நாம் தமிழர் கட்சி நிர்வாகியும் தொடர்ந்து இணைய தளத்தில் அவதூறுகளை பரப்பி வந்தவருமான சாட்டை துரைமுருகன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சாட்டை துரைமுருகன் என்பவர் மிக மோசமான அவதூறுகளை இணை தளம், யூ டியூப் உள்ளிட்ட தளங்களில் பரப்பி வந்தார். ஒருமுறை ராஜீவ்காந்தியை நாங்கள்தான் கொன்று புதைத்தோம் என்று ராஜீவ்காந்தி நினைவில்லத்தில் வைத்து பேசி பிரபலம் ஆனார். அரசியல் தலைவர்கள் பற்றி இழிவாக பேசுவது, அவர்கள் வீட்டுப் பெண்கள் பற்றி கொச்சையாக அறுவறுப்பான கருத்துக்களை தெரிவிப்பது என இவர் மீது கடும் நடவடிக்கை வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். ஏற்கனவே இருமுறை கைதாகி ஜாமீனில் வெளிவந்த துரைமுருகன் சமீபத்தில் ஃபாக்ஸ்கான் ஆலை நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கிற்கு எதிராக தொழிலாளர்கள் போராடிய நிலையில், ஃபாக்ஸ் கான் ஆலையில் 9 தொழிலாளர்கள் கொல்லப்பட்டு விட்டதாக வதந்தி பரப்பினார். இதனை நாம் தமிழர் வைரலாக்க பெரும் போராட்டம் வெடித்தது. பல்லாயிரம் தொழிலாளர்கள் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரத்தில் டிச.19 ஆம் தேதி திருச்சி சைபர் கிரைம் போலிசாரால் கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகன் திருவள்ளூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில்,சிறையில் உள்ள சாட்டை துரைமுருகன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில் சாட்டை துரைமுருகன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு அவரை கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை பெண் தொழிலாளர்கள் உடல்நிலை பற்றி வதந்தி பரப்பிய புகாரில் சாட்டை துரைமுருகன் மீது இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.