கொரோனா சூழல் காரணமாக எந்த மத விழாக்களும் நடைபெறவில்லை. மத விழாக்கள் மட்டுமல்ல மக்கள் கூடும் திருமண விழாக்களுக்கே தடை உள்ளது. கிறிஸ்தவ, முஸ்லீம் மத விழாக்களுக்கும் தடை உள்ள நிலையில் விநாயகர் ஊரவலங்களுக்கு மட்டும் அனுமதி வேண்டும் என்று பாஜக் தலைவர் அண்ணாமலை தொடர்ந்து மத ரீதியான மோதலாக விநாயகர் சிலை ஊர்வலத்தை மாற்ற முயல்கிறார்.
மத்திய அரசு கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டிய கட்டாயத்தை வலியுறுத்தி எழுதிய கடிதத்திலேயே பண்டிகைகளுக்கு உரிய கட்டுப்பாடு விதிக்கக் கோரியிருக்கும் நிலையில் அதை நிறைவேற்றும் இடத்தில் இருக்கும் மாநில அரசுக்கு மத ரீதியான நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறார் அண்ணாமலை.
இந்நிலையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் இது பற்றி செய்தியாளர்கள் கேட்ட போது,
“வீட்டிலிருந்தே விநாயகரை வழிபட்டால் அவர்களின் கோரிக்கையை விநாயகர் கட்டாயம் ஏற்றுக்கொள்வார். அரசியல் நடத்துவதற்குப் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. கடவுளை வைத்து அரசியல் நடத்த வேண்டாம் என்று அண்ணாமலைக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.இறைவனை முன்னிறுத்தி அரசியல் செய்து, அதன் வாயிலாகத் தேவையில்லாத சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை உருவாக்குவது, ஒன்றாக வாழுகின்ற மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும். எனவே இதுபோன்ற செயல்களில் அரசியலைக் கொண்டுவர வேண்டாம் என்று மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன்.யாரையும் வழிபட வேண்டாம் என்று சொல்லவில்லை. எல்லோரும் அவர்களின் வீட்டில் இருந்தே சிறப்பாக வழிபடலாம். விநாயகர் வேண்டிய கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவார்” என்றார் சேகர்பாபு.