நாட்டின் உயர்ந்த நிறுவனமான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி எக்காரணம் கொண்டும் வடக்கு, கிழக்கை இணைக்க முடியாது, பிரிக்கப்பட்ட வடக்கு. கிழக்கு மாகாணங்களை அடிப்படையாக வைத்தே எவ்வாறான தீர்வுத் திட்டமும் முன்னெடுக்கப்படும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.
நாட்டில் எந்தவிதமான அதிகாரப் பகிர்வும் மேற்கொள்ளப்படக்கூடாது, மாகாண சபை முறைமையும் அவசியமற்றது என நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமிளித்திருக்கிறார் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன.
புலிகளையும் கடந்த கால தென்னிலங்கை அரசியல் தலைவர்களையும் கெமுனு விஜேரத்ன குற்றம் சாட்டியிருப்பதுடன் நாட்டில் இனப்பிரச்சினை இருந்தது என்பதனை தான் நிராகரிப்பதாகவும் அதற்குக் காரணம் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் ஒத்துழைப்புடன் வாழ்கின்றனர் எனவும் தெரிவித்திருக்கிறார்.
தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் ஒத்துழைப்புடன் வாழ்கின்றனர் என்பதற்கும் தமிழ் மக்கள் அனுபவித்த இனரீதியான ஒடுக்குமுறைக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்பதனையும், தமிழ் மக்கள் கடந்த அரைநூற்றாண்டாக அனுபவித்து வருகிற இனரீதியான அடக்குமுறைகள் சிங்கள இனவாத ஆட்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்டது என்பதையும் அவர் புரிந்து கொள்ளத் தவறியிருக்கிறார். இப்போதும் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் ஒத்துழைப்புடன் வாழ்ந்து வருகிறார்கள் எனினும் அரசியல் தலைமைகள் தொடர்ந்தும் இனரீதியான ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்து வருகிறார்கள் என்கிற உண்மையை கெமுனு விஜேரத்ன போன்றவர்கள் உணர்ந்து கொள்ள முடியாமலிருப்பது கவலைக்குரியதாகவே இருக்கிறது. இதற்கு மேலாக சிங்கள இனவாத ஆட்சியாளர்கள் ஏனைய சிறுபாண்மை இனங்களின் மீதான ஒடுக்குமுறைகளை மேற்கொள்கிற போதெல்லாம் அதனை சிங்கள மக்களின் நலனுக்காகவே செய்வதாவே கூறிவருகின்றார்கள் என்பதுவும், அதனை சிங்கள மக்கள் தலைமைகள் மறுத்துரைத்ததில்லை – கேள்விக்குள்ளாக்கியதில்லை என்பதனையும் கெமுனு விஜேரத்ன போன்றவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினரான அத்துரலியே தேரர் பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில், பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்ட நிலையில் பொதுவான கலாசாரத்திற்காக நாம் வித்திடவேண்டும், மிஷனரி சக்திகள் இன்று வட பகுதியில் புகுந்து மதமாற்றத்தினை உருவாக்கி புதியதொரு பிரச்சினையை உருவாக்குகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை எனவும் தமிழ் மக்களுக்கு பிரச்சினை இருக்கிறது அவர்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியிருக்கிறார். தமிழ் மக்கள் பௌத்த மத குருமார்களை மதிக்கிறார்கள் ஆனால் முஸ்லிம்கள் அவ்வாறு மதிப்பதில்லை ஆயினும் அது அவர்களுடைய கலாசாரம் எனவும் சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களிடையே பொதுவான கலாசார இணக்கப்பாட்டு விவாதத்தை ஆரம்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஜாதிக ஹெல உறும இலங்கையில் பல்லின மக்கள் வாழ்வதனை ஏற்காத மற்றும் இலங்கை பௌத்த சிங்களவர்க்குரிய நாடு என்ற அரசியலின் அடிப்படையில் தான் தோற்றம் பெற்றது என்பது வெளிப்படையானது. அத்துரலியே தேரர் பொதுவான கலாசாரம் எனக்கூறுவது பெரும்பண்மையினரான பௌத்த சிங்களவர்களின் கலாசாரத்தினைத்தான். அதனை ஏனைய சிறுபாண்மையினர் ஏற்றுக் கொள்ள வைப்பதற்கான ஒரு இணக்கப்பாட்டுக்கான விவாதத்தினை ஆரம்பிக்க அவர் இப்போது கோரியிருப்பது என்பது ஒரு இணக்கப்பாட்டுக்கான ஒரு ஆரோக்கியமான சூழலை தோற்றுவிக்கப் போவதில்லை என்பது மட்டும் நிச்சயமானது.
