அது விலங்குகள்
வாழும் மனிதர்களின் நாடு
மனிதர்கள்
விலங்குகளாய் வாழும்
காடென்றும்
அயல்தேசத்தவர்
அதனை
அழைப்பர்
அந்த நாட்டுக்குள்
இல்லை..! இல்லை..!
காட்டுக்குள்
காவி ஆடைகளால்
தம்மை மறைத்தபடி
நரமாமிசம் தேடிய
கழுதைப் புலிகளின்
பொதுச்செயலாளன் ஓநாய்
எங்கோ சில காலம்
பதுங்கியிருந்துவிட்டு
மீண்டும் வருகிறது ஊருக்குள்
அரியாசனம் தேடி அலையும்
(அ)சிங்கத்தின் வாலைப்பிடித்தபடி …
மான்கள்
முயல்கள்
ஆடுகள்
கோழிகள் புறாக்களெல்லாம்
அன்னத்தின் காதலன் யானையை
அரசனாக்க முயல
காட்டெலிகளும்
கழுதைப்புலிகளும்
சிங்கம் தின்றுபோடும்
மிச்ச எலும்புக்காய் அலையும் நாய்களும்
நிழல் தரும் மரங்களின் கீழ்
நாம் ஊயிருற்றி வளர்த்த
எங்களது எருமை மாடுகளும்
அப்பாவி ஆடுகளை
கொன்றொழித்த
சிங்கத்தை மீண்டும்
அரியாசனத்தில ஏற்றி
அழகு பார்க்க
பகல் கனவு காண்கின்றன..
எங்களது குழந்தைகளுக்கு
சேர வேண்டிய
பசுக்களின் பாலை
பலவந்தமாக திருடி
பூனைகளுக்கு கொடுத்துவிட்டு
கழுதைப்புலிகளை ஏவிவிட்டு
பசுக்களை கொன்று
பசுக்களின் தொழுவங்களை அழித்து
நாசம் செய்த
சிங்கத்தின் குகைக்குள்
ரோசம் சுரணையற்று
குந்தியிருந்து கொண்டு
‘இன்று வருவோம்..
நாளை வருவோம்…’ என
அறிக்கைவிடும்
எங்களது
எருமை மாடுகளுக்கு
அடுத்த தேர்தலில்
அடிப்பதற்கு
பழைய செருப்போடு
ஆப்பையும் தயார்படுத்தி
வைத்திருக்கின்றார்கள்
எம்காட்டின் நரர்கள்.
பாட்டியின் வடையை
திருடித் தின்ற காகங்களைப் பற்றி
எமக்கு கவலையில்லை
சிங்கம் தின்றுபோடும்
அசிங்கங்களை அது தின்றுவளர்வதால்
சிங்கமே உலகின்
சிறந்த அரசசெனன
கரைந்து கொண்டடேயிருக்கும்….
அதனால்
அன்புள்ள எருமைகளே
கொஞ்சம் யோசியுங்கள்….!