேண்டாம்’, “கடுநாயக்க ஊழியர்களுக்கு ஓய்வூதியம் பொலிஸ் நிலையத்திலா? போன்ற சுலோகங்கள் முன்வைக்கப்பட்டன.
நீண்ட போராட்ட வரலாற்றைக் கொண்ட சிங்களத் தொழிலாளர்களின் எழுச்சி ஒவ்வொரு தடவையும் உத்வேகமடையும் போதும் அதனைத் திசைதிருப்புவதற்காகப் பேரினவாதத்தைத் தமிழ்ப் பேசும் மக்கள் மீது பிரயோகிப்பது வழமை.
இது குறித்துச் சிங்களத் தொழிலாளர்கள் விழிப்படைவதும், தமிழ்ப் பேசும் மக்கள் மீதான ஒடுக்கு முறை அவர்களுக்கும் எதிரானது என்பதை உணர்ந்து கொள்வதும் அவசியமாகும்.
தவிர, சிங்களத் தொழிலாளர்கள் மீதான அடக்கு முறைக்கு எதிக ஒவ்வொரு தமிழ்ப் பேசும் அமைப்புக்களையும் குரல் கொடுக்குமாறு பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கிறோம்.
போராடி மடிந்த சிங்களத் தொழிலாளிக்கு எமது அஞ்சலியையும் தெரிவிக்கிறோம்.