முதல் நிலை மட்டத்திலான தமிழ்த் தலைமைகள் படுகொலை செய்யப்பட்டிருக்கிற நிலையில் நாட்டில் இப்பிரதேசங்களில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. சட்ட ரீதியான ஜனநாயகவாத தமிழ்த் தலைமைத்துவம் ஒன்று தானாகவும் துரிதமாகவும் மீளவும் வெளிப்படுத்துவதற்குத் தேவையான அரசியல் ரீதியிலான வாய்ப்புக்களை நாம் ஏற்படுத்த வேண்டும். அதிகாரத்தைப் பங்கிடுவது தொடர்பில் அவர்களுடன் செயற்பட வேண்டி இருக்கிறது. நம்பிக்கை வைக்கக்கூடியவர்கள் இத்தரப்பில் இருக்கவேண்டியுள்ள அதே நேரம் தேர்தல் செயற்பாடுகளை மீளவும் உயிர்ப்பிக்க வேண்டியதன் முக்கியத்துவமும் இங்கு ஏற்படுகிறது என இந்தியாவில் ஜவஹர்லால் நேரு இல்லத்தில் ஆர்.கே.மிஸ்ரா நினைவுப் பேருரையில் உரையாற்றுகையில் வெளிவிகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உரையாற்றியிருக்கிறார்.
வெளிவிகார அமைச்சரின் இக்கருத்தும் இது போன்று பல சிங்களத் தலைவர்கள் அடிக்கடி கூறுவருவதும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வினை முன்வைக்க வேண்டிய ஒரு அழுத்தம் சிங்கள அரசியல் தலைமைகளுக்கு இருந்தே வருகிறது என்பதைக் காட்டுகிறது. அவ்வாறு நேர் இழுத்தங்களுக்கு உள்ளாகாது போனாலும் அத்தகையதொரு உளவியல் அழுத்தத்திற்கு அவர்கள் உள்ளாகியிருக்கிறார்கள் போல் தெரிகிறது. இதனால் காலத்திற்கு காலம் அரசியல் தீர்வொன்றினை முன்வைக்கமால் இருப்பதற்கு ஏதாவது ஒரு காரணத்தை கூற வேண்டியிருக்கிறது. இறுதியாக அவர்களுக்கு கிடைத்துள்ள காரணம் இது. இதற்கு முன்னர் தமிழ் அரசியல் தலைமைகள் ஒற்றுமைப்பட்டு இருக்கவில்லை என்ற காரணத்தினை ஜனாதிபதி கூறியிருந்தார்.
இதனை விட மற்றொரு கேள்வியும் எழுகிறது. அரசுடன் நீண்ட காலமாகவே இணைவு அரசியலை நடத்திவருகிற தமிழ்த் தலைமைகள் அரசுடன் இணைந்து பணியாற்றி வந்திருக்கின்ற நிலையில் அவர்களை முதல் மட்டத்திலான தமிழ்த் தலைமைகளாக, சட்ட ரீதியான ஜனநாயகவாத தமிழ்த் தலைமைத்துவமாக, நம்பிக்கை வைக்கக்கூடியவர்களாக பீரிஸ் கருதவில்லையா ?
சிங்கள இனவாத தலைவர்கள் இவ்வாறு கூறி வருகையில், ஆணைக்குழு முன் சாட்சியமளித்த சர்வோதய தலைவர் ஆரியரட்ண அனைத்து சட்ட உரிமைகளும் உள்ளதாக உணரும் அரசியல் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் எனத் தெரிவித்ததுள்ளார். அதே வேளை ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினரான விஜேதாச ராஜபக்ஷ, இந்நாட்டில் சிறுபாண்மைச் சமூகம் என்றதொரு சமூகம் இல்லையென்று அரசியல் கோஷம் எழுப்பப்படுவதால் மாத்திரம் தமிழர்களது பிரச்சினைகள் தீர்ந்துவிடப்போவதில்லை, எனவே நடைமுறைச் சாத்தியமான ரீதியில் தீர்வுகள், பாதுகாப்பு வழங்க வேண்டும். யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் சமாதானம் தோன்றியுள்ளதக கூறப்படுவது வெறும் மயை மட்டமே என பாராளுமன்றத்தில் உரையாற்றியிருக்கிறார். நடைமுறைச் சாத்தியமான அரசியல் என்பதில் ‘நடைமுறைச் சாத்தியம்” என்பது சிக்கல் நிறைந்ததொரு விடயம் என்பதை யாவரும் அறிவோம். இதே போலவே பெரும்பாண்மைச் சிங்கள மக்கள் ஏற்கக்கூடிய தீர்வு என்ற வாதமும் முன்வைக்கப்பட்டு வந்தது.
தென்னிலங்கையில் தற்போது இனப்பிரச்சினை ஒன்று இல்லை, எனவே அரசியல் தீர்வொன்று தேவையில்லை என்ற கருத்தே வலுவடைந்து வருகிறது. இதற்கு மேலாக சிறுபாண்மை இனம் என்ற ஒன்று இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.