துபாய் நாட்டில் உள்ள புர்ஜ் கலீபா கட்டிடம் உலகில் மிக உயர்ந்த கட்டிடமாகும். இது 828 மீட்டர்கள் உயரம்
அதாவது 3,280 அடி உயரம் கொண்டிருக்கும். புர்ஜ் கலீபா டவரை விட 568 அடி உயரே அமையும் கிங்டம் டவர் கட்டிடத்தின் தொடக்க கட்டுமான பணிகள் கடந்த டிசம்பரில் தொடங்கின.
தரைக்கு மேலே கட்டிடம் எழுப்புவது தொடர்பான பணிகள் வருகிற ஏப்ரல் 27ந்தேதி தொடங்கும். இந்த கட்டிடம் 63 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு கிலோமீட்டர் உயரத்தில் கட்டப்படும் இந்த கட்டிடம் ஒரு ஹோட்டல், குடியிருப்பு கட்டிடங்கள், ஆடம்பர விடுதிகள் மற்றும் அலுவலகங்கள் ஆகியவற்றை கொண்டிருக்கும்.
இந்த கட்டிடத்தில் 200 தளங்கள் இருக்கும். அவற்றில் 160 தளங்கள் பொது பயன்பாட்டில் இருக்கும். இந்த கிங்டம் டவர் ஆனது கிங்டம் சிட்டியின் ஒரு கட்ட பணியாகும். செங்கடல் துறைமுக நகரத்தின் வடக்கே கட்டப்படும் இந்த கிங்டம் சிட்டியானது 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் உருவாகிறது.
அதில் ஒரு கட்ட பணியாக உருவாகும் கிங்டம் டவரின் கட்டுமான மதிப்பு 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டவரை வடிவமைக்கும் பொறுப்பை அமெரிக்காவின் சிகாகோ
நகரை மையமாக கொண்ட அட்ரியன் ஸ்மித் அண்ட் கார்டன் கில் ஆர்க்கிடெக்சர் நிறுவனம் ஏற்றுள்ளது.
சவுதி அரேபியாவிலும் உலகின் அனைத்து நாடுகளிலும் அபிவிருத்தி, கட்டமைப்புக்களை உருவாக்குதல் என்ற பணிகளை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. ஏகாதிபத்தியங்களில் உள்ளக அபிவிருத்தி என்ற பெயரில் மக்களின் பணத்தைச் சுரண்டிய இந்த நிறுவனங்கள், இப்போது மூன்றாமுலக நாடுகளில் இவற்றை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளன. அபிவிருத்தி என்ற பெயரில் நடைபெறும் இப்பணச் சுரண்டல் நாடுகளை ஏழைகளின் அளவை அதிகரிப்பதில் நிறைவடைகிறது.
கிங்டம் சிட்டியானது 2 சதுர மைல்கள் பரப்பளவில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்படி உருவாக்கப்படும் என்று கடந்த 2008ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது உலகளவிலான நிதி நெருக்கடி உலக சந்தைகளில் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.